Pages

சர்வம் - விமர்சனம்

சர்வம்

நடிகர்கள் : ஆர்யா, த்ரிஷா, சக்கரவர்த்தி, இந்த்ரஜித் மற்றும் பலர்.
இசை : யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு : கிருஷ்ணமூர்த்தி + அருண்பாண்டியன்
ஒளிப்பதிவு : நீரவ்ஷா
கதை + திரைகதை + இயக்கம் : விஷ்ணுவர்த்தன்

விஷ்ணுவர்தனின் முந்தய படங்களின் பாதிப்பில் ரொம்ப எதிர்ப்பார்ப்பில் போய் பார்த்தேன் சற்று ஏமாற்றமே!! நான் கடவுளுக்குப் பிறகு ஆர்யாவுக்கும் கண்டிப்பாக ஒரு ஹிட் தேவையான நேரத்தில் ஏற்கனவே ஆர்யாவை வைத்து அதை வெற்றியாவும் ஆக்கிய விஷ்ணுவர்தன் ஆர்யாவுடன் இணைந்திருக்கும் படம்.

கதை தமிழுக்கு புதுசு, ஆனால் கையாடலில் சற்று தடுமாறியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆர்யாவின் காதலி திரிஷா ஒரு விபத்தில் இறந்து போக அவரது இதயத்தை ஒரு சிறுவனுக்கு வைக்கிறார்கள் அந்த சிறுவனை கொலை செய்ய துரத்தும் சக்கரவர்த்தியிடம் இருந்து அந்த பையனைக் மீட்பதுதான்.

சக்கரவர்த்தியிடம் அந்த பயம், கொருரம் கண்ணில் தெரிகிறது ஆனால் தன் மனைவியும் சேர்ந்து இறந்தும் மகனை மட்டுமே நினைத்து ஏங்கும் பாத்திரத்தில் மிக கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்.

பாடல்கள் எல்லாமே கேட்கும் விதமாக உள்ளது, பின்னணி இசையும் வழக்கம்ப்போல் பின்னிட்டீங்க!!

நீரவ்ஷா கேமிரா கோணங்கள், லைட்டிங் அற்புதம், குறிப்பாக பாடல் கட்சிகளில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்உடன் இணைந்து பிரித்துப் பார்க்கமுடியாதவையாக இருக்கிறது.

சர்வம் விஷ்ணுமயம்!!
;

மரியாதை - விமர்சனம்

விஜயகாந்த் இந்த பாராளுமன்ற தேர்தலில் ஏன் தோற்றார் என்றால் : மரியாதை

நேற்று மரியாதை படம் பார்த்தேன்.
நடிகர்கள் : விஜயகாந்த், மீரா ஜாஸ்மின், அம்பிகா, மீனா, ரமேஷ் கண்ணா, நிழல்கள் ரவி, அம்மு ரவிச்சந்திரன், ஷன்முகராஜன், சம்பத், ஹரிராஜ், தலைவாசல் விஜய், மற்றும் பலர்.

இசை : விஜய் ஆண்டனி
தயாரிப்பு : ரி.சிவா
கதை+திரைக்கதை+வசனம்+இயக்கம் = விக்ரமன்

இடைவேளை வரை கதை என்பதே இல்லை என்பதுபோல் ஓர் பிரமை . அதுவரை சின்ன சின்ன காமடி என்ற பேரில் மொக்கையான காமடிகள் உ.ம: அம்பிகா கோதுமை அல்வா செய்ய எத்தனித்து அது கல்லு மாதிரி ஆகி அதை வைத்து சுவற்றில் ஆணி அடிப்பது என்ற பழைய தூசியோடு உள்ள காமடி காட்சி. இதுபோல் அங்கங்கே நிறைய காமடிகள்.

விஜயகாந்த் இந்த படத்தை தேர்வு செய்யும் போதே அவரை சுற்றி இருந்தவர்கள் அவரை எச்சரித்தார்களாம் இருந்தும் அவர் இந்த படத்தில் நடித்தார் என்றால் அவருக்கு என்ன ஒரு நம்பிக்கை விக்ரமன் மேல் இருந்திர்க்கும் ஆனால் அந்த நம்பிக்கையை அவர் படத்தில் உள்ள அல்வாவைப் போல் பெரிய பாறாங்கல்லைக் கொண்டு தூள் தூளாக்கியிருக்கிறார்.

