Pages

நீ சந்தோசமாகத்தான் இருக்கியா?

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பெண்கள் எப்போதுமே வேர் போன்றவர்கள், தன் சுக துக்கங்களை மறந்து அல்லது மறைத்து நாள்கடத்துபவர்கள். கலாசார கயிற்றில் கட்டுண்டு, பெண்களின் எவ்வளவோ ஆசைகள் முளையிலேயே வெட்டி வீசப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தந்தைக்கும் மகளுக்குமான உறவு. எதிர் பாலின கவர்ச்சி என்பது... பிள்ளைப் பிராயத்திலேயே துளிர் விடுகிறது, மார்மீதும், தோள்மீதும் தூக்கி வளர்த்த தந்தையே.... ஆனாலும், ஒரு வயது வரை என்ற எல்லையை அவர்களுள் வன்திணிப்பு செய்திருக்கிறோம். நடை, உடை, பாவனை, சிரிப்பு என்று எல்லாமே இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

நீ சந்தோசமாகத்தான் இருக்கியா?
என்னங்க இது கேள்வி? இதுதான் அனேக மனைவியரின் பதிலாக எப்பவுமே இருக்கும். இதன் உச்சரிப்புத் தொனியில் இருக்கு 'மெய்'யான பதில். 'மெய்'யான வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, 'மெய்' மட்டும் வாழ்வது பலரது வாழ்க்கை.

என் மனைவியின் சென்ற பிறந்தநாளுக்கு அவளுக்கு எதுவுமே தரவில்லை, ஆனால் அதை அவள் கிஞ்சித்தும் வெளிப்படுத்தியதில்லை, இதுவரையில்.
அவள் தந்தை சவுதியில் இருந்தார், தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்... வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஊர் திரும்புவதாக ஏற்பாடு. நான் உடனே அவளிடம் "அவரை இங்கு வேண்டுமென்றால் ஒரு பத்து நாள் இருந்துவிட்டு செல்லச் சொல்" என்றேன். அவரும் வர விருப்பம் தெரிவித்ததினால்... விசா ஏற்பாடு செய்தேன். வயதைக் காரணம் காட்டி விசா மறுக்கப் பட்ட போதும், பெரும்பாடு பட்டு விசா ஏற்பாடு செய்தேன்.

அவள் தந்தை கடந்த இருபத்தைந்து வருடமாகவே வனவாசம்தான் அனுபவித்தார். என் இரண்டு பிள்ளைகளைக் கூட அவர் பார்த்ததில்லை. அவர் குடும்பத்துடன் செலவிட்ட நேரமும், நாட்களும் ரொம்ப ரொம்ப கம்மி.

ஓடாய் உழைத்து ஒடுங்கிய தேகம், நரைக்கூடிக் கிழப் பருவம் எய்தியும்.... எல்லா பிள்ளைகளுக்கும், தந்தை இன்னும் தந்தைதானே. அவள் ஒரு குழந்தையாய் தன் தந்தைக்கு ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். "எங்க வீட்ல கூட இப்படி இருந்தது இல்லங்க, நாங்க நாலு பேரும் அவரோடு தனியாக வெளியே போனது கூட கிடையாது" என்றாள்.

அவர் வந்து தங்கிய நாட்களில்...., நான் என்னை அன்னியப் படுத்திக் கொண்டு, அவர்கள் இருவரையும் ஊர் சுற்றிப் பார்க்க அனுப்பினேன். எங்கும் இருவரும் ஒன்றாகவே என் பிள்ளைகளுடன் சென்றார்கள். அவள் பால்யம் திரும்பக் கிடைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் அவள் முகம் பூரித்துப் போய் இருந்தது.

நான் மிகுந்த செருக்காக....! (ஏதோ காவேரியையே கொண்டுவந்தது மாதிரி)

நீ சந்தோசமாகத்தான் இருக்கியா?
என்ன இது கேள்வி?......என்றாள் சற்று எரிச்சலாக.... ;

1 comment:

Unknown said...

:)

W r u so far?

nice

 

Blogger