Pages

கூத்தாடிப் பொழப்பு....

"நா எம்பாட்டுக்கு கத்திக்கிட்டே இருக்கேன்.... எதுமேலயோ மழை பேஞ்சாமாதிரி கம்ன்னு இருக்கீயளே, உங்களால ஒரு கா காசு பிரயோஜனம் உண்டா....? வீட்ல வயசுக்கு வந்த பெண்ணிருக்காளே!!! அவளுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணம் காட்சிய செய்யணுமேன்னு... கொஞ்சமாவது கவலை, வெசனம் இருக்கா... சும்மா தாத்தா ராஜபாட் பெரிய கூத்து காரருன்னு, சொல்லி சொல்லியே பாதி காலத்த ஓட்டியாச்சி, இன்னும் கொற காலத்தையும் இப்படியே ஓட்டிடலாம்னு எண்ணம்போல.... நீ வாடி...., நாம வயலுக்குப் போய் இவருக்கு கஞ்சி ஊத்தணும்னு, நம்ம தலைஎழுத்து" என்று மகளைக் கூட்டிக் கொண்டு விருட்டென்று வெளியேறினாள் ரஞ்சிதம்.

இது வாடிக்கைதான், அவளும் என்ன செய்வா பாவம். எனக்கு வாக்கப்பட்டு எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை. தாத்தா என்னை முதன் முதலா கூத்தில் அறிமுகப் படுத்தியபோது, எனக்கு வயது ஆறு. குறுநில இளவரசனாய் நடித்தேன்.

கூத்தை எழுதி, இயக்கி, இசை, பாடல்கள், அரங்க அமைப்பு என்று சகலமும் தாத்தாதான். ஏன் கூத்து நடத்த ஆகும் எல்லா செலவும் தாத்தாதான் செய்வார். தன்னுடன் நடிக்கும் சக கலைஞகளின் சம்பளத்தை, கூத்து ஆரம்பிக்கும் முன்னமே கொடுத்திடுவார்.

என்றுமே அவர் தன்னை உயர்வாக நினைத்தது இல்லை, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வார். அடவு கட்டி பெருங்குரலெடுத்துப் பாடினாறேன்றால்..... கடைசி இருக்கை ஆளுக்கும் கேட்க்கும். அந்த காலத்திலேயே தாத்தா, நாலைந்து வேடமெல்லாம் ஏற்று நடித்திருக்கிறார். நவரசமும் தவழும் பாவம் என்று அவர் கூத்தில் தனி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். கூத்து அவருக்கு மூச்சு. பாட்டி அவரை ஒரு பிள்ளை போல் பார்த்துக் கொள்வார். பாட்டிக்கு தாத்தா கூத்துக்காரார் என்று சொல்லிக் கொள்வதில் மனங்கொள்ளா ஆனந்தமும், பெருமிதமும் பொங்கும்.

தாத்தா நடையே... ராஜகம்பீரமாக இருக்கும். அவர் பெரிய செருப்புப் போட்டு நடந்து செல்ல, தெருவில் போவோர் வருவோர் எல்லாம் மிகுந்த மரியாதையுடன் கும்பிடுவார்கள். இது நமக்கான மரியாதை இல்லை, நம் மேல் குடி கொண்டிருக்கும் கலையின் மேல் உள்ள மரியாதை என்று சொல்வார். தாத்தா அந்த காலத்தில், ஜெயிசன் துரை முன்னெல்லாம் கூத்துக் கட்டியிருக்கிறார். ஜெயிசன் துரை தாத்தாவின் கூத்தில் அகமகிழ்ந்து, பொன்னும் பொருளும் கொடுத்தாராம். ஆனால் தாத்தா அதையெல்லாம் கிராம மக்களுக்கே கொடுத்து மகிழ்ந்தார். கலை வியாபாரமாகக் கூடாதென்பது தாத்தாவின் கொள்கை.

இருந்த சொத்தெல்லாம் இப்படியே... இறைத்தத்தில், சிதறியதைக் கொண்டு அப்பா நன்றாக படித்ததினால் அரசாங்க உத்தியோகம் கிட்டியது. தன்னை தலைமேல் வைத்துக் கொண்டாடும் ஊர் மக்களிடம் கையேந்த மனமில்லாமல் கடைசிவரை கவுரதையாகவே போய் சேர்ந்தார் தாத்தா.

அந்த கஷ்டங்களை அனுபவித்ததினாலோ என்னவோ, அப்பாக்கு கூத்தென்றாலே வேப்பங்காயகப் போனது. தாத்தா தன் கலைவாரிசாக என்னை உருவாக்க எத்தனித்தபோது, அப்பா முகுந்த மனவருத்தங்கொண்டார். என் குரலும், உடலசைவும் அப்படியே தன்னைப் போல் உள்ளதென்று, தாத்தாவிற்கு தாங்கமாட்டாத பெருமை. "என்னோட இதெல்லாம் அழிஞ்சிடுமோன்னு பயந்தேன்... நீ என்னையே மறுபதிப்பாகக் கொண்டிருக்கிறாய்", என்று தாத்தா அடிக்கடி சொல்வார்.

அதுமுதல் கூத்தே என் வாழ்க்கையாகிப் போனது. ஆனால் நாளடைவில் மக்களின் ரசனை, நவீன நாடகம், சினிமா என்று மாற, இன்று கூத்தை ரசிக்க ஆளில்லை. தெருமுனை கோயில் விஷேசமென்றாலும், இப்பொழுதெல்லாம் ஒரு நடிகரோ, அல்லது நடிகையோ வந்து சிறப்பிக்கிறார்கள். பின் எப்படி என்னை மாதிரி கூத்துக்காரனுக்கெல்லாம் வேளைவரும். வேறு வேலைக்குப் போகலாமென்றாலும் தன்மானம் தலைவணங்க விடுவதில்லை. மாமா மகள்தான் ரஞ்சிதம் என்றாலும், அவளும்தான் என்ன செய்வாள், இந்த வெத்து வேட்டை கட்டிக்கொண்டு. இன்று வீட்டிலும் வெளியிலும் எனக்கு ஒரே நிலைதான்.... மரியாதை என்பது மருந்துக்குக் கூட இல்லை.