ஆமா கதை என்ன என்பதை நான் சொல்லவே இல்லையே நீங்கள் ஏற்கனவே பார்த்த விக்ரமன் கதைதான் அவரின் சூரியவம்சம், உன்னை நினைத்து, பூவே உனக்காக, கோகுலம் போன்ற படங்களையே திரும்பப் பார்த்தா மாதிரி இருக்கு. இந்த கதை கேட்கும் போதே விஜயகாந்த் யோசித்திருக்க வேண்டும் விதி யாரை விட்டது

இன்று தமிழ் சினிமா வேறு எங்கோ ஒரு புதிய பாதையில் போகின்றது சுப்ரமணிய புறம், வெண்ணிலா கபடி குழு, பசங்க, போன்ற நியூ டைமன்சன் படங்களால் புது ரத்தம் பாய்ச்சியது போல் இருக்கு ஆனால் இன்னும் இந்த தனது பழைய பார்முலாவால் அவர் ஒட்டு மொத்த குழுவையும் அதல பாதாளத்தில் தள்ளி உள்ளார்.

ஒரு மகன்: அவனை ஒருத்தி ஏமாற்றி விடுகிறாள் : மறுபடி அவனுக்கு ஒரு காதலி அவள் அவர்கள் வீட்டுக்கு இழந்த அனைத்தையும் மீட்டுத்தருகிறாள்.


படத்தில் ஒரு வசனம்
அம்பிகா : எப்படிங்க நல்ல இல்லாத என் சமையலை இத்தனை நாளா சகிச்சிக்கிட்டீங்க

விஜயகாந்த் : நல்ல சாப்பாடு சாப்பிடனும்னா வேலைக்காரியே போதும். மனைவி என்பவள் ஒரு ஆசிரியராய், ஆசானாய், தாயாய் என்று பல பரிணாமம் கொண்டவள் என்பது போல் சொல்வார்.

ஆனால் இந்த படத்தை நேத்து நைட் ஷோ என் மனைவியையும் கூட்டிக் கொண்டு போனதில் அவள் ராட்சசியானால்.

மரியாதை ஒரு வேற்று மாயை!!! ;

நாட்டுக்கொரு நல்ல சேதி.....

விவேக் ஒரு படத்தில்.......

"டேய்..... ஏண்டா இன்னும் இந்த ரோஸையே கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு காலிபிளவர், அல்லது வாழைப்பூ கொண்டு போனால் அந்த 'பிகர்' இல்லாட்டி அவள் அம்மா...... என்று நிறுத்தி, அவள் அம்மா அதை சமையலுக்கு உஸ் பண்ணுவார்" என்பார். இப்படி நிறைய கொச்சை அர்த்த டயலொக் பேசிப், பேசியே அவர் ஜனாதிபதி அவர்ட் வாங்கிவிட்டார்.

இப்பொழுது நாம் பேசப்போகும் விஷயம், அவர் அவர்ட் வாங்கியது இல்லை, அந்தப் படத்தில் அவர் பேசிய வசனம். இது எவ்வளவு வக்கிரமான எண்ண அலைகளை பார்ப்பவர் மனதில் வீசும் என்பதுதான். இதை காமடி என்ற பெயரில் எல்லா தொல்லைக்காட்சிகளும் பலமுறை நம் வீட்டு வரவேற்பறைக்கே பரிமாறுகின்றன.

இன்று வெர்ஜின் மொபைல் விளம்பரம் ஒன்று,

அழகான வாலிபன், ஒரு வீட்டுக் கதவைத் தட்டுகிறான்...., ஒரு ஆன்டி தன் பிள்ளைகளிடம் ஏதோ பேசிக் கொண்டே, கதவைத் திறக்கிறார்....

அந்த வாலிபன் தன் கையில் இருக்கும் ஒத்தை ரோஜாவை, அந்த ஆன்டி இடம் கொடுத்து, "ஹாப்பி பர்த்டே 'அவள் பேரை சொல்லி சற்று............ இடைவெளி விட்டு' ஆன்டி" என்கிறான்.

பின் அங்கிள் இன்றும் ஊருக்குச் சென்றுவிட்டாரா?" என்று கேட்டுக் கொண்டே (அப்பொழுது பின்னால் அந்த அன்த்யும் அவள் கணவனும் இருக்கும் போடோ

"டேட் இல்லையா?" என்கிறான்

அதற்க்கு அந்த ஆன்டி "என்னுடன் எல்லாம் யார் டேட்க்கு வருவார்கள்?" (இப்படி ஒரு ஆன்டி நமக்கு இல்லையே என்கிற ஆற்றாமை) என்கிறாள்.

அலமாரியில் உள்ள CD ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே, அவள் ஒவ்வொரு CD எடுக்கும் போதும், இவன் தன் மொபைலில் இருந்து அவளுக்கு பிடித்தப் பாட்டைப் போடுகிறான் (அதில் ருக்குமணி ருக்குமணி, அக்கம் பக்கம் என்ன சத்தம் என்கிற பாடலும் அடக்கம்) போட்டுக்கொண்டே.........

