Pages

பம்பாயில் லெக்குதாதா

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
லெக்குதாதா.... புதுசா கல்யாணம் ஆகி, மறு வீட்டுக்கு, தன மனைவியின் சொந்த பந்தங்களைப் பார்க்க..... முந்தைய பாம்பே, இன்றைய மும்பை சென்றார். பக்கத்து ஊருக்கே பஸ்ஸில் போகாத நம்ம லெக்கு, பம்பாய்க்கு ட்ரைனில் போக ஆயத்தமானார். ஊரையே அதிரிபுதிரி ஆக்கினார்.

"அவ அண்ணன்களெல்லாம் ப்ளேன்லதான் வரச் சொன்னாங்க நாந்தே, என்ன கருமம், நாம ட்ரைன்லேயே போலாம்ன்னு சொன்னேம்டே"
என்று பல்லு முளைக்கா பிள்ளையில் இருந்து, பாம்படம்(காது வளையம்) போட்ட செவிடுகள் வரை, ரத்தம் வர ஊதிவிட்டார். தெறிச்சி ஒடுனவங்களையும் புடிச்சி நிறுத்தி.... விடாது 'கருப்பா'னாரு புது மாப்பிள்ளை.

காண்ணுலப் பட்ட எல்லோர்கிட்டயும் "உனக்கென்ன வேணும்டே....! பம்பாய்ல இருந்துன்னு....?" ஏகப்பட்ட லிஸ்ட் வேற ஏத்திக்கிட்டாரு மைண்ட்ல. வெவரமான வெடலைகளப் பார்த்தா... பம்பாய்யோட ஹிஸ்டரியும், பலான ஏரியா அட்ரசையும், பக்காவாப் பத்திக்கிட்டாரு. ஒடிசலான தேகத்துக்கு ஒன்னரை மீட்டருல பேண்ட்டு ஒன்னு, கண்ணப் பறிக்கிற ரோஸ் கலர்ல, ராமராஜன் சர்ட்டு ஒன்னுன்னு, அமர்களப்படுது ஐயா ஏரியா. ஊரே வழியனுப்ப, ஒரு வழியாப் போனாரு.

ஒரு வாரங்கழிச்சி, மிடுக்காப் போனவரு.... கடுப்பாத் திரும்பி வந்தாரு, சரி அலுப்பு போல் இருக்குன்னு, ஆறப்போட்டு, ரெண்டு நாள் கழிச்சி பயணக் கதையக் கேட்டால்.....

"அத்த ஏண்டா கேகுரீகன்னு" பிளாஷ்பேக் ரீல் ஓட்டினார்.

"எவ்வளோ பெரிய ட்ரைன்டா....! எங்கள ஸ்டேஷன்லையே பிக்அப் பண்ணி அவன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனான் பெரிய மச்சினன்"

"ம்ம் விருந்தெல்லாம் தடபுடல் தானே...!"

"அட போடா நீ வேற வெந்த புண்ணுல வெரல விட்டு நோண்டாத... முழுசாக் கேளுவே..."

"சரி லெக்கு, சொல்லு"

"நல்ல சௌகர்யமா இருங்க மச்சான்னு.... மரியாதைய மொந்த மொந்தயாக் கொடுத்தாங்க, மச்சினனும் அவன் மனைவியும். ஒரு சின்ன ஹால்.... அதுதான் அவன், அவன் பொண்டாட்டி அப்புறம் நாலு பிள்ளைகள்ன்னு, ரொம்ப சின்ன இடம். அதிலேயே சாப்பிடனும், தூங்கனும் இதுல சிமென்ட் சீட் வேறு சூட்டக் கிளப்புது..."

"அப்போ உங்களுக்கு தனியா ரூமெல்லாம் இல்லையா.....?"

