Pages

குப்ப மேட்டரு...

இன்று அதிகாலை மேற்கு வங்க மாநிலம் பிர்புர் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் 52 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஒவ்வொரு விபத்திலும் உயிர் பலி நம் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குவதும், மெல்ல மெல்ல அன்றாடம் நம்மை அதைக் கடந்துபோகச் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. பலியானவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
--------------XXX------------------XXX------------------
சினிமா டுடே என்ற கண்காட்சி. இம்மாதம் 23, 24, 25 தேதிகளில் சென்னை டிரெட் சென்ட்டரில் நடத்தப்படவுள்ளது. 80 வயதை தாண்டியும் கலையுலகத்திற்காக தொடர்ந்து எழுதி வரும் முதல்வர் கலைஞரை கவுரவிக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் நீள கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தவிருக்கிறார்களாம் இந்த கண்காட்சியில். இது கின்னசில் இடம் பிடிக்கும் என்கிறார்கள். (ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு தொடர்ச்சியான காகிதத்தையும் இதற்காக உருவாக்கி வருகிறார்களாம்)
--------------XXX------------------XXX------------------
மதராசப்பட்டினம் பழைய சென்னையை கண்முன்னே காட்டியது. நம் சுயநலத்துக்காக அழிக்கப்படும் வளங்களின் மதிப்பை நாம் என்றுமே உணர்வதில்லை. குறைந்த பட்சம் ஒரு துளி வருத்தம், லஜ்ஜை ஏதுமில்லாத சுயநலமிகளாக இருக்கிறோம். இந்த உணர்வு நம்மில் எழுவதுதான் படத்தின் வெற்றி. படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றிகலந்த சபாஷ்.
--------------XXX------------------XXX------------------
பத்து நாளாக 'சன்' டைரக்ட் சரியாக வரவில்லை(இன்றுவரை), அமைதியாக வீட்டில் வேலை செய்ய முடிகிறது. இல்லையென்றால் எப்பொழுதும் டீக்கடைபோல் ஏதாவது ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். முதல் ஒன்றிரண்டு நாட்கள் தனித்து தீகார் ஜெயிலில் விட்டதுபோல் ஆனது, சற்று தாமதமாக சுதாரித்துக் கொண்டு பரணில் இருந்த புத்தகங்களை எடுத்து படிக்க, 'அர்த்தராத்திரி விழிப்பு வந்து, துணிவிலகிய மனைவியைப் பார்த்ததுபோல்....' பரவசம் மேலிட மூன்று புத்தகங்கள் படித்து முடித்து விட்டேன். படிப்பதில் உள்ள சுகம் அலாதியானது, நம்முடைய கற்பனைத்திறனை விரிவடையச் செய்கிறது. வாசிப்பென்பது ஆசிரியர் கைப்பிடித்து அவர் உணர்ந்ததை, பார்த்ததை நமக்கு அப்படியே தருவது,
இந்த கற்பனை தளமென்பது வாசகனின் தேவை, புரிதலுக்கேற்ப விரிவடைகிறது. சில விஷயங்கள் பார்க்க ஆழகாக இருக்கும், சில வாசிப்பில் விரிவடையும்.
--------------XXX------------------XXX------------------
அஜீத் வெங்கட்பிரபு இணைவது உறுதியான நிலையில்...., இப்போது தலைப்பில் ஒரு சிறு சிக்கல் வந்துள்ளது. இவர்கள் தேர்வு செய்த தலைப்பு 'மங்காத்தா' இது ஜெமினி நிறுவனத்தை சேர்ந்த மனோ அக்கினேனி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இந்த தலைப்புக்கு ஏற்ற கதையன்றை இயக்கும் முடிவிலிருக்கும் அவர், எக்காரணத்தை முன்னிட்டும் மங்காத்தா தலைப்பை தாரை வார்ப்பதாக இல்லையாம். ஆனால் இந்த தலைப்புக்காக அஜீத்தே அக்கினேனியிடம் போனில் பேசினாராம் முடிவு ஒன்னும் தெரியவில்லை தல தலைப்பில் என்ன இருக்கு அது வெறும் தோலு, உள்ளடக்கம்தான் (கதை) முக்கியம் அதில் கவனம் செலுத்து.
--------------XXX------------------XXX------------------
நண்பரொருவர் பேசிக் கொண்டிருந்தபோது ப்ளாக்கில் எழுதுகிறேன் என்று சொன்னேன். நிறைய எழுத்தாளர்களும் இதில் இருக்கிறார்கள் பலதரப்பட்ட நடை, சொற்ப்ரியோகம், கருத்துப் பரிமாற்றம் எல்லாம் நிகழ்கிறது என்று சொன்னேன். "அப்படின்னா எனக்கு ஐந்து லட்ச ரூபாயில் ஒரு நல்ல பிசினஸ் பரிந்துக்கச் சொல்லுங்களேன்" என்று சொன்னார். "என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க....!" என்றேன் அதிர்ச்சி விலகாமல். "ஆமாசார், எவ்வளோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் யாராவது நல்ல ஐடியா தருவார்கள்" என்றார். யாருகிட்டயாவது இருக்கா....? (எப்படியெல்லாம் மாட்டிக்கிட்டு முழுக்கிறேன்)
;