"ஏன் நானில்லையா? உங்களுடன் பார்டிக்கு வருவதற்கு" என்கிறான்

"நீயா? நீ ரொம்ப நாட்டி" என்று ஆன்டி திரும்பும் போது அவள் மார்பு ஓட்டும் தூரத்தில் அவன் நிற்கிறான்

உடனே இரண்டு டிக்கெட்டைக் காட்டி "பிக்சருக்கு போலாமா?" என்கிறான்

அந்த நேரத்தில் அந்த ஆன்டி இன் மகள் வந்து "அம்மா!!!" என்கிறாள்

அவளைக்கண்டதும் ஆன்டி "ஏன் நீ 'மகள் பேரைச் சொல்லி' அவளுடன் போயேன் (என்னே ஒரு கலைத் தாய்!! இப்படி ஒரு தாய் எல்லோருக்கும் வேண்டும் என்று தவமிருக்க வேண்டும் தன் மகளை வேசியாக்கத் துடித்தத் தாய்!!!) என்கிறாள்.

எவ்வளவு வக்கிரமான ஓர் எண்ணம் இந்த விளம்பரத்தை தினமும் குறைந்தது 50 முறையாவது எல்லா தொல்லைக்காட்சிகளும் ஒளிபரப்புகின்றன. யாருக்குமே ஒரு சமுதாயப் பார்வை இல்லை. இன்று நம் நேரத்தில் முக்கால்வாசியை தொலைக்காட்சிகளே விழுங்கி விடுகின்றன. அப்படி இருக்கும் போது தொலைக்காட்சி விளம்பரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த மீடியா. அதில் இதுமாதிரி வக்கிரமான எண்ணங்களை விதைத்தால், அது ஒரு மோசமான கலாச்சார சீரழிவையே ஏற்படுத்தும்.

கமல், அன்பே சிவம் என்னும் படனத்தில் மாதவனை (அப்படத்தில் மாதவன் ஒரு விளம்பரப் படம் எடுப்பவர்) வெளிநாட்டுக்காரன் பொருட்களை கூவிக், கூவி விற்கும் கூலி என்று சொல்லுவார். ஆனால் அவரின் மகள், ஒரு ஐஸ் விளம்பரந்த்தில், ஒருவன் அவரிடம் தன் காதலை சொல்லுவது போல் நடித்திருப்பார் (ஊருக்குத்தான் உபதேசம் போலும்). விஜய் கோக் விளம்பரத்தில் வந்து எல்லாத் தோழனையும் கோக் குடிக்கச் சொல்லுகிறார் (கோக் மீதான குற்றச் சாட்டு இன்னும் தீர்க்கப்படவில்லை) இவர்களுக்கெல்லாம் புலிகேசி தண்டனைதான் சரி.

விளம்பரத் தயாரிப்பென்பது, நிறையப் பேருக்கு வேலைத் தருகிறது. ஒரு விளம்பரத்தை உருவாக்க கலை இயக்குனர், அரங்க அமைப்பாளர், ஒலி, ஒலி அமைப்பாளர், இவர்களை எல்லாம் இயக்கும் இயக்குனர், நடிகர்கள், இசையமைப்பாளர், இசைக் கோர்பாளர் என்று அது ஒரு பெரிய தொழிற்சாலை, நிறையப் பேருக்கு 'படி' அளக்கிறது. இத்தனை நிலைகளைத் தாண்டியும், இதுபோல் வக்கிரமான எண்ணங்கள் வெளிவருமானால்... அது வக்கிரம் என்பதை நம் மனது அங்கீகரிக்காதையே காட்டுகிறது. நம் மனது இதுபோல் அரக்க எண்ணங்களால் புரையோடியிருப்பதே இதற்குக் காரணம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், அதில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கும் தணிக்கை செய்வதற்கான நேரம் இதுதான் நாம் தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் ஒரு நஞ்சு விதை முளைக்கிறது என்பதை உணர்ந்து துரிதகதியில் உரியவர்கள் செயல்பட்டால் நாளைய சமுதாயம் காக்கப்படும்.

நாம் நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் சமுதாய சூழ்நிலைகளே அவர்களின் மிகப் பெரிய சொத்து. நல்லதை விதைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நஞ்சை விதைக்காமல் இருந்தால் போதும்.

கலாசார காவலர்களே!!! பப்புக்குச்செல்வதை நிறுத்தி, இதுபோல் நம் வாழ்வியலை சிதப்பவர்களை களைஎடுங்கள்.

இதில் சில நல்ல விளம்பரங்களும் வருகின்றன , Vodofone பொம்மைகள் விளம்பரம், ஹவெல்ஸ் வயர் விளம்பரம், 'செக்கச்லோவாக்கிய' என்று சொல்லும் அந்த குழந்தை விளம்பரம், என்று வெகு சிலவே ரசிக்கும்படி இருக்கிறது. இவைதவிர்த்து, எல்லா விளம்பரமும் பெண்ணை எப்படி கவர்வது, பெண்ணிடம் எப்படி காதலைச் சொல்வது என்பனவையே. எல்லாமே ஒரு பொய்யான மாயையை தோற்றுவிக்கின்றன. என்னமோ இவர்கள் பொருளை உபயோகிக்கவில்லை என்றால் உலகில் பெண்களோ, ஆண்களோ காதலிக்கவே முடியாது, வெள்ளைதான் அழகு, இந்த பானத்தைக் குடிக்காத பிள்ளைகள் அறிவில்லாமல் போகும் என்று ஒரு போய்த் திரையை எல்லோர் முன்னாடியும் வைக்கின்றன.

