Pages

நரமாமிச பட்சினிகள்




சென்ற ஞாயிறன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வின் கேள்வித்தாள் வெளியானதில் அந்த தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறார்கள்.


இமெயிலில் இருந்து வினாத்தாளை திருடியதாகவும் கூறப்படுகிறது.தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூர் தேர்வு மையத்தில் பிடிபட்ட சுரேஷ்குமார், விடைத்தாளும் வைத்திருந்தார்.இந்த கேள்வித்தாள் சில மணி நேரத்துக்கு முன்பு தான் அவுட்டாகி இருக்க வாய்ப்பு இருக்கும். முன்கூட்டியே ஆகி இருந்தால் எப்படியும் வெளியே தெரிந்திருக்கும்.


மேலும் கேள்வித்தாள் அவுட் ஆன அடுத்த நிமிடத்திலேயே விடை கண்டுபிடிப்பது கடினம்.தேர்வாணையத்தில் வேலைப்பார்ப்பவர்களால் தான் எளிதில் விடை எடுக்க முடியும்.எனவே இந்த கேள்வித்தாள் வெளியானதில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


இந்த செய்தியை பத்தோடு பதினொன்னாக படித்துவிட்டு கடந்துவிட முடியாது. இந்த தேர்வு இரண்டாம்நிலை உயர்பதவிக்காக நடத்தப் படும் தேர்வு. இதை ஆறு லட்சத்து நாற்பதாயிரம் பேர் எழுதினார்கள். எவனோ ஒரு காலிப்பயல் செய்த திருட்டுத்தனத்தால் மொத்த தேர்வர்களின் உழைப்பை வீணாக்குவது எந்த விதத்தில் நாயம்.


இவர்களின் உழைப்பை, எத்தனை இரவுகளின் உறக்கத்தை, இத்தனைநாள் கனவை, எந்தனையோ தாய்களின் வேண்டுதலை, ஒரு இளஞ்சனின் ஒட்டுமொத்த ஆற்றலை, நம்பிக்கையை, லட்சியத்தை, ஒரு சிறு திருட்டுத்தனத்தால் ஆழிப் பேரலைபோல சுருட்டிவிடுவதும், மறுதலித்தலும் கயமைத்தனமன்றி வேறென்ன. இது அவர்களின் நம்பிக்கையை சிலுவையில் அறிதலைப் போன்றது. சக்தியுள்ளவன் புறவழியில் முயற்ச்சிக்கிறான் என்பது மற்றையோரையும் அவ்வாறே முயற்சி செய்யத் தூண்டாது என்பது என்ன நிச்சயம்.


எல்லா கல்லூரி படிப்பும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தரும் என்ற உத்திரவாதமில்லை, இன்னும் வாழ்க்கையில் சல்லிகாசு கூட யாசித்துப் பெற முடியாத படிப்புகள் ஏராளம் இங்கே உள, இளங்கலை வரலாறு, மொழியியல், கணிதம், புள்ளியியல் போன்ற படிப்புகள் முடித்ததும் ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கத் திராணியில்லாத படிப்பு, இவற்றில் மேற்படிப்பு படித்தால் ஒரு வேலை ஆசிரியராகவோ, ஒரு நிபுணராகவோ போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவற்றில் எத்தனைபேர் மேற்படிப்பைத் தொடர முடியும்? இந்த எல்லோரின் கடைசி முயற்ச்சியாய் இருப்பது இதுபோன்ற போட்டித் தேர்வுகள் தாம். அதை எழுதி எப்பாடு பட்டாவது ஒரு அரசாங்க உத்தியோகம் வாங்கிவிடுவது. அதிலும் இதுபோன்ற சில்லுருவிகளால் தடை வரும்போது கோபம் தலைகேருகிறது.


திராவிடன் துக்கத்தையும், கோபத்தையுமே வீரமாத்தான் சொல்லி பழக்கம். ஆனால் இங்கே வீரம் என்பது நயவஞ்சகமாய் காரியத்தைச் சாதிப்பது என்று வலியுறுத்தப் படும்போது நாம் இளைய தலைமுறையிடமிருந்து எப்படி ஒரு நல்ல சமூகத்தை எதிர்பார்க்க முடியும்.