இன்று கூத்துகாரன் என்று சொன்னால் வெட்டியாக ஊர்சுற்றுபவர்கள், என்று அர்த்தம். கலையின் மதிப்பு தரம் தாழ்ந்துப் போனதில்.... கூழுக்காகக் கூட யாரும் கூத்துக் கட்ட அழைப்பதில்லை. என்னுடன் இருந்தவரெல்லாம் தத்தமது குடும்பத்தைக் காப்பாற்ற சாயப் பட்டறை, சாக்கடை அள்ளுதல் என்று போய்விட, நான் மட்டுமே அரிதாரம் பூசிய கையை அழுக்காக்காமல் இருக்கிறேன்.

நாளடைவில், வீடே எனக்கு சிறையாகிப் போனது, எங்கும் போகாமல் இந்த சாய்நாற்காலியே கதியென்று ஆனது. வெளியில் ஏதோ சத்தம் கேட்க்க, சிந்தனையில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டு, மெதுவாக நடந்து வாசலுக்குச் சென்றேன். அதற்குள் வேலை விட்டு வீடு திரும்பியிருந்தார்கள் ரஞ்சிதமும் என் மகளும்.

"மத்தியானம் கொட்டிக்கக் கூட இல்லையா?" என்றால் வந்ததும், வராததுமாக.

வெளியில் ஆள் அரவம் கேட்க, எட்டிப் பார்த்தேன்.

"அப்பா!! உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்" என்றாள் என் மகள்.

"Excuseme, my name is David Jaison, Grand son of Brigadiar Jaison" என்று சொல்லி ஒரு வெள்ளைக்காரன் வாசலில் நின்றான்.

"Yes, come in" என்று அவனை உள்ளே அழைத்தேன்.

"My grandpaa Jaison told about your Grandpaa Raajpaat Raajadurai, What a man he is, a man who lived for the art. He is the symbol of encyclopedia on this Kooththu."

"ஆமா பேரு பெத்த பேரு, ஆனா தாகத்துக்கு 'நீலு லேது'" என்றாள் ரஞ்சிதம்.

"Actually, i'v come here to award this accreditation to him, as a life time achievement of performing arts. I'm one of the Jury member of the Committee" என்றார் அவர்.

"பணமா எவ்வளவு தருவாங்க?" என்றாள் ரஞ்சிதம்

"நீ கொஞ்சம் சும்மா இரு!!" என்று அதட்டினேன். அவள் அப்படியே வாயடைத்துப் போனாள்...

"As an Heir of his Caliber, you have to perform a play in London Broadway theatre, and receive the award along with the price money of 2 Million" என்றார் அவர்.

மிகப் பெருமிதமாய்....... தலை நிமிர்ந்து ரஞ்சிதத்தைப் பார்த்தேன், முதல் முறையாக...... ;

பம்பாயில் லெக்குதாதா

லெக்குதாதா.... புதுசா கல்யாணம் ஆகி, மறு வீட்டுக்கு, தன மனைவியின் சொந்த பந்தங்களைப் பார்க்க..... முந்தைய பாம்பே, இன்றைய மும்பை சென்றார். பக்கத்து ஊருக்கே பஸ்ஸில் போகாத நம்ம லெக்கு, பம்பாய்க்கு ட்ரைனில் போக ஆயத்தமானார். ஊரையே அதிரிபுதிரி ஆக்கினார்.

"அவ அண்ணன்களெல்லாம் ப்ளேன்லதான் வரச் சொன்னாங்க நாந்தே, என்ன கருமம், நாம ட்ரைன்லேயே போலாம்ன்னு சொன்னேம்டே"
என்று பல்லு முளைக்கா பிள்ளையில் இருந்து, பாம்படம்(காது வளையம்) போட்ட செவிடுகள் வரை, ரத்தம் வர ஊதிவிட்டார். தெறிச்சி ஒடுனவங்களையும் புடிச்சி நிறுத்தி.... விடாது 'கருப்பா'னாரு புது மாப்பிள்ளை.

காண்ணுலப் பட்ட எல்லோர்கிட்டயும் "உனக்கென்ன வேணும்டே....! பம்பாய்ல இருந்துன்னு....?" ஏகப்பட்ட லிஸ்ட் வேற ஏத்திக்கிட்டாரு மைண்ட்ல. வெவரமான வெடலைகளப் பார்த்தா... பம்பாய்யோட ஹிஸ்டரியும், பலான ஏரியா அட்ரசையும், பக்காவாப் பத்திக்கிட்டாரு. ஒடிசலான தேகத்துக்கு ஒன்னரை மீட்டருல பேண்ட்டு ஒன்னு, கண்ணப் பறிக்கிற ரோஸ் கலர்ல, ராமராஜன் சர்ட்டு ஒன்னுன்னு, அமர்களப்படுது ஐயா ஏரியா. ஊரே வழியனுப்ப, ஒரு வழியாப் போனாரு.

ஒரு வாரங்கழிச்சி, மிடுக்காப் போனவரு.... கடுப்பாத் திரும்பி வந்தாரு, சரி அலுப்பு போல் இருக்குன்னு, ஆறப்போட்டு, ரெண்டு நாள் கழிச்சி பயணக் கதையக் கேட்டால்.....

"அத்த ஏண்டா கேகுரீகன்னு" பிளாஷ்பேக் ரீல் ஓட்டினார்.

"எவ்வளோ பெரிய ட்ரைன்டா....! எங்கள ஸ்டேஷன்லையே பிக்அப் பண்ணி அவன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனான் பெரிய மச்சினன்"

"ம்ம் விருந்தெல்லாம் தடபுடல் தானே...!"

