Pages

ஊனம்

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

எல்லோரும் வேக, வேகமாக, தங்கள் வேலைகளை முடித்து.... கிளம்பிகொண்டிருந்தார்கள். நானும், குளித்து ரெடியாகி, என்னக்கு தரப்பட்ட துணியுடுத்தி வாசலில் காத்திருந்தேன்....

'ம்ம்... எங்கே போறோமா?' வீட்டில் எல்லோரும் கிண்டி குழந்தைகள் பூங்காக்கு போறோம்.

ஒருவழியாக எல்லாம் சரியாகி, தேர் கிளம்பி தெருமுனை வந்தது... தெருமுனை கடையை பார்த்ததும்...... சாப்பாட்டு இலை வாங்க மறந்ததை, தன் நினைவில் கொண்டு அம்மா என்னை இலை வாங்கிவர அனுப்பினாள். நானும் இலை வாங்கிக் கொண்டு வேகமெடுத்து, அவர்களை பின் தொடர்ந்தேன் பஸ்நிலையம் நோக்கி. எல்லோரும் ராணி மேரி கல்லூரியில் இருந்து 21 நம்பர் பஸ் வரவும் அதில் ஏறினோம். என் மாமாதான் வந்ததிலேயே 'ஆம்பிள்ளை' என்று அவரிடம் டிக்கெட் எடுக்கும் பொறுப்பு விடப்பட்டது, நான் அவரிடம் "எவ்வளவு ஒரு டிக்கெட்?" என்று கேட்டேன் "ஒரு ரூபாய் இருபது பைசா" என்றார்.

'பீச்' ரோட்டில் வேகமாக வந்த பஸ், அடையாறு வழியாக அரைமணி நேரத்தில் கிண்டி வந்து சேர்த்தது. நாங்கள் இறங்கியதில் முழு பஸ்சுமே காலியாகி ஓட்டுனரும் நடத்துனரும் மட்டும் இருக்க...., பஸ் பரிதாபமாக அந்த இடத்தை காலி செய்தது. நான், என் தம்பி இருவரும் கொஞ்சதூரம் ஓடுவதும், பின் எங்கள் குடும்பத்தினரை தொடுவதும், மறுபடியும் ஓடுவதுமாக நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

மாமா மறுபடியும் ஒருமுறை தலைகளை எண்ணினார், மொத்தம் 27 பேர். பின், என் அப்பா கொடுத்த கடிதத்தை நுழைவாயிலில் காட்டினார். பின்னர் டிக்கெட் பரிசோதகர் அதை தனது மேல் அதிகாரியிடம் கொண்டுசென்றார். மேல் அதிகாரி மாமாவிடம் வந்து, "ஓகே சார் நீங்க போகலாம்" என்றார். மாமா என் அம்மாவிடம், "மச்சனுக்கு, ரொம்ப நல்ல மரியாதை இருக்கிறது. மேனேஜர்.. உடனே நம்மை உள்ளே அனுப்பிவிட்டார், பார்த்தியா!" என்றார். (என் அப்பா பூங்கா எதிரில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் அப்பொழுது பணியாற்றிக் கொண்டிருந்தார்.)

நாங்கள்தான் அன்று முதல் ஆளாக உள்ளே சென்றோம். பின்ன, காலை ஐந்து மணிக்கு எழுந்து, குளித்து, எல்லோருக்கும் தேவையானவற்றை சமைத்து 8.30 மணிக்கு, 'டான்' என்று பூங்கா வாசலில் இருந்தோம். அம்மாக்கு ஊஞ்சல் என்றால் ரொம்ப ஆசை, அதனால் ஊஞ்சல் பக்கத்தில் ஒரு மர நிழலில்....., எங்கள் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டோம். யார் எங்கே போனாலும் அந்த இடத்திற்கு வருமாறு அம்மா உத்தரவிட்டாள்.