சரி இந்த தவறு அடுத்த முறையும் நடக்காது என்பது என்ன நிச்சயம், இதற்க்கு முன்னமே கூட இப்படி நிறைய முறை நடந்திருக்கிறது எல்லா முறையும் தேர்வு எழுதியவர்கள்தான் தண்டனை அனுபவிக்கிறார்கள். இதற்க்கு டி.என்.பி.எஸ்.சி ஆணையத்திலேயே உள்ள ஏதோ ஒரு புல்லுருவி வுதவியிருக்கும். விசாரணை கமிஷன் வைப்பீங்க துறை ரீதியாக நடவடிக்கைன்னு சொல்லி ஒரு பதினைந்து நாள் அரை சம்பளத்துடன் விடுப்பு கொடுத்து மறுபடியும் அவனை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுவீர்கள். இது சரியான தண்டனையா....?


அப்படி யாரேனும் டி.என்.பி.எஸ்.சி ஆணையத்தில் இருந்து இதற்க்கு வுதவியிருப்பர்கலேயானால்...? அவர்களின் சம்பளங்கள் முடக்கப் பட வேண்டும், அவருக்கு வாழ்வாதார படி மட்டுமே (Basic Living Means) வழங்கப் பட வேண்டும், மேலும் அவருக்கு பணிக்குப் பிந்திய சலுகைகளும் நிறுத்தப் பட வேண்டும்.


அப்படியே குறுக்கு வழியில் தேர்வு எழுத வந்தவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள், எந்த தேர்வும் வேண்டாம் ஆனால் அவர் கடைநிலை உழியனாக அலுவலகங்களை சுத்தம் செய்பவனாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவர்கள் எல்லோருடைய சான்றிதழ்களிலும் இவர் திருட்டுத்தனம் செய்து தேர்வெழுத முயற்ச்சித்தார் என்று ஸ்டாம்ப் செயுங்கள்.

சட்டங்கள் கடுமையாகாத வரை குற்றங்கள் குறையாது....!
;

காயடிக்கப்படும் பிஞ்சுகள்


நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது.  எல்லோருமே முதல் வகுப்பில் தேறிவிடுவதில்லை.  அவ்வாறு தேறுபவர்கள் எல்லோரும் வாழ்வில் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவதில்லை.  தோல்வியுற்றவர்களிலும் சிலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் வந்திருகின்றனர் என்பதை காலக் கண்ணாடி காட்டிய வண்ணம் உள்ளது.  ஆனால் இந்த இடுக்கை நமது சமூக அமைப்பும் அது ஒரு பள்ளி மாணவனின் மனதில் வேரூன்றச் செய்யும் எண்ணங்களையும் அதன் வீரியத்தையும் பற்றியது. 

பரீச்சையில் தோல்வி அடைந்தவனைப் புழுவைப் போல பார்கின்றனர்.  இங்கிருந்து ஆரம்பமாகும் இந்த வெற்றுப் பார்வை அந்த மானவனுடனே வளர்ந்து வேரூன்றி கிளைப் பரப்புகிறது.  ஒரு வித தாழ்வு மனப்பான்மையில் அந்த மாணவனைத் தள்ளி, அவனின் தனித்தன்மையையும், வாழ்க்கையின் மீதான அவனின் நம்பிக்கையையும் குலைத்து, குதறிப் போட்டுவிடுகிறது.