"அட போடா நீ வேற வெந்த புண்ணுல வெரல விட்டு நோண்டாத... முழுசாக் கேளுவே..."

"சரி லெக்கு, சொல்லு"

"நல்ல சௌகர்யமா இருங்க மச்சான்னு.... மரியாதைய மொந்த மொந்தயாக் கொடுத்தாங்க, மச்சினனும் அவன் மனைவியும். ஒரு சின்ன ஹால்.... அதுதான் அவன், அவன் பொண்டாட்டி அப்புறம் நாலு பிள்ளைகள்ன்னு, ரொம்ப சின்ன இடம். அதிலேயே சாப்பிடனும், தூங்கனும் இதுல சிமென்ட் சீட் வேறு சூட்டக் கிளப்புது..."

"அப்போ உங்களுக்கு தனியா ரூமெல்லாம் இல்லையா.....?"

"அட நீ வேற, 'ஆடிக் காத்துல அம்மியே பறக்குதாம்... அழுக்கு வெட்டி என்னாகும்' இங்கெல்லாம்... இப்டித்தான் மச்சான், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கன்னு, மச்சான் ரொம்ப கெஞ்சினான். நானும் வெறுப்ப மறச்சிட்டு..., இனிப்பா நின்னேன். ஒரு சேலையில் மறைப்புக் கட்டி, எங்க ரெண்டு போரையும் தூங்க வச்சாங்க. நைட்ல காலைத்தூக்கி பக்கத்துலப் போட்டா.... மச்சானோட சின்னப் பையன் உருண்டு வந்து எம்பக்கத்துல படுத்திருக்கான்"

"அப்புறம்...."

"அப்றோம் என்ன அப்றோம் காலப் போட்டதுனால தப்பிச்சேன்"

""ஐயோ...!"

"சரி இதுதான் இவங்க வாழ்க்கை, ரொம்பப் பாவம்ன்னு, எனக்கு நானே சால்ஜாப் சொல்லி, ஒரு நைட்ட ஓட்டினேன். அதுக்கப்புறம் இன்னொரு அண்ணன் வீடு, சரி இவன்தான் இப்படி, இன்னொருத்தனாவது நல்லா இருப்பான்னு நம்பி... போனேண்டா, போய் பார்த்தா.... பெரியவனேப் பரவாயில்லைன்னு தோணிச்சி..."

"ஏன்...?"

"அட அந்த வீடு ஒரு குடிசைடா, மண் சுவரு மொழுகியத் தரைன்னு, அதிலும், இவன் வீட்டை விட இன்னும் சின்னது. ஆனால், அதே அளவு ஆள்கள். ஆஹா இவனுக்கு அவன் பரவாயில்லைன்னு..., இன்னொருத்தன் வீட்டுக் போனால்.... அது டால்டா டின்ல கட்டிய வீடு, ஆஹா நம்ம மச்சான்கள் பரவாயிலைன்னு வேறொருத்தர் வீட்டுக்குப் போனால்... அது யூரியா பேக்ல கட்டிய வீடு. ஆஹா... சண்டாளச் சிரிக்கி, நம்மள நடு ரோட்டுக்குக் கொண்டு போய்டுவாப் போல இருக்கேன்னு... உஷாராவி 'சடன்னாக்' கிளம்பி, சட்டுபுட்டுன்னு வந்துட்டேன்டா...."

"இதுல அந்த சிரிக்கி மவ, ஏகப் பட்ட பில்டப்புகளப் போட்டு என்னம்மா உசுப்பேத்துனா.... 'என் அண்ணன்கள், பம்பாய்ல பர்பி சுடுறாங்க, பஞ்சு மிட்டாய் பொசுக்குராங்கன்னு..., பக்கம் பக்கமா பாசப் புராணம் பாட்னா...' கேக்குறவன் கேனையா இருந்தா....., 'லண்டன் லாட்ஸ்' மைதானமே எங்கப்பா கெட்டுனதுன்னு அடிச்சி உடுவாளுக...."

"அப்போ ஊர் சுத்திப் பார்க்கலையா?"

"அட.... மொழி தெரியாத ஊரில் எங்கப் போவுரதுன்னு, எங்கயுமேப் போவலடா"

"அப்போ அட்ரஸ் வாங்கிட்டுப் போனியே அங்கேன்னு?" அழுத்தினான் அருள்

"அட உள்ளூர் கிணத்துலேயே தூர்வார முடியலே, இதில் குளம், கம்மாயின்னு எவன் அலைவான்"

"அப்படி போடு லெக்கு..."

இவ்வளவு ஜம்பமாகப் பேசினாலும், மனைவியின் அண்ணன்கள்தான் இவர் குடும்பத்தை இன்றுவரை காப்பாற்றுகிறார்கள். ;

டார்வின் தியரி

படிக்கும் போது... எனக்கு அடுத்த நம்பர் பார்த்திபனுக்கு. எல்லா 'எக்ஸாமிலும்' என் பின்னாடிதான் அவன் வருவான். 'எக்ஸாமுக்கு' வந்த முதல் வேலை, என்னய தயார் படுத்துவதுதான். "மச்சி எப்டி படிச்சிருக்கே? உன்னய நம்பித்தான் நான் இருக்கேன், நல்லா படி மச்சி" என்று ஒன்னு ரெண்டு பில்டப்பப் போட்டுட்டு, கடைசி நிமிடம் வரை என்னய படிக்கச் சொல்லிவிட்டு.... அவன் பந்தாவாக வலம்வருவான். இதுல இது வருதுன்னு ரமேஷ் சொன்னான், அதுல அது வருதுன்னு மகேஷ் சொன்னான்னு சில பல அட்வைஸ்கள் வேறு கொடுப்பான்.