"அட நீ வேற, 'ஆடிக் காத்துல அம்மியே பறக்குதாம்... அழுக்கு வெட்டி என்னாகும்' இங்கெல்லாம்... இப்டித்தான் மச்சான், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கன்னு, மச்சான் ரொம்ப கெஞ்சினான். நானும் வெறுப்ப மறச்சிட்டு..., இனிப்பா நின்னேன். ஒரு சேலையில் மறைப்புக் கட்டி, எங்க ரெண்டு போரையும் தூங்க வச்சாங்க. நைட்ல காலைத்தூக்கி பக்கத்துலப் போட்டா.... மச்சானோட சின்னப் பையன் உருண்டு வந்து எம்பக்கத்துல படுத்திருக்கான்"

"அப்புறம்...."

"அப்றோம் என்ன அப்றோம் காலப் போட்டதுனால தப்பிச்சேன்"

""ஐயோ...!"

"சரி இதுதான் இவங்க வாழ்க்கை, ரொம்பப் பாவம்ன்னு, எனக்கு நானே சால்ஜாப் சொல்லி, ஒரு நைட்ட ஓட்டினேன். அதுக்கப்புறம் இன்னொரு அண்ணன் வீடு, சரி இவன்தான் இப்படி, இன்னொருத்தனாவது நல்லா இருப்பான்னு நம்பி... போனேண்டா, போய் பார்த்தா.... பெரியவனேப் பரவாயில்லைன்னு தோணிச்சி..."

"ஏன்...?"

"அட அந்த வீடு ஒரு குடிசைடா, மண் சுவரு மொழுகியத் தரைன்னு, அதிலும், இவன் வீட்டை விட இன்னும் சின்னது. ஆனால், அதே அளவு ஆள்கள். ஆஹா இவனுக்கு அவன் பரவாயில்லைன்னு..., இன்னொருத்தன் வீட்டுக் போனால்.... அது டால்டா டின்ல கட்டிய வீடு, ஆஹா நம்ம மச்சான்கள் பரவாயிலைன்னு வேறொருத்தர் வீட்டுக்குப் போனால்... அது யூரியா பேக்ல கட்டிய வீடு. ஆஹா... சண்டாளச் சிரிக்கி, நம்மள நடு ரோட்டுக்குக் கொண்டு போய்டுவாப் போல இருக்கேன்னு... உஷாராவி 'சடன்னாக்' கிளம்பி, சட்டுபுட்டுன்னு வந்துட்டேன்டா...."

"இதுல அந்த சிரிக்கி மவ, ஏகப் பட்ட பில்டப்புகளப் போட்டு என்னம்மா உசுப்பேத்துனா.... 'என் அண்ணன்கள், பம்பாய்ல பர்பி சுடுறாங்க, பஞ்சு மிட்டாய் பொசுக்குராங்கன்னு..., பக்கம் பக்கமா பாசப் புராணம் பாட்னா...' கேக்குறவன் கேனையா இருந்தா....., 'லண்டன் லாட்ஸ்' மைதானமே எங்கப்பா கெட்டுனதுன்னு அடிச்சி உடுவாளுக...."

"அப்போ ஊர் சுத்திப் பார்க்கலையா?"

"அட.... மொழி தெரியாத ஊரில் எங்கப் போவுரதுன்னு, எங்கயுமேப் போவலடா"

"அப்போ அட்ரஸ் வாங்கிட்டுப் போனியே அங்கேன்னு?" அழுத்தினான் அருள்

"அட உள்ளூர் கிணத்துலேயே தூர்வார முடியலே, இதில் குளம், கம்மாயின்னு எவன் அலைவான்"

"அப்படி போடு லெக்கு..."

இவ்வளவு ஜம்பமாகப் பேசினாலும், மனைவியின் அண்ணன்கள்தான் இவர் குடும்பத்தை இன்றுவரை காப்பாற்றுகிறார்கள். ;

2 comments:

கலையரசன் said...

லெக்கு தாதா வீடு எப்படியிருக்குமாம்?
நகைச்சுவை நடை அருமை!

பித்தன் said...

வருகைக்கு நன்றி கலையரசன்.......

 

Blogger