கல்வி செல்வம்

நடுத்தர மற்றும் அதற்க்கு கீழுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பைத் தந்தால் அது அவர்களுக்கு மிகப் பெரிய சொத்து என்று நினைக்கிறார்கள்.  படிப்பு ஒரு ஊன்றுகோல்தான், ஆனால் இந்த நடுத்தர வர்க்கம் அதை வைத்து தங்கள் பிள்ளைகளை மந்திரவாதிப் போல் வித்தைக் காட்டச் சொல்லுகிறது.  படிப்பு இவர்களால் ஒரு அட்சயப் பாத்திரமாய் பார்க்கப் படுகிறது.  அதற்காக அவர்கள் தங்கள் சக்திக்கு, தகுதிக்கு மீறி செலவுகளைச் செய்யவும் தயங்குவதில்லை.  இந்த அதீத செலவுகள் அவர்களை நெருக்கும்போது அது பிள்ளைகளின் மேல் வேண்டாத வசவுளை உதிர்த்து அவர்களின் நடைமுறை சுழற்சியை எதிர்திர்த்திசையிலோ எடக்கு மடக்காகவோ சுழலச் செய்கிறது.  

தனியார் பள்ளிகளின் கொள்ளைகள்

தனியார் பள்ளிகள், பிள்ளைகளை ஒரு பொருளாகவே பார்க்கிறது.  அவர்களின் கணக்கில் எல்லா உருப்படிகளும் தேறிவிட வேண்டும் அப்பொழுதுதான் அடுத்த அடுத்த வருடங்களில் தங்களின் கட்டணத்தையும் உருப்படிகளின் எண்ணிக்கையையும் ஏற்றிக் கொள்ள முடியும்.  இந்த வியாபார நோக்கில் பிள்ளைகளின் வாழ்வாதாரம் நசுக்கப் படுகின்றது.  அதைப் பற்றி அவர்களுக்கென்ன கவலை, தங்கள் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றால் போதும்.

எந்த பள்ளியிலும் விளையாட்டு நேரம் சரியாகப் பகுக்கப் படவில்லை.  இந்த வயதில்தான் விளையாடவும் வேண்டும் ஆனால் இது எங்குமே வலியுறுத்தப்படவில்லை.  எல்லா பள்ளிகளும் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடத்தையும், பதினோராம் வகுப்பிலேயே பன்னிரண்டாவது வகுப்பின் பாடத்தையும் நடத்தி பிள்ளைகளுக்கு மோலும் அழுத்தத்தை கொடுக்கின்றனர்.

அரசாங்கத்தின் ஏதேச்சதிகார போக்கு

மருத்துவம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவைதான் ஒரு நல்ல மக்கள் நல அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும்.  இந்த மூன்றும் முறையாக வழங்காத நாட்டில் நல்ல குடிமக்கள் உருவாக மாட்டார்கள் என்பது திண்ணம்.  'என்னைப் பற்றி கவலைப் படாத நாட்டுக்கு நான் ஏன் செய்யவேண்டும்' என்ற எண்ணத்தை நாமே வலிந்து மாணவர்கள் மேல் திணிக்கின்றோம்.  இங்கே கண்ணைப் பறித்து கலர் டிவியும், கரண்டைப் புடுங்கி கிரைண்டர், மிக்சியும் தருகிறார்கள்.  அதையும் நாம் வரிசையில் நின்று வாய் பொத்தி வாங்கிச் செல்வோம், கொஞ்சமும் லஜ்ஜையே இன்றி. 

சமூகத்தின் சடுகுடு

ஊடகங்களும் தங்கள் பங்குக்கு நகைச்சுவை வாரம் தலைமேல் பாரம், வெல்லுங்கள் ஒரு கோடி, ஐ பி எல் என்று கலந்து கட்டி அடிக்கிறது.  கொஞ்சம் சமூக அக்கறையோடு யோசிப்பார்கலேயாயின்.... அவர்கள் இவை எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுத்து, மாணவர்கள் படிக்க வகை ஏற்படுத்தித் தருவார்கள்.

ஆனால் ஊடகங்கள் கடந்த ஆண்டில் முதலாவது வந்தவரின் பேட்டி, ஏதாவது கல்வியியலாளர்களின் வழிகாட்டுதல், இதற்குப் பிறகு என்ன படிக்கலாம் போன்ற ஒரு சில வற்றைப் போட்டு தங்கள் கடமையை முடித்துக் கொள்கின்றன.