எக்ஸாம் நடக்கும் நாட்களில் என் அம்மாவைவிட அதிக அக்கறையோடு பார்த்துப்பான். நானும் இல்லாத பந்தாவெல்லாம் பண்ணுவேன் (கெடைக்கும் போதே மஞ்ச குளிச்சிரனும் இல்லன்னா.....). எனக்கு பூஸ்ட்தான், கிங்க்ஸ் சிகரேட்டுட்தான்னு..., நம்ம காட்லயும் மழைபெய்யும். அது ஒரு சுகானுபவம். நான் "என்ன மச்சி என்னய நம்பியே வர்ரீயேன்னு...?" கேட்டா "என் ஆபத்பாந்தவன், அநாதரட்சகன்.... அஞ்சாநெஞ்சன்...., நீ இருக்கும்போது எனக்கு என்ன கவலை" என்பான். நானும் நம்பளையும் ஒருத்தன் இப்படி நேனைச்சிருக்காநேன்னு பீல்ஆவி அவனுக்கும் சேர்த்து படிப்பேன் (நேஜமாளுமேபா!!).

எக்ஸாம் ஹாலில் நான் எப்பவாவது எதேச்சையாகத் திரும்பிப் பார்ப்பதுபோல் இவனைப் பார்த்தால்.... ஏதோ இவன்தான் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கப் போறா மாதிரி, யோசிப்பான். நான் முதல் 'அன்ஸர்' புக் எழுதி முடித்து 'அடிஷனல்' புக் வாங்கி உட்கார்ந்ததும்....., இவன் இம்சை ஆரம்பிக்கும். புதுப் பொண்டாட்டிய படுக்கைக்குக் கூப்ட்ராமாதிறியே.... கால நோன்றதும், காது கூசும் வினோத ஒலி எழுபபுறதும்னு, என்னைய எழுத விடாம பண்ணுவான்.

என் பேப்பர அவன் டேபுளுக்கும், மறுபடி அந்த பேப்பர என் டேபுளுக்கும் மாத்த.... புதுப் புது ஐடியா பண்ணுவான். "எப்டிடா மச்சி இந்த ஐடியாவெல்லாம் யோசிக்குற, இந்த யோசனைகள கொஞ்சம் படிப்புளையும் காட்டலாமிள்ளன்னு....?" கேட்டா "போ மச்சி நேத்து என் ஆளோட அவ வீட்டுக்குப் போனதுல லேட் ஆயிடிச்சிடா" "அடப்பாவி... அவ வீட்ல என்னடா பண்ணீங்க....?" "என்னத்த பண்ணுறது சும்மா பேசிக்கிட்டிருந்தோம்ன்னு" கண்ணடிப்பான்.

நானும் காதலுக்கு உதவுனதா இருக்கட்டுமேன்னு..., அவனுக்கு என் எல்லா பேப்பரையும் காண்பிப்பேன். அசுர வேகத்தில் எழுதி முடிப்பான் பின்ன எக்ஸாம் தொடங்கி ஒருமணிவரை சும்மாதான் இருப்பான்.... என் பேப்பர் போன கணம்..., அவனுக்குள்ள இருக்க அந்நியன் முழிச்சிக்கும்.... சும்மா பர பரன்னு எழுதிமுடிப்பான்.

ரிசல்ட் வந்ததும் என்னைவிட எப்படியும் ஒரு அஞ்சு மார்க் அதிகம் வாங்கியிருப்பான்... "என்ன மச்சி இது, உன்னப் பார்த்து எழுதுன எனக்கு அதிகம் மார்க் போட்டிருங்காங்க... என்ன கொடுமை இதுன்னு?" பீலிங்ஸாக் கொட்டுவான். நானும் அத உண்மைன்னு நம்பி திருத்துன வத்திமாருங்கள வாரி கொட்டுவேன். இது கடைசி வருஷம் வரை தொடர்ந்தது.

பின் மப்பில் ஒரு நாள் மல்லாக்கக் கிடக்கும் போது...... "மச்சி.... நா எப்டி தெரியுமா எல்லா எக்ஸாமிலும் உன்னவிட நிறைய மார்க் எடுத்தேன்?"..... என்று கொசுவத்தி சுத்தினான். "அது வந்து மச்சி...., நீ கொஞ்சம் சுமாராப் படிப்பே, ஆனா உன்னவிட சரவணன் நல்லாப் படிப்பான். அதனால உங்க ரெண்டு பேர் பேப்பரையும் மேட்ச் பண்ணி பார்த்து..., எது கரைக்ட்டோ, அதைத் தேர்ந்தெடுத்து எழுதுவேன். 'அகவுண்ட்ஸ்' அன்ஸர் எல்லாம் அவன் கரைக்ட்டா போடுவான்...., நீ கொஞ்சம் சொதப்பி இருப்பே, அதனால நீ தப்பாப் போட்டத அடிச்சிட்டு...., அவன் போட்டத போடுவேன்னு" எனக்கு பிபி ஏத்துனான்.

"அடப்பாவி.... என்னய ஏண்டா இப்படி ஏமாத்துனன்னு?" கேட்டா "என்னப் பண்ணுறது.... மச்சி, இதுதான் டார்வின் தியரி, 'சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்'" என்றான்.

பின் எனக்கும் அவன்தான், அவன் கம்பெனியிலேயே வேலை பார்த்து வைத்தான். அதுக்கப்புறம் நான் பல மன்னார் அண்ட் கம்பெனிகள் மாறினேன், ஆனால் அவன் அந்த கம்பெனியிலேயே இன்னும் இருக்கான். ஒரு நாள் எதேச்சையாக அவனை தியேட்டரில் பார்த்து "எப்படி மச்சி இருக்கேன்னு?" கேட்டா "நல்லா இருக்கேண்டா மச்சி..., ரெண்டு பசங்க" என்று தன மனைவியை காட்டினான் அதிர்ந்து "என்னடா மச்சி உன் லவ் என்னாச்சி...?" ன்னா

சிரிச்சிக்கிட்டே சொன்னான் "டார்வின் தியரி, 'சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்'". ;

Leggu தாதா அட்ராசிட்டி

எனக்கு நண்பர் ஒருவர் இருக்கார் அவருக்கு நாங்க வைத்தப் பேரு leggu தாதா. அவர் யாரையாவது பார்த்து, "என்ன நல்லா இருக்கியான்னு?" கேட்டா அவ்வளவுதான். ஆனா ரொம்ப பாசமான மனுஷன். பிடித்தது : நமீதா, பிட்டு மற்றும் action படங்கள். சைட்டிஷ்ஷுக்கு சரக்கு. எந்த போஸ்டரிலாவது ஆணோ, பெண்ணோ காலைத் தூக்கியிருக்கா மாதிரி தெரிந்தால் போதும்.... முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவார். இதில் மொழி கடந்த தேடல் அவருக்கு...