அம்மா ஒரு ஊஞ்சலைப் பிடித்துக் கொண்டு "இதில் யாருக்கும் இடமில்லை, நான் மட்டுமே ஆடுவேன்" என்றார். என்னை அவருக்கு 'ஆட்டிவிடும்படி கூறினார். நானும் என்னால் முடிந்தளவு வேகமாக ஆட்டினேன், பின் நானும் ஒரு ஊஞ்சலில் கொஞ்சநேரம் ஆடிவிட்டு...., மிருகங்களைப் பார்க்கச சென்றேன். பின் அலைந்த களைப்பில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம்... நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அம்மா ஊஞ்சலை விட்டு இறங்கவில்லை, பின் நாங்கள் சாப்பிட்டவுடன், என்னை, அவள் ஊஞ்சலில் 'ஆட' சொல்லிவிட்டு அம்மா சாப்பிடச் சென்றாள். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை அந்த ஊஞ்சலை யாரிடமும் விட்டுதராமல் பார்த்துக்கொள்ள நான் நியமிக்கப்பட்டேன். இதில் மற்ற ஊஞ்சல் எல்லாம் எங்கள் 'கைவிட்டுப் போய்விட்டதனால்....' இதுஒன்றே எங்கள் வசமிருந்தது. அம்மா விரைவாக சாப்பிட்டு கைகழுவியும், கழுவாமலும்.... ஓடி வந்தாள். பின் நான் மறுபடியும் என் தம்பியுடன் விளையாட சென்றுவிட்டேன்.

மாலை நான்குமணி வாக்கில் யானை சவாரி ஆரம்பமாகும் என்பதனால்..... அதுவரை நான் இந்த ஊஞ்சலை விட்டு எழ மாட்டேன் என்றால். ஐந்து மணி சுமாருக்கு..., நாங்கள் எல்லாம் சவாரி முடித்து வந்தவுடன், அம்மா என்னை ஊஞ்சலை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு யானை சவாரிக்குச் சென்றால்.

நான் அதற்குள் ஒருமுறை சறுக்குமரம் ஏறலாம்......! என்று, என் தன்ம்பியை ஊஞ்சலை பார்த்துக்கொள்ளச் செய்து, சறுக்குமரம் ஏறச் சென்றேன். வந்து பார்த்த போது..... ஊஞ்சலில் யாரோ ஒரு பெண், 'இருபது' வயது மதிக்கத் தக்கவள் ஆறிககொண்டிருந்தாள்...!!!!! நான் மிகவும் ஆத்திரம் வர, அந்த பெண்ணை "ரொம்ப நெஞ்சழுத்தம், எப்படி?? நீ சின்னப்பையனை இறக்கிவிட்டு ஊஞ்சலை அவனிடமிருந்து பிடுங்குவாய்?" என்று ஏகமாக கத்தினேன்.... அதற்குள் அம்மா அங்கிருந்து ஓடிவந்து, அவள் பங்குக்கு அப்பெண்ணை கொஞ்சம் திட்டித் தீர்த்தாள். அதற்குள் அவள் ஏழுந்துக் கொண்டாள்.

அம்மா ஊஞ்சல் மறுபடி கிடைத்த சந்தோஷத்தில், ஓடிச்சென்று அமர்ந்துக் கொண்டாள். அப்பொழுது, அந்த பெண் "ஆன்டி, ரொம்ப 'தேங்க்ஸ்', நாங்கள் கோயம்பத்தூரில் இருந்து வந்திருக்கிறோம், இப்பொழுது திரும்பிப் போறோம் , அதனால்தான்..... உங்க சின்னப் பையனிடம் கேட்டு, ஒரு ஆட்டம் ஆடினேன், ரொம்ப 'தேங்க்ஸ்'" என்று புன்னகைத்துவிட்டு நடக்கலானாள்...... ஒரு கால் சற்று தாங்கித், தாங்கி.... என் அம்மாவும் நானும் ஊமையாய் நின்றோம்...... மனதில் ஊனத்துடன்.


இன்று எங்கள் வீட்டில் ஊஞ்சல் உண்டென்றாலும்.....! அம்மா, ஊஞ்சல் ஆடுவதில்லை, அன்றிலிருந்து............ ;
 

Blogger