இவை எல்லாவற்றையும் தாண்டி வெற்றி பெறுவதென்பது மிக மிகச் சிரமமே!!, ஆனால் சிலர் வெல்கிறார்கள்.  இங்கே நாம் அவர்களைப் பற்றி பார்க்கவில்லை.  ஏதோ ஒரு பாதிப்பில் தேர்வில் சறுக்குபர்வர்கலையே நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.  அவர்களின் நிலை பாவம் சமூகம் அவர்களைப் பார்க்கும் பார்வையே வேறு மாதிரியாக இருக்கிறது.  "என் பைய்யன் அதில் இத்தனை மார்க்கு, இதில் இத்தனை மார்க்கு" என்று மார்தட்டிப் பெருமை படும் பெற்றவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த பிஞ்சுகளை மலடாக்கிச் செல்லுகிறார்கள்.

படிப்பில் தொல்வியுருபவன் வாழ்க்கையே அஸ்தமித்து போய்விட்டதாக ஒரு மாயையை உருவாக்கி இருக்கிறோம்.  அதை முதலில் உடைத்தெறிய வேண்டும் ஏதோ ஒரு காரணத்தால் தொல்வியுருபவனை தேற்றி, நீயும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்று ஆறுதல் சொல்லி திரும்ப முயற்சித்து ஜெயிக்க.... பெற்றோரும், நண்பர்களும், உற்றாரும் உதவவேண்டும்.  இல்லையேல் இது அப்படியே படிமை நிலையாகி, நாளை வளரும் மொட்டுகளை அமுக்கிவிடும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.  படிப்பும் வாழ்க்கையில் ஜெயிக்க முக்கியம் ஆனால் அது மட்டுமே நம் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்பதை இவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இது எல்லா பக்கமிருந்தும் நடை பெறவேண்டும்.  பெற்றோர், பள்ளிகள், ஆசிரியர் மற்றும் சமுதாய அணுகுமுறை ஆகிய தளங்களில் இருந்து இன்றே நடைபெறவேண்டும்.  இல்லையேல் நாம் நம் எதிர்கால சந்ததிக்கு தீங்கிழைத்ததாக நாளைக்கு வரலாறு பதியப் படலாம்.



;

கடவுளே நீ என; கண்டுணர்ந்தவன் நான்....!!!




என் உலகம் உதித்தது
உன் உறவைப் பற்றி;
என் வாழ்க்கை முழுதும்,
வருவேன் உன்னைச் சுற்றி.

ஊர் பல சுற்றி,
உணவு பல உண்டாலும்,
உன் உதிரத்தால் 'பால்'ஆன
சுவைக்கேது ஈடு!!

மஞ்சனைகளும், பஞ்சனைகளும்
பல ரகத்தில் உண்டு;
உன் மடி தரும் சுகம் - அது
கடந்திடும் பல யுகம்.

காப்பியங்களும், காவியங்களும்
தேடித், தேடி வாசித்தேன்.....
உன் ஒற்றை வரி,
கடிதம் போல்....
ஒன்றையும் காணேன்

இசைக்கு ராஜா பலர்
இங்கே உளர்.
"ஏய்.......ய் ராஜா...." என்று
நீ என்னை அழைக்கையில்.....
அதற்க்கேது நிகர்.

நோய் பிணி நீங்க
வாய் வழி மருந்து நூறு
நீ தரும் இஞ்சிச் சாறு;
அதை ஓட்டிடும் தூர.

தொலைவில் இருந்தால்,
தொடர்பு வழி கோடி.
உன் தொப்புள்கோடி ஒன்றுதான்;
இதுக்கெல்லாம் முன்னோடி.

திரைகடலோடி நான்
சேர்த்தைவைகள் துச்சம்.
உன் புன்னைகைதானே,
இதிலெல்லாம் உச்சம்!!!

