Pages

கடவுளே நீ என; கண்டுணர்ந்தவன் நான்....!!!




என் உலகம் உதித்தது
உன் உறவைப் பற்றி;
என் வாழ்க்கை முழுதும்,
வருவேன் உன்னைச் சுற்றி.

ஊர் பல சுற்றி,
உணவு பல உண்டாலும்,
உன் உதிரத்தால் 'பால்'ஆன
சுவைக்கேது ஈடு!!

மஞ்சனைகளும், பஞ்சனைகளும்
பல ரகத்தில் உண்டு;
உன் மடி தரும் சுகம் - அது
கடந்திடும் பல யுகம்.

காப்பியங்களும், காவியங்களும்
தேடித், தேடி வாசித்தேன்.....
உன் ஒற்றை வரி,
கடிதம் போல்....
ஒன்றையும் காணேன்

இசைக்கு ராஜா பலர்
இங்கே உளர்.
"ஏய்.......ய் ராஜா...." என்று
நீ என்னை அழைக்கையில்.....
அதற்க்கேது நிகர்.

நோய் பிணி நீங்க
வாய் வழி மருந்து நூறு
நீ தரும் இஞ்சிச் சாறு;
அதை ஓட்டிடும் தூர.

தொலைவில் இருந்தால்,
தொடர்பு வழி கோடி.
உன் தொப்புள்கோடி ஒன்றுதான்;
இதுக்கெல்லாம் முன்னோடி.

திரைகடலோடி நான்
சேர்த்தைவைகள் துச்சம்.
உன் புன்னைகைதானே,
இதிலெல்லாம் உச்சம்!!!

கடவுளையே எனக்கு,
காட்டியவள் நீ!;
கடவுளே நீ என;
கண்டுணர்ந்தவன் நான்....!!!
;

அரவான் என் பார்வை

வேம்பூர் என்னும் பெயர் ஏற்கனவே 'எஸ்ரா'வின் "நெடுங்குருதி" என்னும் நாவலில் எடுத்தாண்ட ஊருதான். அந்த நாவலில் அந்த ஊரின் வெம்மையையும், அம்மக்களின் வாழ்வையும் கதையோட்டத்திலேயே சொல்லியிருப்பார் 'எஸ்ரா'. கள்ளர்களின் வாழ்வியலைப் பதிவு செய்தது பாராட்டத்தக்கது. எல்லா புராண படங்களும் ராஜாக்களின் வாழ்க்கையே கொண்டிருக்கவேண்டும் என்ற பழம் சினிமா விதியை அனாயாசமாக உடைத்தெரிந்ததற்கு வசந்த பாலனை மனந்திறந்து பாராட்டலாம்.


பசுபதி மற்றும் ஆதியின் நடிப்பு பெரிய பலம் அந்த உடற்கட்டும் கருந்தேகமும் நம் முன்னோர்களை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். ஆதி தன் வரலாற்றில் பதிக்க வேண்டிய பதிவு. பசுபதி 'ஏன்னா நடிப்புடா..?' தமிழ் சினிமா சரியாக பயன் படுத்தாத நடிகர்களில் பசுபதியும் ஒருவர் என்பதை அரவானுக்கு பிறகு அடித்துக் கூறலாம்.


திரு சு.வெங்கடேசனின் சமீபத்திய சரித்திர நாவலான "காவல் கோட்டம்" என்ற நாவலில் வரும் ஒரு பகுதியை கொண்டு இந்த படம் வடிவமைத்ருப்பதாக அறிகிறோம். படத்திற்கு வசனமும் கதையும் இவரே.

"அறுத்துதான் கொல்லணும்னு இல்ல வெதச்சும் கொள்ளலாம்" போன்ற வசனம் கவனத்தை ஈர்க்கின்றன.

சரித்திரப் படம் அதிலும் ஒரு சமூகத்தைச் சொல்லும் படம் என்பதால் வட்டார வழக்குகள் அதிகம் எடுத்தாண்டிருக்கிறார்கள். அதில்தான் சிக்கலே தமிழுக்கே சப்டைட்டில் போடவேண்டிய அவசியம் இருக்கிறது.


கலை இயக்குனர், ஒளிப்பதிவாளரின் திறமை படமெங்கும் மிளிர்கிறது. இசையமைப்பாளர் கார்த்திக் (பின்னணிப் பாடகர்) பாடல்களில் தெரியும் அளவுக்கு பின்னணி இசையில் தெரியவில்லை முதல் படமே சரித்திரப் பின்னணி கொண்ட படமென்பதால் நிச்சயம் நிறைய உழைத்திருக்கிறார் ஆனால் பின்னணி இசையில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம். அடுத்தடுத்த படங்களில் இதனை வெகு எளிதாக எட்டிப் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.


நேர்த்தியாக நெய்யப்பட்ட படமென்றாலும் சில சினிமாத்தனங்கள் தவிர்த்திருக்கலாம், சிலுவை சுமப்பதுபோல உள்ள கடைசி காட்சி, நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் பூப்பதர்க்கான தருனகளை சரிவர சொல்லாதது என சில இருந்தாலும் இது தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு கலைப் படைப்பு என்பதை மறுப்பதற்கில்லை.


ஊடகங்களும், வலைப்பூக்களும் படம் ஆஹா ஓஹோ என்று புகழ்கின்றன ஆனால் இது அடித்தட்டு மக்களை போயிச் சேருமா என்பது சந்தேகமே. பல வசனங்கள் புரியவில்லை என்னும் பேச்சு பரவலாக கேட்கிறது. இலக்கிய தரத்தில் ஒரு படம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் இது பாமரனையும் சென்று சேர வேண்டும் என்பதே என் அவா.
;
 

Blogger