Pages

North 24 Kaantham - மலையாள சினிமா



பொதுவாகவே பயணங்களை வைத்து எடுக்கப்படும் படங்களில் அன்பை அடிநாதமாக வைத்து தைத்திருப்பார்கள்.  இதுவும் அவ்வாறே. 

ஃபஹத் ஃபாசில் Obsessive Compulsive Personality Disorder இருக்கும் ஒரு மென்பொருள் இளைஞ்சர்.  அவரின் சிடுசிடுப்பாலும் அதீத சுத்த பத்த நடவடிக்கைகளாலும் அவரை யாருக்குமே பிடிக்காமல் போகிறது.  அவரது அலுவலகத்தில் அவரை தந்திரமாக திருவான்றத்துக்கு ஒரு'Webinaar'காக அனுப்புகிறார்கள்.

ரயிலில் பெரியவர் நெடுமுடி வேணு; தன் மனைவிக்கு உடம்பு முடியாத நிலையில்... திரும்பி தன் வீட்டுக்கே போக எத்தனித்து; எதிர்வரும் நிறுத்தத்தில் இறங்குகிறார்.  அவருடன் சமூக சேவகி சுவேதாவும், நம்ம ஃபாசிலும் இறங்குகிறார்கள்.  அவர்கள் நெடுமுடி வேணு வீட்டிற்கு எப்படி திரும்புகிறார்கள் என்பதை மிக மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கேரளாவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பாக கடையடைப்பு, வேலை நிறுத்தம் என்று இருக்கும்.  இவர்கள் மூவரும் அவ்வாறு ஒரு வேலை நிறுத்த நாளில்தான் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.  யாரோ சில அயோக்கிய அரசியவாதிகளின் சுயநலத்தில் பொதுமக்களின் அன்றாடம் எப்படி கலைத்துப் போடப் படுகிறது என்பதில்தான் படம் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பயணத்தில் ரயில், பேருந்து, படகு, தோணி, ஆட்டோ போன்ற கேரளாவின் எல்லா வகையான போக்குவரத்தையும் கொண்டுவந்திருப்பது இயக்குனரின் வெற்றி.


பாதி 'அந்நியன்' அம்பியும், மீதி சுத்த விரும்பியுமான ஃபாசில் இந்த பயணத்தில் எப்படியெல்லாம் கொஞ்ச கொஞ்சமாக மாற்றம் பெறுகிறார்; என்பதை அவர்களுடன் பயணிக்கும் நாமே யூகிக்க முடித்தது போன்ற திரைகதை அற்புதம்.

நெடுமுடி வேணுவின் பன்மொழித்திரமை, உறவுகளை; உயிர்களை நேசிக்கும் பாங்கு, தேர்ந்த வாசிப்பனுபவம் என்று போகிற போக்கில் அவரின் அனுபவம் அரசியல் சார்பு என்று எல்லாவற்றையும் மிக நேர்த்தியாய் பார்வையாளனுக்கு கடத்திச் செல்கிறார் இயக்குனர்.

இந்த மாதிரி படத்தில் கண்டிப்பாக பிரதான உதவி ஒரு சமூக சேவகர் / சேவகி மூலமாகத்தான் வரும்.  இதிலும் நாயகி ஸ்வேதா அவ்வாறே வருகிறார் ஆனால் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.

ஸ்டின்ட் கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள், கதையில் திருப்புமுனையே என்னால்தான் அதனால்தான் இதில் நடித்தேன்... என்று அளந்து விடுவார்கள், ஆனால் உண்மையிலேயே நம்ம பிரேம்ஜி அமரனுக்கு இதில் கதையை சரியான போக்கில் திருப்பும் விசையான கதாபாத்திரம்.  நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் பிரேம்ஜி, இதில் என் கதாபாத்திரம்தான் கதையின் திருப்புமுனை என்று. 

அவர் மனைவியாக வரும் கனியின் ஒரு வெட்கப் புன்னகை ஆயிரம் கால காதலை அரைநொடியில் உணர்த்திவிடுகிறது.

இயக்குனர் அனில் ராதாக்ருஷ்ண மேனனின் முதல் படம்; அசத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டியப் படம் என்பதில் ஐய்யமேதுமில்லை.

Directed byAnil Radhakrishnan Menon
Produced byC. V. Sarathi
Written byAnil Radhakrishnan Menon
Starring
Music byGovind Menon, Rex Vijayan
CinematographyJayesh Nair
Editing byDilip

 


 
;
 

Blogger