என் அப்பன் பாட்டன் காதலிக்கவில்லையா, கல்யாணம்தான் கட்டிக் கொள்ளவில்லையா? ஆதலினால் உலகத்தீரே!!! பஜார்ல உஜ்ஜாரா இல்லன்னா நம்ம நிஜார.....

"திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!!"

;

என் நெஞ்சே... என்னைச் சுடும்

"டேய்.... ஜிக்கான், உங்கப்பா வராரு" என்றான் மணி
"வரட்டும், இன்று வெள்ளிக்கிழமை அதனால் அவர் வருகிறார்" என்றேன் "நீபோய் பாக்கலையா?"
"அப்புறம் பாத்துக்கலாம்" என்று சொல்லி, எங்கள் ஐஸ் பாய் விளையாட்டைத் தொடர்ந்தோம். இரவு பத்துமணி சுமாருக்கு, என் சித்தி வந்து எங்களை அடித்து இழுத்துச் செல்லும்வரை, தெருவில்தான் இருந்தோம்.

இதுதான் வாடிக்கை, யாருக்காகவும், எதுக்காகவும் நாங்கள், எங்கள் விளையாட்டை நிறுத்தியதில்லை. ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கு, ஒவ்வொரு விளையாட்டு, இது எல்லாமே நேரம், காலம், வானிலை ஆகியனவற்றுக்குத் தகுந்தாமாதிரி விளையாடுவோம். பொதுவாக இரவில் ஐஸ் பாய்தான் விளையாடுவோம்.

"அப்பா!! எப்போ வந்தீங்க?"
"நா வந்து ரொம்ப நேரம் ஆச்சு, எப்படி கருத்துப்போய் இருக்கனுங்க பார்" என்றார் அப்பா
"ஆமா!!!, எங்கே நம்ம பேச்சைக் கேகுரானுக, பொழுதன்னிக்கும் வெயிலில் ஆட்டம்"

"நாமெல்லாம் சென்னைக்கு போகிறோம்" என்று அப்பா சொன்னதுதான் தாமதம்
"நான் வரமாட்டேன்" என்று சொன்னேன். தம்பியும் என்னுடன் சேர்ந்துக் கொண்டான்.
"ஏன் ?" என்று அப்பா கேட்டார்.
"இல்லை, இங்கேதான் என் பிரெண்ட்ஸ் இருக்கிறார்கள். நான் வரமாட்டேன்." "இல்லை கண்ணா, அப்பாக்கு சென்னைக்கு மாற்றலாகிவிட்டது . இங்கிருந்து அப்பாவால் ஆபிஸ் போய்வர முடியவில்லை, அப்பாவை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. அவருக்கு யார் சாப்பாடு போடுறது?" இது அம்மா "வேணுமென்றால், அப்பாவை வெளியில் சாப்பிடச் சொல்லு" என்றேன்

அப்பா கடுப்பாகி "உங்களுக்கெல்லாம், பார்க்கமுடியாது... நாம அடுத்தமாதம் சென்னைக்குப் போகிறோம். உனக்கும் தம்பிக்கும் ஸ்கூல் கூட பார்த்தாகிவிட்டது. "

மறுப்புக்கு காரணம், இங்கே எங்களுக்கு நிறைய நண்பர்கள், காலை எழுந்ததுமுதல் இரவு தூங்கப்போவது வரை, விளையாட நிறைய விளையாட்டுகள். கால் சட்டை மட்டுமே அணிந்து ஊரெல்லாம் சுற்றுவோம். கில்லி, நாடுபிடி ஆட்டம், கபடி, கையெறி பந்து, திருடன் போலீஸ், காற்றாடி விடுதல், ஓனான் பிடித்து கயிறு கட்டி விளையாடுதல், பஸ் விளையாட்டு, சினிமா படம் காட்டுதல், உமி மலையில் சறுக்குதல், வேர்கடலை பறித்துச் சாப்பிடித்தல், பம்புசெட்டில் குளிப்பது, பனங்காயில் வண்டிசெய்து விளையாடுதல், தட்டான் பிடிப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