தமிழ் வழி பொறியியல்..... சரியா.....?

தமிழ் வழி பொறியியல் படிப்புக்கு நிறைய மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்கிறேன். - முதல்வர். தமிழ் வழியில் பாடத்திட்டங்கள் இருந்தாலும், ஆங்கில பேச்சுப் பயிற்ச்சியும் முக்கியம் என்பதால், ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பேச்சுப்பயிற்சியும் வழங்கப்படும். செமஸ்டர் தேர்விலும் அது இடம் பெறும் என்றார்.

இந்த பதிவுக்குள் போகும் முன்..... இது நான் பட்ட பாடு மற்றவர்கள் படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் உதித்தது. இதில் நிறையப்பேர் என் கருத்துடன் வேறுபடலாம், ஆனால் எதார்த்தம் என்று வரும்போது சதவீதம், கருத்துக் கணிப்பு போன்ற எதுவும் நிற்காது. உண்மை ஒரு அரக்கனாய் நம்மை கவ்வி கடைந்தெடுக்கும். இதைச் சொல்வதனால் நான் தமிழுக்கு எதிரானவன் என்று யாரும் நினைத்து விடக் கூடாது (ஆட்டோ வருமென்ற பயந்தே).

தமிழ் வழிக் கல்வி என்பது தரம் தாழ்ந்ததென்றோ, அது படித்தால் வேலைக் கிடைக்காது என்றோ, நான் சொல்ல வரவில்லை. என் பயமெல்லாம் யதார்த்த உலகோடு ஒன்றுதலில் உள்ள நடைமுறைச் சிக்கலைப் பற்றியதே!. தனியாக ஆங்கிலத்தையோ வேறு மொழியையோ கற்கலாம்தான்..... ஆனால் அது படிப்புடனே என்றால் கற்பது எளிது.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் தொழில்சார்ந்த படிப்பென்பது நடுத்தர வர்கத்தின் குரல்வளை நெருக்கும் முள் அணிகலனே. கையிருப்பு, காது, கழுத்து, காட்டை வித்து, கடனை வாங்கி பிள்ளைகளைப் படிக்க வைப்பதென்பது ஒரு முதலீடாகவே கொள்ளப் படுகிறது. படித்து முடித்ததும் வேலை வேண்டி நிற்கும்போது, மற்றைய மொழிகள் தெரிந்திருந்தால் அது ஒரு கூடுதல் தகுதி, மற்றவரிலிருந்து நம்மை தனித்தும் காட்டும்.

உலகமயமாக்கலின் உடுக்கைக்கேற்ப பல பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் வேரூன்றின, வேலைவாய்ப்புகள் கேட்கும் தகுதிகளில் முக்கியமான ஒன்று ஆங்கில அறிவு. படித்தது பொறியியல் எனில், நடைமுறையில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் வேற்று மொழியிலிருந்து வந்தவையாகவே இருக்கும், அதன் சரியான உச்சரிப்பும் ஆங்கில எழுத்துக் கோர்வையும் தெரிந்திருப்பது அவசியம்.

தன்னை வேறு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள இன்று 99சதவீத நிறுவனங்கள் ஆங்கிலத்தையே அலுவல் மொழியாகப் பயன்படுத்துகின்றன. அலுவலக அளவில் எல்லா சம்பாஷனைகளும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகின்றன. மேலும் ஒரு நிறுவனத்தின் முக்கிய பொறியாளராக ஒருவர் நிலைநிற்க வேண்டுமாயின் ஆங்கில அறிவு இன்றியமையாதது.