லெக்கு தாதா ஊர்மெக்க, ஒரு வக்கீலிடம் வேலைப் பார்த்தார், தினத்துக்கும் அவர் மனைவி இவருக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்துச்சி. ஒரு நாள் அவரை டீக்கடையில் பார்த்து "என்ன லெக்கு சாப்பாடுலாம் எடுத்துட்டுப் போறீங்க போல?" என்று நானும் ரொம்ப எதார்த்தமாகக் கேட்க, "அடப் போப்பா...., இவ கொடுக்குறத எவன் சாப்புடுவான், அத ஏதாவது நாய்க்கு வச்சுட்டு, நா நல்ல சாப்பாடு ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடுவேன்" என்றார். பின்னல் டீ வாங்க வந்த அவர் மனைவி, விட்டாங்களே ஒரு கொட்டு... தலை பல்லாவரம் மலைபோல் வீங்கி விட்டது. ஆனாலும் பய புள்ள கெத்து கொறயாமத்தான் பேசும்.

"என்ன லெக்கு நேத்து ஆறுகால பூஜையான்னு மறுநாள் பார்த்துக் கேட்டேன் "ஆஹ்!! ச்சும்மா... என் மேல கை வெப்பாளா?" என்றார் பந்தாவாக. "அப்புறம் ஏன் சாப்பாடு இல்ல இன்னக்கின்னு?" நான் கேட்டது தான் தாமதம் "அட போப்பா.... ரொம்ப கஷ்டம், இந்த பொம்பளைங்கள வைத்து காலம் தள்ளுறதுன்னு...." சொல்லிட்டு ஒரு கால் தாங்கித் தாங்கி நடந்தது சென்றார்..... ;

குப்ப மேட்டரு...

சென்ற ஞாயிற்றுக்கிழமை விஜய்டிவியில் நடந்த, "நீயா நானாவில்" ஒரு பெண் 'முக நக' என ஆரம்பிக்கும் நட்புத் திருக்குறளை அதீத கொலைவெறியோடு குதறிஎடுத்தார். திருக்குறள் தப்பியது கோபிறான் புண்ணியம். இதுமாதிரி பப்ளிக் டாக்க்ஷோககு வரும்போது நம் தரப்பு வாதங்களை வைக்கும் காரண காரணிகளோடு வருதல் சிறந்தது.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

நம்ம பழம்பெரும் நடிகை விஜயசாந்தி, (அதாம்பா காலத் தூக்கி.... தூக்கி... டயர்ட் ஆனாங்களே... - சண்டைக்குத்தாம்பா), திருப்பதி பாலாஜியை தரிசிக்க வந்த இடத்தில்.... ஏதோ ஒரு அப்பாவி நிருபர், "உங்க வயசென்ன?" என்கிற தலையாய கேள்வியை கேட்கப் போய்.... நல்லா வாங்கிகட்டிக் கொண்டார். பய.... ஆசையா ஏதோ கேட்கப் போய்.... அது அண்டர்வேர் உள்ளே எலி பூந்தா மாதிரி அதிரி புதிரியாப் போயிடுச்சு. ஆமா இன்னுமா இந்த அம்மா புதுப் பொண்ணாட்டம் சிணுங்குது.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

பட்டுக்கோட்டை அருகே ஒரு பெண், அவள் கணவன் குடும்ப பசி போக்க வெளிநாட்டில் இருக்க, இவள் தன உடல் பசி தீர்க்க... கூப்பிட்ட ஆடவருடன் எல்லாம் சென்றிருக்கிறாள். அதில் கடுப்பான அவள் சாதியைச் சேர்ந்தவர்கள், ஒரு நாள் அவளை கூப்பிட்டு, எங்கோ போய் நம்ம விவேக் மைனர்குஞ்ச சுட்டா மாதிரி, பழுக்க காய்ச்சிய கம்பியை.... பிறப்புறுப்பில் பாய்ச்ச...., இப்பொழுது அவள் மருத்துவ மனைக்குக் கூடப் போக முடியாமல், வலியுடனே தவிக்கிறார். இதில் இந்த காவலர்கள், அடிக்கடி போன் செய்து, இதுபோல் இன்னும் திருந்தாமல் இந்த ஊரில் இருக்கும் நிறைய பேரை நீ எச்சரிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

அவள் கணவனை நினைக்கையில்... அந்த பெண் செய்தது மன்னிக்கமுடியா தவறுதான், ஆனால்.... கலாச்சார காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இரக்கமற்றவர்களுக்கு...., யார் இந்த அதிகாரத்தையும், தைரியத்தையும் கொடுத்தது. இந்த கலாச்சார கண்டிப்பை முளையிலேயே வேரறுக்க வேண்டும்.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

A Wednesday என்ற ஹிந்தி படம் பார்த்தேன். நசுருதீன்ஷா மற்றும் அனுபம் கேர் தேர்ந்த நடிப்பில் ஒரு அட்டகாசமான த்ரில்லராக இருக்கிறது. இதைத்தான் கமல் 'தலைவன் இருக்கிறான்' (இப்போது 'உன்னைப் போல் ஒருவன்')என்று எடுத்து வருகிறார் என்றால் எல்லோருக்கும் எளித்தாக மனசுல ஆயும் (ஏன்னா இதில் ஒரு முக்கிய பாத்திரத்தில் மோகன்லாலும் நடிக்கிறார்). த்ரில்லர் கதையான இதை கமல் நடிக்கப் பார்ப்பது மற்றுமொரு குருதிப்புனலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

SMS (சிவா மனசுல சக்தி), வால்மீகி போன்ற தங்கள் படைப்புகளுக்கு தகுதிக்கு மீறிய மதிப்பெங்களும்...., நாடோடிகள், மாயாண்டி குடும்பத்தார் போன்ற சமகால... சிறந்த படைப்புகளுக்கு குறைந்து மதிப்பிடலும், விகடன் டிக்நிடிக்கு ஏற்பானதாக இல்லை. (யு டூ விகடன்???????) ;

நீ சந்தோசமாகத்தான் இருக்கியா?