"ச்சே இந்த அப்பாக்கு ஏன்தான் இப்படி ஒரு வேலையோ?" என்றான் தம்பி "அப்படியே இருந்தாலும்...., இவரால் இங்கிருந்தும் போக முடியாதாம்? அங்கேயும் தனியாக இருக்கமுடியாதம்? என்ன அநியாயம்? அதற்காக நம்மளை அவருடன் கூட்டிக் கொண்டுபோவது ஒத்துக் கொள்ளக் கூடாது. இவருக்கு சோறாக்கிப் போட மட்டும்தான் அம்மா இருங்காங்களா ?" "இல்லடா, இந்த அம்மாக்குத்தான் அறிவே இல்லை. அப்பா கூப்பிட்டா போயிடறதா? நம்ம மேல யாருக்குமே அக்கறை இல்லை. நமக்கு ஏன்தான் இப்படி ஒரு அப்பாவோ ?" என்றான் தம்பி. இரவு தூங்க வெகு நேரம் பிடித்தது. நானும் தம்பியும் எப்படி ஊருக்குப் போகாமல் தப்பிப்பது என்று திட்டம் தீட்டினோம்.

மறுநாள் வழக்கம்போல் காலையிலேயே விளையாடச் சென்று விட்டோம். இரவு நடந்தது எதுவும் எங்கள் நினைவில் இல்லை. உச்சி வெய்யிலில், பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது, தம்பிதான் அதை கணேஷிடம் "நாங்கல்லாம் ஊருக்குப் போறோமாம், இனிமே அங்கேதான் இருப்போம். எங்களுக்கு புது ஸ்கூல் கூட பார்த்தாயிற்று" என்றான் இதைக் கெட்ட எல்லோருக்கும் அதிர்ச்சி!!! யாராலும் இந்த அதிர்வைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

என்னென்னமோ ஐடியாவெல்லாம் ஆளாளுக்குச் சொன்னார்கள். அதில் எங்கப்பாவை 'அரளிவிதை' அரைத்துக் கொல்வதுவரை. எங்களுக்குத் தெரிந்த எல்லா கோயிலுக்கும் சென்று வேண்டினோம், 'தர்கா' சென்று பாத்தியா செய்தோம். ஆனால் ஒன்றும் பலிக்காமல், எங்களை கூட்டிக் கொண்டு ஊருக்கு கிளம்பினார்கள் எங்களை வழியனுப்ப ஒரு பட்டாளமே வந்தது. ஒவ்வொருவரிடமும் விடைப் பெற்றுக் கிளம்ப வெகு நேரம் பிடித்தது. நானும் தம்பியும் திண்ணையில் இருந்த துணைப் பிடித்துக் கொண்டோம், ஐந்தாறு பேர் சேர்ந்து எங்களை அப்படியே குண்டுக்கட்டாகத் தூக்கி வண்டியில் ஏற்றினார்கள், அப்படியும் தம்பி ஓரிரு முறை வண்டியில் இருந்து குதித்தான். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை.

காஞ்சியில் இருந்து சென்னைக்கு வரும்வரை, நானும் தம்பியும் அழுதுக் கொண்டே வந்தோம். அப்பா எங்களுக்காக பார்த்துவைத்த வாடகை வீடு வந்ததும் எல்லோரும் இறங்கினோம். ஒரு வாரம் வரை சாப்பிட மறுப்பது, ஏதாவது சொன்னால் செய்யாமல் இருப்பது என்று எங்களுக்குத் தெரிந்த எல்லா தர்ணா போராட்டமும் செய்தோம். பின்னர், எங்களை புது ஸ்கூல் சேர்த்தார்கள். எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள், தம்பி அப்பாவிடம் "ஏம்ப்பா அவர்கள் எல்லோரும் இங்கலீஷ் போசுறாங்க, அவங்க எல்லாம் இங்கலிஷ்காரங்களா ?" என்றான்
"இல்லை!, இங்கே எல்லோரும் இங்கலீஷ்தான் பேசவேண்டும்" என்றார்.

பின், மாலை வீடு வந்ததும் எங்கள் தெரு நண்பர்களை, எங்களுக்கு அறிமுகப் படுத்தி "இவர்களையும் உங்களுடன் விளையாடச் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றார் என் அப்பா. நான் சற்று உயரமானவனிடம் கேட்டேன் "என்ன விளையாடுகிறீர்கள்?" "கிரிக்கெட் " என்றான், "உனக்கு கிரிகெட் விளையாடத் தெரியுமா?" என்றான் "தெரியாது!" என்றேன் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, ஒப்புக்குச் சப்பாணியாக என்னையும் தம்பியையும் சேர்த்துக் கொண்டார்கள். கொஞ்சநாள் பிடித்தது இந்த கிரிக்கெட்ஐக் கற்றுக்கொள்ள.