தமிழ் வழியில் ஆரம்பக்கல்வி பயிலும் கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் தொழில்நுட்ப ஆர்வமும், திறமையும் கொண்டிருந்தாலும், ஆங்கில அறிவு இல்லாத ஒரே காரணத்தால் முடங்கிப்போய்விடும் சூழ்நிலையை மாற்றுவதற்கு தமிழ் வழியில் உயர்கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என பரவலாக கருத்து நிலவி வந்தது. தமிழ் வழி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அரசு சொல்லியிருக்கிறது, வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

அப்படியே தமிழ் வழி படிக்க நேர்ந்தாலும் எப்பாடுபட்டாகிலும் ஆங்கிலத்தை (எத்தனை மொழிகள் கற்க முடியுமோ) கற்றே ஆகவேண்டிய வியாபார உலகத்தில் நாம் உள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பக்கத்து மாநிலமான கேரளாவில் குறைந்தது மூன்று மொழிகள் (ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம்) பள்ளிப் பாடத்தில் உள்ளன. அதனால்தான் மலையாளிகள் உலகெங்கிலும் விரவியுள்ளனர். பெங்களூர், ஆந்திராவிலும் இதே நிலைதான், பல்மொழி பேசுவது இயல்பாகவே அமைந்துவிடுகிறது. நான் (சுய தம்பட்டம் இல்லை) படித்தது தமிழ் வழியே, ஆனால் வேலை வாங்கும்முன் தாவு தீர்ந்துவிட்டது.

எல்லாம் சரி! தமிழில் படிக்கும் B.E படிப்பை அனைத்து நிறுவனங்களும் அங்கீகரித்து, இப்படி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த தெளிவான முடிவுடன், இந்த அரசாங்கம் இதை செய்யாமல், வெறுமனே பேருக்காகவும், புகழுக்காகவும் செய்வார்கலெனில், இதற்காக பாடுபட்டவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகி விடும். சீனா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மானியர்களைப்போல் தாய்மொழியில் கற்றால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க, தமிழ்வழி ஆரம்பக் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு ஆங்கிலத்தை முறையாகப் பயிற்றுவித்து அவர்கள் திறன் மேம்பட அரசு ஆவன செய்ய வேண்டும். ;

குப்ப மேட்டரு...

கோபாலபுரத்தில் இருந்து எல்லாரும் கோடம்பாக்கத்துக்கு வந்தாச்சு சமீபத்திய வரவு கனிமொழி. இனி அங்கிருக்கும் நண்டு சுண்டுகள்தான் வரவேண்டியது பாக்கி இன்னும் கொஞ்ச நாளில் அவர்களும் வந்துடுவாங்க. கலைத்துறையையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியே அதில் முக்கள் கிணறும் தாண்டி விட்டார்கள். என்ன இனி தங்கள் குடும்பம் எடுக்கும் படம் மட்டுமே நன்றாக இருப்பதாக பீற்றிக் கொள்வார்கள்.
--------------XXX------------------XXX------------------
கொட்டிக் கொடுத்தாலும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்பது நம்ம நாயனின் பாலிசியாக இருந்தது நேற்றுவரை. பருப்பு வச்ச போலி பர்சு எல்லாம் காலி, அதனால் தன்னிடம் உள்ள பி எம் டபிள்யு காரை கூட விக்கலாமா என யோசிக்குது பட்சி. அதனால் தன்னை முன்பு தொடர்புகொண்ட விளம்பர நிறுவனத்திடம் சம்மதம் தெரிவித்திருக்கிறார். கூடிய விரைவில் நம்ம நயன் டிவியில் தோன்றி குண்டுமல்லி குன்டூசின்னு கூவி கூவி விற்பதை ரசிக்கலாம்.
--------------XXX------------------XXX------------------
தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வெகு ஜோராக ஒரு தேர்ந்த சட்டசபை, நாடாளுமன்ற சாயலில் நடைபெறுகிறது. வெள்ளம் இருக்கும் இடத்தில் மெல்ல வரும்மம் ஈ என்பதைப் போல ஆட்கடத்தல் ஆளும்கட்சி ஆதரவு என்று தகிடுதத்தங்களும் அரங்கேறுகின்றன. அதுசரி ஆதாயம் இருப்பதால்தானே ஆட்டமும், ஆதரவும். செத்த கிளிக்கு எவன் சொத்த எழுதி வைப்பான்.
--------------XXX------------------XXX------------------
அம்பாசமுத்திரம் அம்பானி தன்னை உணர்ந்து தேர்ந்தெடுத்த கதை கருணாசுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. ஒரு சாயலில் பாலக் காட்டு மாதவனை நினைவு படுத்தியிருந்தாலும் விக்ரமன் படங்களைப் போல் ஒரே பாட்டில் நாயகன் உயரப் பறக்கவில்லை.
--------------XXX------------------XXX------------------
கொடநாட்டில் இருந்து கொண்டாட்டத்தோடு வந்திறங்கிய அம்மா இங்கும் ஊஞ்ச வாழப்பழம் தின்னுட்டு ஓய்வுதான் எடுக்கிறார் போல பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அடத்திய பந்தில் சூடு அவ்வளவாக இல்லை. ஒருவேளை சிங்கிடம் வரும் தேர்தலில் பங்கு எதிர்பார்கிராரோ என்னவோ.
;

புலி வாலைப் பிடித்து.....