பெண்கள் எப்போதுமே வேர் போன்றவர்கள், தன் சுக துக்கங்களை மறந்து அல்லது மறைத்து நாள்கடத்துபவர்கள். கலாசார கயிற்றில் கட்டுண்டு, பெண்களின் எவ்வளவோ ஆசைகள் முளையிலேயே வெட்டி வீசப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தந்தைக்கும் மகளுக்குமான உறவு. எதிர் பாலின கவர்ச்சி என்பது... பிள்ளைப் பிராயத்திலேயே துளிர் விடுகிறது, மார்மீதும், தோள்மீதும் தூக்கி வளர்த்த தந்தையே.... ஆனாலும், ஒரு வயது வரை என்ற எல்லையை அவர்களுள் வன்திணிப்பு செய்திருக்கிறோம். நடை, உடை, பாவனை, சிரிப்பு என்று எல்லாமே இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

நீ சந்தோசமாகத்தான் இருக்கியா?
என்னங்க இது கேள்வி? இதுதான் அனேக மனைவியரின் பதிலாக எப்பவுமே இருக்கும். இதன் உச்சரிப்புத் தொனியில் இருக்கு 'மெய்'யான பதில். 'மெய்'யான வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, 'மெய்' மட்டும் வாழ்வது பலரது வாழ்க்கை.

என் மனைவியின் சென்ற பிறந்தநாளுக்கு அவளுக்கு எதுவுமே தரவில்லை, ஆனால் அதை அவள் கிஞ்சித்தும் வெளிப்படுத்தியதில்லை, இதுவரையில்.
அவள் தந்தை சவுதியில் இருந்தார், தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்... வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஊர் திரும்புவதாக ஏற்பாடு. நான் உடனே அவளிடம் "அவரை இங்கு வேண்டுமென்றால் ஒரு பத்து நாள் இருந்துவிட்டு செல்லச் சொல்" என்றேன். அவரும் வர விருப்பம் தெரிவித்ததினால்... விசா ஏற்பாடு செய்தேன். வயதைக் காரணம் காட்டி விசா மறுக்கப் பட்ட போதும், பெரும்பாடு பட்டு விசா ஏற்பாடு செய்தேன்.

அவள் தந்தை கடந்த இருபத்தைந்து வருடமாகவே வனவாசம்தான் அனுபவித்தார். என் இரண்டு பிள்ளைகளைக் கூட அவர் பார்த்ததில்லை. அவர் குடும்பத்துடன் செலவிட்ட நேரமும், நாட்களும் ரொம்ப ரொம்ப கம்மி.

ஓடாய் உழைத்து ஒடுங்கிய தேகம், நரைக்கூடிக் கிழப் பருவம் எய்தியும்.... எல்லா பிள்ளைகளுக்கும், தந்தை இன்னும் தந்தைதானே. அவள் ஒரு குழந்தையாய் தன் தந்தைக்கு ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். "எங்க வீட்ல கூட இப்படி இருந்தது இல்லங்க, நாங்க நாலு பேரும் அவரோடு தனியாக வெளியே போனது கூட கிடையாது" என்றாள்.

அவர் வந்து தங்கிய நாட்களில்...., நான் என்னை அன்னியப் படுத்திக் கொண்டு, அவர்கள் இருவரையும் ஊர் சுற்றிப் பார்க்க அனுப்பினேன். எங்கும் இருவரும் ஒன்றாகவே என் பிள்ளைகளுடன் சென்றார்கள். அவள் பால்யம் திரும்பக் கிடைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் அவள் முகம் பூரித்துப் போய் இருந்தது.

நான் மிகுந்த செருக்காக....! (ஏதோ காவேரியையே கொண்டுவந்தது மாதிரி)

நீ சந்தோசமாகத்தான் இருக்கியா?
என்ன இது கேள்வி?......என்றாள் சற்று எரிச்சலாக.... ;

குப்ப மேட்டரு...

இந்து பத்திரிக்கையின் அதிபர் திரு.N. ராம் சமீபத்தில் இலங்கை அரசின் விருந்தினராக இலங்கை சென்று வந்துள்ளார். வந்தவர் சும்மா வரவில்லை.... சனியுடனே வந்திருக்கிறார். அங்கே உள்ள முகாம்கள் எல்லாம் இந்திய முகாம்களைவிட சிறந்ததாகவே இருக்கிறது என்றும், அங்கே இருக்கும் மக்கள் ரொம்ப சந்தோசமாகவே இருக்கிறார்கள் என்றும் சொல்லி... பெரிய பிரச்னைக்கு சிண்டு முடிந்திருக்கிறார்.

இவர் போனது அரசாங்க விருந்தினராக, அதிலும் ராஜபக்ஷே நண்பராக (ஏற்கனவே சந்திரிகாவிடன் இருந்து “லங்கா ரத்னா” விருதைப் பெற்றவர்) சென்றிருக்கிறார். இவர் முகாமில் இருந்தவர்களிடம் பெரிதாக எதையும் பேசவில்லை. இவர் முகாம்களுக்குச் சென்றது ராணுவத்தின் உதவியுடன், அப்படியிருக்கையில் அங்கே உள்ள தமிழர்கள் ராணுவத்தை எதிர்த்து என்ன பெரிசாகப் பேசிவிட முடியும்.