கடவுளையே எனக்கு,
காட்டியவள் நீ!;
கடவுளே நீ என;
கண்டுணர்ந்தவன் நான்....!!!
;

அரவான் என் பார்வை

வேம்பூர் என்னும் பெயர் ஏற்கனவே 'எஸ்ரா'வின் "நெடுங்குருதி" என்னும் நாவலில் எடுத்தாண்ட ஊருதான். அந்த நாவலில் அந்த ஊரின் வெம்மையையும், அம்மக்களின் வாழ்வையும் கதையோட்டத்திலேயே சொல்லியிருப்பார் 'எஸ்ரா'. கள்ளர்களின் வாழ்வியலைப் பதிவு செய்தது பாராட்டத்தக்கது. எல்லா புராண படங்களும் ராஜாக்களின் வாழ்க்கையே கொண்டிருக்கவேண்டும் என்ற பழம் சினிமா விதியை அனாயாசமாக உடைத்தெரிந்ததற்கு வசந்த பாலனை மனந்திறந்து பாராட்டலாம்.


பசுபதி மற்றும் ஆதியின் நடிப்பு பெரிய பலம் அந்த உடற்கட்டும் கருந்தேகமும் நம் முன்னோர்களை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். ஆதி தன் வரலாற்றில் பதிக்க வேண்டிய பதிவு. பசுபதி 'ஏன்னா நடிப்புடா..?' தமிழ் சினிமா சரியாக பயன் படுத்தாத நடிகர்களில் பசுபதியும் ஒருவர் என்பதை அரவானுக்கு பிறகு அடித்துக் கூறலாம்.


திரு சு.வெங்கடேசனின் சமீபத்திய சரித்திர நாவலான "காவல் கோட்டம்" என்ற நாவலில் வரும் ஒரு பகுதியை கொண்டு இந்த படம் வடிவமைத்ருப்பதாக அறிகிறோம். படத்திற்கு வசனமும் கதையும் இவரே.

"அறுத்துதான் கொல்லணும்னு இல்ல வெதச்சும் கொள்ளலாம்" போன்ற வசனம் கவனத்தை ஈர்க்கின்றன.

சரித்திரப் படம் அதிலும் ஒரு சமூகத்தைச் சொல்லும் படம் என்பதால் வட்டார வழக்குகள் அதிகம் எடுத்தாண்டிருக்கிறார்கள். அதில்தான் சிக்கலே தமிழுக்கே சப்டைட்டில் போடவேண்டிய அவசியம் இருக்கிறது.


கலை இயக்குனர், ஒளிப்பதிவாளரின் திறமை படமெங்கும் மிளிர்கிறது. இசையமைப்பாளர் கார்த்திக் (பின்னணிப் பாடகர்) பாடல்களில் தெரியும் அளவுக்கு பின்னணி இசையில் தெரியவில்லை முதல் படமே சரித்திரப் பின்னணி கொண்ட படமென்பதால் நிச்சயம் நிறைய உழைத்திருக்கிறார் ஆனால் பின்னணி இசையில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம். அடுத்தடுத்த படங்களில் இதனை வெகு எளிதாக எட்டிப் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.


நேர்த்தியாக நெய்யப்பட்ட படமென்றாலும் சில சினிமாத்தனங்கள் தவிர்த்திருக்கலாம், சிலுவை சுமப்பதுபோல உள்ள கடைசி காட்சி, நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் பூப்பதர்க்கான தருனகளை சரிவர சொல்லாதது என சில இருந்தாலும் இது தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு கலைப் படைப்பு என்பதை மறுப்பதற்கில்லை.


ஊடகங்களும், வலைப்பூக்களும் படம் ஆஹா ஓஹோ என்று புகழ்கின்றன ஆனால் இது அடித்தட்டு மக்களை போயிச் சேருமா என்பது சந்தேகமே. பல வசனங்கள் புரியவில்லை என்னும் பேச்சு பரவலாக கேட்கிறது. இலக்கிய தரத்தில் ஒரு படம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் இது பாமரனையும் சென்று சேர வேண்டும் என்பதே என் அவா.
;
 

Blogger