படித்து முடித்து வேலை தேடி ஆலாய் பறந்து, இன்று ஆலைக் கரும்பாய் சக்கையாவது வரை........

நடுத்தர மற்றும் அதற்க்கு கீழே உள்ள வர்க வாழிகளின் தலையாய முதலீடே படிப்புதான் 'தான்' வண்டி தள்ளியாவது தன பிள்ளைகளைப் படிக்க வைப்பது என்பது இன்று எல்லா சாமானிய பெற்றோரின் கனவாக இருக்கிறது. முதலீடு எனும்போதே அதில் லாப நோக்கும் இருக்கும்தானே. கை பிள்ளையாய் இருக்கும்போதே "கண்ணு நீ பெரியவனானா என்னவாவே....?" டாக்டர், இன்ஜீனியர் என்பன போன்ற பதிலே எதிர்காலக் கனவின் உரம்தானே.

இந்தக் கனவென்பது பெற்றோர்களின் மனக்கண்ணிலிருந்து பிள்ளைகளின் அகக் கண்ணுக்கு வீசிஎறியப்படுகிறது. பிள்ளைளும் புத்தகச் சுமையினூடே இக்கனவையும் சுமக்கிறார்கள். படிப்பு முடித்ததும் வேலை தேடும் காண்டம் ஆரம்பிக்கிறது....
எலி வாலைப் பிடிக்கும்போதே.... ஏரோப்ளேன் ஆசை ரெக்கை கெட்டுகிறது. ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு தாவி, தவ்வி, தவழ்ந்து எப்பாடு பட்டாகிலும் தன்நிலை உயர தவம் கிடக்கிறோம்.

இதில் பிடித்தது, பிடிக்காதது நம் கொள்கைக்கு ஏற்றதா..? எனப் பாகுபாடு இல்லாமல் கடனே என்று கடமையைச் செய்கிறோம். கூழ கும்பிடு, ஊளைச் சதை கணக்கில்லாமல் வரவில் இருக்கு. கண்ணியம், கவுரவம் கண்ணிமைக்கும் நேரத்தில் தொலைந்து போகுது. உண்டு களித்திடவும், உடுத்து கிழித்திடவும், உறங்கி விழித்திடவும் நேரமில்லை.

இந்த ஓட்டத்தில் பசிக்கும் ருசிக்கும் இடையில்.... பிஸியில்(Busy) உணவு. மனைவி இருக்கவேண்டிய இடத்தில் இன்று 'மடி'கணினி. எல்லா உரையாடல்களும் 'செல்'லால் நிகழ்கிறது.
நேரம், தூரம் தெரியாது ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதில் இடையிடையே அடுத்தவர் மீதும் கவனச் சிதறல்கள். எலி எனப் பிடித்தது, இன்று புலி வாலாய் உருமாறி தன் போக்குக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.

எலியாய் இருக்கும்போது அது நம் காலைச் சுற்றியே வருகிறது. நம் தேவைகளும், ஆசையும் விரிவடையும்போது அதற்கேற்ப எலியும் பரிணமித்து கூடுவிட்டு கூடுதாவி, நம்மை யறியாமலே புலியென மாறி ஆட்கொள்கிறது. வேலை ஒரு சமுதாய குறியீடு, நான் இந்த நிறுவனத்தில், இன்ன வேலை செய்கிறேன் என்பதை வைத்துதான் சமூகம் என்னை அளக்கிறது. அத்யாவசிய தேவைக்காக வேலை செய்தது போய்.... இன்று அத்யாவசியமே அனாவசியமாக போய்விட்டது.

விரும்பி ஏற்றதுதான் இன்று நம்மை விழுங்கி ஏப்பம் விடுகிறது.

வாழ்க்கைக்கு தொழில் என்பதொழிந்து, இன்று தொழிலே எல்லோருக்கும் வாழ்க்கையாய்..... ;
 

Blogger