அப்பா தம்பியிடம் ஒருநாள், "என்ன இந்த ஊர் நண்பர்கள் எல்லாம் பிடித்துவிட்டதா?" "ஆங்... ஆனால்.... இந்த ஊர் விளையாட்டுத்தான் ரொம்ப போர்ப்பா, இவர்களுக்குத் தெரிந்த ஒரே விளையாட்டு கிரிக்கெட், அதை விட்டால் இவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்றான் அப்பா "நம்ம ஊரில் நிறைய வயல் வெளி இருக்கு, இங்கே அப்படி இல்லை, அதனால்தான் இப்படி" என்றார். ஆனாலும் எனக்கும் தம்பிக்கும் ஊர்போல் வரவில்லை, எப்படா லீவ் விடுவார்கள் ஊருக்குப் போலாம் என்று நாட்கள் போகும். இப்படியே இருந்து படித்து இன்று திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் எனக்கு.

இருபது வருடம் கழித்து இன்று..........

என் மனைவியை துரிதப் படுத்தினேன் இன்னும் இரண்டுமணி நேரத்தில், நாங்கள் ஏர்ப்போர்ட் செல்லவேண்டும். என் பிள்ளைகள் இருவரும் அவர்களுக்குள்ளாகவே wwf cards வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். என் தந்தை என் அருகில் வந்து "நீ கண்டிப்பாக மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டுதான் போக வேண்டுமா?, பல்வேறு மொழி பேசுபவர்கள் இருப்பார்கள், பிள்ளைகளுக்கு கொஞ்ச கஷ்டமாக இருக்கும்" என்றார். "அப்பா உங்களுக்குத் தெரியாதது இல்லை, ஒரு மனைவியாய் எனக்கு சமைத்துப் போட, என் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள மட்டுமின்றி, அவளின் தேவை எனக்கு இயற்கையின் நியதி"என்றேன் "அப்புறம் உன் இஷ்டம்" என்றார்.

என் பிள்ளைகள் தங்களுக்கு நேரப்போகும் கொத்தடிமைத்தனத்தை சிறிதேனும் எண்ணாமலே எல்லோருக்கும் டாட்டா காட்டிக் கொண்டிருந்தனர். ஒருநாள் பக்கத்து வீட்டு ஜோர்டான் நாட்டுக்காரியிடம் என் மனைவி "என் பிள்ளைகள் ரொம்ப சமத்து, வெளியேவே வரமாட்டார்கள். இங்கே வந்த பிறகு, அவர்களுக்கு துணை யாரும் இல்லை, இரண்டு அறைக்குள், தப்புத் தப்புத்தப்பாக கேரம், போகோ, கார்டூன் நெட்வொர்க், அனிமல் பிளானெட் என்று அவர்கள் விளையாடுவார்கள்" என்றாள். ;

மனைவி அமைவதெல்லாம்......

"அவர்கள் இருந்த தடம் தெரியவில்லை, எல்லாவற்றையும் மறக்காமல் எடுத்துச் சென்ர்ரிருக்கிர்றார்கள், உபயோகித்த பழைய சோப்புத் துண்டைக் கூட எடுத்துச் சென்றுவிட்டார்கள்" என்றாள் என் மனைவி "சரி விடு!!!" என்று இணைப்பைத் துண்டித்தேன். வீடு வந்து பார்த்ததும் எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. "Are we not deserve a word?"
----------------------
எனது மாமாக்கு திருமணம் ஆகி இருபது வருடம் முடிந்திருந்தது. மனைவி அப்படி ஒன்றும் அழகில்லை முன் பற்கள் துரத்திக் கொண்டிருக்க முண்டக்கண்னோட இருப்பார், யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டார். ஆனால் மாமா அதற்க்கு நேர் எதிர் எல்லோரிடமும் கககலப்பாய் சிரிக்கச் சிரிக்க பேசுவார்.

மாமா உடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இரண்டு பெண்கள். ஆறு பேருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருந்த போதும், இவரின் மனைவி மட்டும், தன் தாய் வீட்டில் பதினைந்து வருடம் இருந்தார். மாமா வெளிநாட்டில் இருந்தார் ஊருக்கு வரும்போது மட்டும் மனைவியை இங்கே தங்கச் சொல்லுவார்.

அவர் மனைவி ஒரு வேலையும் செய்யமாட்டார், காய்கறி நறுக்கினால் கூட அவருக்கு கை, கால் வலி வந்துவிடும். மாமா ஊரில் இருக்கும் நாட்களில் கூட, மாமாவே சமையல் முதல் வீடு கூட்டுவது வரை, எல்லாம் மாமாதான். முகம் கோனவே மாட்டார், எல்லா வேலையும் ஒரு அன்னையின் பரிவுடன் மகளிருக்கே உண்டான குணங்கள் கொண்டு ஒரு தாயாகவே பாவித்துச் செய்வார். ஒரு வேலையும் செய்யாமல் வக்கணையாக அதுவும் சுடச் சுட வேண்டும் அவளுக்கு. எங்கேனும் விசேசத்திற்கு போனாலும் சரியாக பன்னிரண்டு மணிக்கு பக்கத்தில் உள்ள ஏதாவது ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுவிடுவார்.