இலங்கை அரசு அனுமதியில்லாமல் ஒரு பத்திரிக்கையாளரோ, நிருபரோ இந்த முகாம்களுக்குச் சென்றுவிட முடியாது. அப்படியிருக்கையில் இவரை, அரசே அங்கே கூட்டிச் சென்றிருக்கிறது. அப்படியானால்.... அங்கே சூழ்நிலையை தங்களுக்குத் தக்கபடி மாற்றித்தான் இவரை கூட்டிச் சென்றிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. மேலும் ஒரு பக்க கருத்தை வைத்து அங்கே எல்லோரும் நலமாகத்தான் இருக்கிறார்கள் என்பது சுயஏமாற்று கூற்று. அவர் கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்.

பொய்யை உரத்துக் கூறி உண்மையாக்க முயற்சிக்கிறார், இது எரிகிற திரியைத் தூண்டியதாகவேத் தெரிகிறது. அவர்களுக்கு உதவா, மனஊனம் கொண்ட மூத்த பத்திரிக்கையாளரே!! இதுபோல் பொய் பிரச்சாரம் செய்யாமல் இருந்தால் அதுவே அவர்கள் நெஞ்சில் பால் வார்த்ததாகும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

நாடோடிகள் படத்தைப் பலரும் துவைத்து, அலசி காயப்ப் போட்டு விட்டதால்... அதைப் பற்றிய விமர்சனம் தனியாக எழுதவில்லை. படம் ரொம்ப ரொம்ப நல்ல படம். தயவு செய்து வெண்திரையில் காணுங்கள். இதுபோல் நிறைய கதை என்னிடமும் இருக்கு அதையெல்லாம் வேறு வேறு பதிவாக்க நினைக்கிறேன்.

இதுதான் உங்கள் தளம் சமுத்திரக்கனி, எங்கிருந்தீர்கள் இவ்வளவு நாள்? வாழ்த்துக்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். உங்கள் அடுத்தடுத்த படைப்பும் அமர்களமாய் இருக்க வாழ்த்துக்கள். சசியின் நடிப்பு சூப்பர் ஆனால் நடிப்பைத் தள்ளி வைத்து, ஒரு இயக்குனராய் பயணிப்பதை.... ரசிகர்களாய் விரும்புகிறோம். பரணி மற்றும் விஜய் தேர்ந்த நடிப்பு, குறிப்பாக பரணி அந்த குண்டு கண்ணிலேயே வசனம் பேசுகிறார். அபிநயா குறைவில்லா நடிப்பு நம்பமுடியவில்லை மும்பை ஹீரோயின்களைவிட நன்றாகவே உதட்டசைவிக்கிறார்.

நாடோடிகள் - ஓடோடிப் பார்த்து ஓஹோ என்று ஒடவைக்கலாம்.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
முத்திரை புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் (உள்ளம் கேட்குமே, உன்னாலே! உன்னாலே, SMS போன்ற படங்களில் நடித்த நடிகர்) ஜீவா பாசறையில் இருந்து வந்தவர் என்ற ஏக எதிர்பார்ப்பில் போய் பார்த்தால் சாதாரண தெலுங்கு சினிமா கதை ஆனால் அவரின் இயக்கமும், ஒளிப்பதிவாளர் சல்மீன் உழைப்பும் தெரிகிறது.

முத்திரை - சரியாக குத்தவில்லை... ;

உளியாய் இறங்கிய வார்த்தைகள்தாம்....

நான் பட்டயப் படிப்பு படிக்கும் போது இருந்த ஆங்கில ஆசிரியர் நல்லா ஆஜானுபாகுவான தேகம், இந்தி நடிகர் தாராசிங்கைப் போல் இருப்பார், அவர் ஒரு டெரர், அவர் வரும் நேரம் எல்லா மாணவர்களும் ரொம்பவே பயம் கொள்வார்கள், புதுப் பொண்ணாட்டம் குனிஞ்ச தலை நிமிராமல் இருப்பார்கள். அவர் யாரையாவது நேருக்கு நேர் பார்த்துவிட்டால்.... அவ்வளவுதான் எழுந்து பாடத்தைப் படிக்கச் சொல்வார், அதில் வரும் வாக்கியத்தில் உள்ள இலக்கணங்களை அலசி கேள்வி கேட்பார். தெரியாமல் ஜிஞ்சர் தின்ன மங்கி மாதிரி முழித்தால்.... ரொம்ப கேவலமாக திட்டுவார்.

எதுக்கு பொம்பளப் பிள்ளைகள் முன்னாடி அசிங்கம், என்று பாதி மாணவர்கள் அவர் வகுப்பென்றால்... பங்க் பண்ணிவிட்டு எதிரில் உள்ள கேன்டீனில் உட்கார்ந்துக் கொள்வார்கள். அவர் உள்ளே வந்ததும் "குரங்குகள் எல்லாம் கேன்டீன் போயிடுச்சா? இல்ல...., மிச்ச சொச்ச ப்ரண்டு குரங்குகள் ஏதாவது இருக்கா?, அதுகளும் போகணும் என்றால்... போகலாம்" என்பார், யாருக்கு குரங்கு என்று ஒத்துக்கொள்ள மனசு வரும். பாதி நேரம் நானும் என் படைகளும், இதுக்கு பயந்தே..., அவர் வரும் முன்னமே வெளியே போய்விடுவோம்.

ஒரு நாள், நான் சற்று தாமதமாக கிளம்ப...., எதிரிலேயே அவர் வந்து விட்டார். அப்படியே ஷாக்காயிட்டேன்!! "என்ன வெளியே போறியா?" என்றார் "இல்லை சார், பாத்ரூம்" என்றேன் "சரி போ, நீயும் அந்த குரங்குகளோட சேர்ந்து கேட்டுப் போ. நீ ரொம்ப நல்லவன்னு? நெனச்சேன்" என்றார். பேஸ்தடித்துப் போய்... அவர் பின்னாடியேப் போனேன் (மனதிற்குள் ஆஹா சனியன் சடபோட ஆரம்பிச்சிடுச்சே?).

