Pages

கொலுசின் மெல்லிசை


ஆதி தொட்டே பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளுதல் என்பது இருந்திருக்கிறது. எத்தனையோ அணிகலன்கள் இருந்தாலும், கால் கொலுசு தனித்தே இருக்கிறது. எகிப்தியர்கள் கொலுசு அணிந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. தமிழர்களின் அழகியலில் பொதுவாகவே ஆபரணங்கள் சிறப்பிடத்தை பெற்றிருக்கின்றன. நகைகளை ஆக்குவதும், அழித்து வேறு புது மாதிரி செய்யும் பழக்கம் இன்றும் பெண்களிடம் இருக்கிறது. சில காலம் வரை ஆண்களும் காலில் தண்டைமாதிரி ஒன்றை அணிந்திருந்தார்கள், நாளடைவில் அது மாறிப்போனது.

பொதுவாக கொலுசு மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு என்று வகைப்படும். மயில், வண்ணத்துப்பூச்சி, அன்னம் போன்றவற்றையும் அதில் வேலைப்பாடுடன் பதிந்து செய்யப்பட்டன. முதலில் திருமண அடையாளமாய் கொலுசு அணியப்பட்டது, நாளடைவில் அது ஒரு நிரந்தர அணிகலனாய் பெண்மையை அழகுபடுத்தியது. பிறந்த பிள்ளைகளுக்கும் காலில் தண்டை, கொலுசு அணிவது வழக்கமாக இருந்து வந்தது. குழந்தை தவழும்போதோ தத்தி தத்தி நடக்கும்போதோ எழும் ஓசை வீட்டில் உள்ளோர்களை உளமகிழச்செய்யும்.

கொலுசு ஒன்றே காவலனாகவும், கருங்காலியாகவும் அறியப்படக் கூடிய அணிகலன். கொலுசு காப்பாற்றிய கதைகளும் நிறைய, காட்டிக் கொடுத்த கதைகளும் நிறைய. நான் காதலனாய் இருந்த போது முதலில் என் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த பரிசு கொலுசுதான். அவள் பர்தா அணியும் வழக்கம் கொண்டிருந்தாள், கல்லூரி முற்றிலும் கருப்பு அங்கி அணிந்தே எல்லோரும் திரிந்த வேளையில், என் மனைவியை தனித்து அடையாளம் காணவே அதை (அப்போதைய என் வருமானமும் அதற்க்கு ஒரு காரணம்) பரிசளித்தேன்.

பொதுவாக வெள்ளியில் கொலுசு அணியப்படுகிறது, வசதியிருப்பின் தங்கத்திலும் அணியப்படுகிறது. விழாக்கால, விசேஷ நாட்களில் மருதாணி வைக்கும்போது காலைச் சுத்தி கொளுசுபோல் வித விதமான வடிவங்கள் பெண்கள் வரைவதுண்டு. சிலருக்கு தொடர்ச்சியாக கொலுசு அணித்திருந்ததில் அந்த இடம் கருப்பாக மாறியிருக்கும்.

புராணங்களும், காப்பியங்களும் பெண்களை கொளுசுடனேயே உருவகப் படுத்தி வந்திருக்கிறது. முன் காலத்தில் பெண்கள் பிற ஆடவர் முன் வராமல் இருந்த பொது, கொலுசின் சங்கேத ஒலி மூலம் தத்தமது துணைக்கு தம் கருத்தை உணர்த்தி வந்தார்கள். நிறைய முத்து உள்ள கொலுசில் இருந்து வரும் ஓசையை வைத்தே பெண்ணின் மனநிலையையும் தேவையையும் அறிந்து கொள்ளலாம்.

நாங்கள் கூட்டுக் குடும்பம் என்பதால் என் அப்பா மூன்று வளர்ந்த பெரிய தம்பிகள், என் மனைவியின் கொலுசு சத்தத்தை வைத்தே தங்கள் நிலை மறந்திருப்பினும், உடனடியாக சீர் படுத்திக் கொள்வர். இப்படி கூட்டுக் குடும்பத்தில் உள்ள சில அசவ்கர்யங்கள் தவிர்க்கப் பட்டது.

சினிமாவிலும் நிறைய கொலுசு பாடல்கள், காட்சிகள் இருக்கிறது. காதல் ஓவியம் படத்தில் கொலுசு ஒரு முக்கிய பாத்திரம், நாயகியைவிட அதிக காட்சிகளையும், அபிநயத்தையும் கொண்டிருந்தது. கொலுசு குடும்பத்தைச் சேர்ந்த கால் சிலம்புக்காக மதுரையே எரிந்ததே வரலாறு.

இஸ்லாம் பெண்கள் வீட்டில் இருக்கும்போது என்னவிதமாக வேண்டுமானாலும் கொலுசு போட்டுக் கொள்ளலாம் ஆனால் பிற ஆடவர்கள் முன் ஓசை இல்லாத கொலுசு பயன் படுத்த வேண்டும் என்றும் கூறப் பட்டிருக்கிறது.

கலவியில், மல்லிக்கு அடுத்து கொலுசு சத்தம் அழைப்பு மணியாய் இருக்கிறது.

பேய் உருவாகப் படுத்தலிலும் கொலுசு முக்கிய பங்கு வகிக்கிறது. பேய் வருவதற்கான அறிகுறி 'ஜல்' 'ஜல்' சத்தமே. இரவில் தனியாகப் படுத்திருக்கும் போது எங்கேனும் இச்சத்தத்தை கேட்க நேர்ந்தால் பயப் பந்து கவ்வுவது சர்வ நிச்சயம்.

பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.

உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.

சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்.

இன்று கால்களை அழகுபடுத்த நிறைய விஷயங்கள் வந்துவிட்டாலும், கொலுசுக்கு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது.
;
 

Blogger