இதெல்லாம் கூட்டுக் குடும்பத்தில் பெரிய சுனாமியை உண்டாக்கியது. 'நாருடன் சேர்ந்து, பூவும் நாறும்' என்பதனால், அவர்கள் தனிக்கொடித்தனம் வைக்கப்பட்டனர். இபொழுது அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு, சின்னவன் பத்தாம் வகுப்பு. இன்றுவரை மாமி தனியாக ஒரு இடத்திற்கும் செல்லமாட்டாள், பக்கத்துத் தெரு என்றாலும் யாரவது கூட சென்றால்தான் போவார்.

இதற்கிடையில் மூன்று மாதத்திற்கு முன், மாமிக்கு சிறுநீரகத்தில் கல் என்பதனால் சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. மாமியின் குரலுக்கு பணிந்து, விடுப்பில் இருந்து போன மாதமே வந்திருந்தாலும், மாமா பதினைந்து நாள் விடுப்பில் ஊருக்கு சென்றார். அப்பொழுதே அவர் மேலதிகாரி அவரை எச்சரித்துத்தான் அனுப்பினார். பக்கத்தில் இருந்து மாமியையும் பிள்ளைகளையும் ஒருசேர பாரதக் கொண்டது மாமாதான். மாமா உடன்பிரந்தவர்களிடமும் மாமி சண்டையிட்டதனால் வந்த வினை.

ஊருக்குப் பொய் வந்த இரண்டு மாதம் கழித்து, என்னை அழைத்து,
"நான் என் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்" என்றார் எனக்கு தூக்கிவாரிப் போட்டது
"என்ன மாமா இது? அவங்க சொல்லறது எல்லாத்துக்கும் நீங்க தலையாட்டுகிறீர்கள், உங்களுக்கு கோபமே வராதா?" சற்று கடுமையாகவே இருந்தது என் குரல் "வரும்தான்! என்ன செய்யிறது? யாராவது ஒருத்தர் அனுசரித்துத்தான் போகவேண்டும்".

"சரி மாமா! ஒரு யோசனை, மாமியை ஒரு மாதத்திற்கு, இங்கே கூட்டி வந்து வைத்தால், அவர்கள் மனதும் சாந்தப்படும், அப்படியே நீங்கள் இரண்டுபேரும் கலந்தாலோசிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றேன் "சரி" என்றார். "நான் எனது மனிவியுடன் இருப்பதால் உங்களுக்கு ஒரு மாதத்திற்கு தங்க இடம் தனியாகப் பார்க்க வேண்டாம்" என்றேன். "சரி" என்றார்.

மிகவும் கஷ்ட்டப்பட்டு, மாமிக்கு ஒரு மாதத்தில் விசா ஏற்பாடு செய்தோம். அந்த நாளும் வந்தது, மாமி எதுவும் செய்யமாட்டாள் என்பதனால், என் அம்மா அவர்களுக்கும், எங்களுக்கும் சேர்த்து மசாலா, பருப்பு வகைகளை பெட்டியில் கட்டி மாமியிடம் கொடுத்திருந்தார்கள். நான் தொலைப்பேசியில் பேசும்போது, என் அம்மா என் மனிவியிடம் "மா! மாமி ஒரு வேலையும் செய்யமாட்டாள், நீ அவள் இருக்கும் ஒரு மாதம் கொஞ்சம் அனுசரித்துப் போ" என்றார் "சரி" என்றோம்.

மாமி வந்திறங்கினார், ப்ரிச்சனையுடன். எங்கள் பெட்டி ஊரிலேயே அவர்கள் வீட்டிலிருந்தே வரவில்லை. மாமியின் அப்பா தன் நாற்பது வயது குழந்தை இவ்வளவு சுமை தூக்காது என்பதனால் "இங்கேயே வைத்துவிடு" என்றிருக்கிறார். இவளும், ஒரு மாதம் ஒரு வீட்டில் தங்கப் போகிறோமே, இதில் நமக்கான பொருளும் இருக்கிறதே, என்கிற சுயவுணர்வு கூட இல்லாமல் வந்திறங்கினாள். அப்பொழுதே என் மனைவி "என்னங்க! இது மாமி தங்கச்சி வீட்டுக்கு பொருட்கள் வாங்கி வந்திருக்கிறார்கள், நம் பொருளை வீட்டிலே போட்டு வந்திருக்கிறார்கள்" "சரி நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம்" என்றேன்.