என்னை முதல் பெஞ்சில் உட்கார வைத்து, பாடத்தை எடுத்துப் படிக்கச் சொன்னார்... நிறைய கண்ணைக்கட்டும் கேள்விகள், என் பதிலறியா திருட்டு முழிகள், என்று அவரால் எவ்வளவு முடியுமோ...., அவ்வளவு வாட்டினார். பெல் அடித்து வெளியில் போகும்போது, "என் ரூமில் வந்து என்னைப் பார்" என்றார்.

இன்னொரு மூத்திர சந்துக்கு கூட்டிட்டு போறார்ன்னு தெளிவாயிடிச்சி, மனச திடப் படுத்திக்கிட்டு, அவர ரூமில் போய் பார்த்தேன்.... "உன் கிட்ட இன்னும் ரொம்ப எதிர்பார்கிறேன்!!? நீ ஏன் அந்த குரங்குகளோட சேர்ந்து குட்டிச் சுவராப் போற, இனி நீ என் எல்லா க்ளாசிலும் இருக்கேன்னு" சொல்லிட்டுப் போய்ட்டார்.

அன்றிலிருந்து...., என் படிப்பு முடியும் வரை, அவர் வகுப்பில் யார் இருக்கிறார்களோ இல்லையோ அடியேன் இருப்பேன். என்னையே காட்சிப் பொருளாக்கி... பாடம் நடத்துவார். நானும் தப்புத் தப்பா சொல்லியே ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன். அவர் என்னைத் திட்டியதிலிருந்து.... யார் என்னைத் திட்டினாலும் எனக்கு உரைக்கவில்லை. இன்றும் ஆபிசில் பாஸ் எவ்வளவோ திட்டுகிறார் நமக்கு உரைக்கனுமே!! ம்ம்!! எல்லாம் அவர் போட்ட விதை.

ஒரு ஐந்து வருடங்களுக்குப் பிறகு, பிறிதொரு நாள் நான் வேலை செய்யும் கம்பெனியில் அவரை எதேச்சையாய் பார்த்த போது... "சார்....! எப்படி இருக்கிறீர்கள்?" என்றேன் "நல்லா இருக்கேன் என்றார்?" "சார்....! நா இந்த கம்பெனியில்தான் வேலை செய்கிறேன்" என்றேன். சுழ்நிலை மறந்து, என்னை கட்டித் தழுவி, கர்ஜிக்கும் குரலில் "ரொம்ப சந்தோஷமா இருக்குபா" என்றார். "சார் எல்லாம் உங்க ஆசிர்வாதம்" என்றேன் "அதில்லை, நீங்க நல்ல படிச்சதனால் என்றார்" "என்ன சார் புதுசா நீங்க வாங்க, என்னை எப்போதுப் போலவே வாடா குரங்கு என்று கூப்பிடுங்கள்" என்றேன். ஆனால் கடைசி வரை என்னை அவர் மறுபடி குரங்கென்று கூப்பிடவே இல்லை.

இன்றும்... என்னை தன் பிள்ளையாக நினைக்கிறார். இது ஆசிரியர் மாணவன் என்கிற வட்டத்தைத் தாண்டி, எல்லை விரிவடைந்திருக்கிறது. அன்று உளியாய் இறங்கிய வார்த்தைகள்தாம் இன்று..... ;

கோயிந்து புலம்பல்....

அல்லார்க்கும் வண்கம்

இந்த +2 பரிட்சையில ரொம்ப பசங்க என்னவோ மறுகூட்டலாமே அதுல நிறைய மார்க் வாங்கீதுங்கபா, ஆனா, அவங்கள எல்லாம் முதலிடம் வான்கீனவங்களா அறிவிக்க முடியாதுன்னு சொல்டாங்கலாமே?

ஏம்பா கரீக்ட் பண்றசொல்லோவே ஒயுங்கா கரீக்ட் பண்ணாம உட்டது, அந்த புள்ளைங்க தப்பில்லையே! பாவம் அவங்க lifeஏ கெடுத்த அந்த வாத்திமாருகள இன்னாப் பண்ணப் போறாங்கோ? வாத்திமாருங்க நெனப்பெல்லாம் மாசாமாசம் வாங்குற சம்பளத்தைப் பத்திதான், அது கொறஞ்சா ஸ்ட்ரைக் பண்றாங்கோ, இதுக்கிப்போ இன்ன பண்ணப் போறாங்கோ? பஸ்டு இவங்களுக்கு வக்கினம்பா பரீட்ச.. நமகென்னபா தெரீது, நா ஒரு தற்குறி!!

கேட்டிங்களா நியூச... தியேட்டர்லேயே இனிமே பார் தொறக்க போறாங்களாம் என்னமாறி அன்னாடங் காட்சிக்கெல்லாம் சந்தொசம்பா. இல்லன்னா எப்டிப்பா நம்ம ஹீரோஸ் படம் பாக்கறது. நேத்து வந்த நண்டு சுண்டேல்லாம் பன்சு பேசுது, பறந்து பறந்து பைட் பண்ணுது, ஒரே பேஜாரப் பூடுதுபா, போட்னுப் போன சறுக்கு எறங்கிட்துபா, போர் அடிச்சா அப்டியே போயி ஒரு கல்ப் அடிச்சிக்னா ஷோக்கா இர்க்கும்பா. தலைவரு ஒகே சொல்டாருன்னா ரொம்ப புண்ணியமாப் போவும்.

இன்னிமே நம்ப ரிச்சால க்ரொவ்ட் வரும்பா, பெட்ரோல் வெலய ஏத்திட்டாங்களாமிள்ள! தொபாருப்பா சொல்லி முடில..., அதுக்குள்ள ஒரு சவாரி, வர்டாப்பா!!! ரைட் ரைட்.... ;
 

Blogger