இரண்டு வாரத்தில் எவ்வளவோ பிரச்சனையை என் காதில் ஊதினால் மனைவி. "இவ்வளவு வயதாகியும் லஜ்ஜையே இல்லாமல் மாமா பின்னாடியே சுற்றுகிறார்கள் , சாப்பிடும்போதும் இருவர் தொடை ஒட்டியே இருக்கும்படி உட்காருகிறார்கள், சிலநேரங்களில், கதவு திறந்திருக்கும் பொது, நம் பிள்ளைகள் அந்த அறை செல்ல நேர்ந்தால்....., சொல்ல கூசும் நிலையில் இருக்கிறார்கள். பிள்ளைகள் வலம் வருகிறார்கள் என்றாலும் கூட நிலை மாறுவதில்லை. நான் அவர்கள் இருவருக்கும் சேர்த்து சமைக்கும்போது, அவர்கள் தனியாக தனக்கு மட்டும் ஏதாவது சமைத்து சாப்பிடுகிறார்கள், பிள்ளைகள் இருந்தாலும் கொடுப்பதில்லை" என்றாள்
"இது எல்லாம் இன்னும் இரண்டு வாரம் தானே?" என்று சொன்னேன்.

அது நடக்கும் வரை......! அன்று மாமா, மாமி மட்டும் நூடூல்ஸ் சமைத்து சாப்பிட்டார்கள், நாங்கள் அருகில் இருந்தும், எதுவும் கேட்கவில்லை, அவர்கள் சாப்பிட்டுகொண்டிருக்கும்போது..... என் நாலுவயது மகன் என் மனிவியிடம் "ஏம்மா! அவங்க மட்டும் நூடூல்ஸ் சாப்பிடுகிறார்கள்" என்றான் . இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் சற்று கோபமாகி
"உங்களுக்கும் சேர்த்துத்தான், இவ சமைக்கிறாள், ஆனால்....... நீங்கள், அந்த சின்ன பிள்ளைகளுக்கு ஒரு தேக்கரண்டியளவு சேர்த்துப் போட்டிருக்கலாம்" என்றேன்
"எனக்கு அதற்குமேல் சமைக்கத் தெரியாது" என்றாள் "அப்படியே இல்லையென்றாலும்...., உங்கள் தட்டிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்துப் போட்டிருந்தாலும் போதும்" என்றதுதான் தாமதம், மாமி தாரைத் தாரையாக கண்ணீர் வடித்தாள்.

"வந்ததிலிருந்தே எனக்கு இங்கே சுதந்திரம் இல்லை, எனக்கு என் வீட்டில் இருந்ததுபோல் இல்லை" என்றாள்
நான் "இப்படி யார் மீது தப்பென்று பார்க்காமல், நீங்கள் பேசுவது தவறு" என்றேன்
"அப்படியென்றால் நாங்கள் வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறோம்" என்றாள் நான் எதுவும் சொல்லவில்லை. பின்னர் நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் சாந்தப் படவில்லை.

அன்றிலிருந்து பத்து நாட்கள் மாமி ஊருக்குப் போகும் வரை, அவர்கள் எங்கள் யாரிடமும் பேசுவது இல்லை, என் பிள்ளைகளிடமும்தான். ஒரு வெறுமையாகவே எல்லா நாளும் கழிந்தது. அவர்கள் தனித் தீவாய் இயங்கினார்கள். அன்று ஊருக்கு போகும் நாள்...., என்னதான் செய்கிறார்கள் என்று பொறுமைகாத்தோம்.... காலை நாங்கள் எழுந்து பார்த்த போது, அவர்கள் உடைமைகள் எல்லாம் காணாமல் போயிருந்தன, அவர்களையும் சேர்த்து. 'நல்லார்க்கு அழகு, சொல்லாமல் செல்லுதல் போலும். '

பின்பொருநாள், மாமாவைப் பார்க்க அவர் அறைக்குச் சென்றேன், நான் ஏதும் பேசும்முன்பே, அவரே
"என்ன மன்னிச்சிடுப்பா!!!" என்றார்
"என்ன மாமா!!!, பெரிய வார்த்தையெல்லாம்"
"இல்லாப்பா! எனக்குத் தெரியும் யார் மேல் தப்பென்று"
"இருந்தாலும்..... நீங்கள் அவர்களுக்கு ரொம்பதான்" என்றேன்
"என்ன பண்ணுறது ?? 'வாழ்க்கைத் துணை, சிலருக்கு நாணல்போல், சிலருக்கு நாய் வால்போல்" என்றார்
"இப்போகூட எப்படி நீங்கள் நகைச்சுவையாய்?" என்றேன்
"பழகிவிட்டது"
"இருந்தாலும்.... நீங்கள் அவர்களுக்கு, ரொம்மத்தான் வளைந்துக் கொடுக்கிறீர்கள். அவர்கள் ஒருத்தருக்காக இப்படி எல்லோரையும் பகைத்துக்......."

"உன் பிள்ளைகள் இதுபோல் செய்தால் என்ன செய்வாய்?"
"என்ன மாமா அவர்கள் பிள்ளைகள்!!!"
"இவளும் எனக்கு பிள்ளைதான், என்ன செய்ய......? 'மனைவி அமைவதெல்லாம்.........." எனும்போது அவர் கண்ணில் இரு துளி நீர்!!!. ;
 

Blogger