Pages

காயடிக்கப்படும் பிஞ்சுகள்

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது.  எல்லோருமே முதல் வகுப்பில் தேறிவிடுவதில்லை.  அவ்வாறு தேறுபவர்கள் எல்லோரும் வாழ்வில் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவதில்லை.  தோல்வியுற்றவர்களிலும் சிலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் வந்திருகின்றனர் என்பதை காலக் கண்ணாடி காட்டிய வண்ணம் உள்ளது.  ஆனால் இந்த இடுக்கை நமது சமூக அமைப்பும் அது ஒரு பள்ளி மாணவனின் மனதில் வேரூன்றச் செய்யும் எண்ணங்களையும் அதன் வீரியத்தையும் பற்றியது. 

பரீச்சையில் தோல்வி அடைந்தவனைப் புழுவைப் போல பார்கின்றனர்.  இங்கிருந்து ஆரம்பமாகும் இந்த வெற்றுப் பார்வை அந்த மானவனுடனே வளர்ந்து வேரூன்றி கிளைப் பரப்புகிறது.  ஒரு வித தாழ்வு மனப்பான்மையில் அந்த மாணவனைத் தள்ளி, அவனின் தனித்தன்மையையும், வாழ்க்கையின் மீதான அவனின் நம்பிக்கையையும் குலைத்து, குதறிப் போட்டுவிடுகிறது.

கல்வி செல்வம்

நடுத்தர மற்றும் அதற்க்கு கீழுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பைத் தந்தால் அது அவர்களுக்கு மிகப் பெரிய சொத்து என்று நினைக்கிறார்கள்.  படிப்பு ஒரு ஊன்றுகோல்தான், ஆனால் இந்த நடுத்தர வர்க்கம் அதை வைத்து தங்கள் பிள்ளைகளை மந்திரவாதிப் போல் வித்தைக் காட்டச் சொல்லுகிறது.  படிப்பு இவர்களால் ஒரு அட்சயப் பாத்திரமாய் பார்க்கப் படுகிறது.  அதற்காக அவர்கள் தங்கள் சக்திக்கு, தகுதிக்கு மீறி செலவுகளைச் செய்யவும் தயங்குவதில்லை.  இந்த அதீத செலவுகள் அவர்களை நெருக்கும்போது அது பிள்ளைகளின் மேல் வேண்டாத வசவுளை உதிர்த்து அவர்களின் நடைமுறை சுழற்சியை எதிர்திர்த்திசையிலோ எடக்கு மடக்காகவோ சுழலச் செய்கிறது.  

தனியார் பள்ளிகளின் கொள்ளைகள்

தனியார் பள்ளிகள், பிள்ளைகளை ஒரு பொருளாகவே பார்க்கிறது.  அவர்களின் கணக்கில் எல்லா உருப்படிகளும் தேறிவிட வேண்டும் அப்பொழுதுதான் அடுத்த அடுத்த வருடங்களில் தங்களின் கட்டணத்தையும் உருப்படிகளின் எண்ணிக்கையையும் ஏற்றிக் கொள்ள முடியும்.  இந்த வியாபார நோக்கில் பிள்ளைகளின் வாழ்வாதாரம் நசுக்கப் படுகின்றது.  அதைப் பற்றி அவர்களுக்கென்ன கவலை, தங்கள் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றால் போதும்.

எந்த பள்ளியிலும் விளையாட்டு நேரம் சரியாகப் பகுக்கப் படவில்லை.  இந்த வயதில்தான் விளையாடவும் வேண்டும் ஆனால் இது எங்குமே வலியுறுத்தப்படவில்லை.  எல்லா பள்ளிகளும் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடத்தையும், பதினோராம் வகுப்பிலேயே பன்னிரண்டாவது வகுப்பின் பாடத்தையும் நடத்தி பிள்ளைகளுக்கு மோலும் அழுத்தத்தை கொடுக்கின்றனர்.

அரசாங்கத்தின் ஏதேச்சதிகார போக்கு

மருத்துவம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவைதான் ஒரு நல்ல மக்கள் நல அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும்.  இந்த மூன்றும் முறையாக வழங்காத நாட்டில் நல்ல குடிமக்கள் உருவாக மாட்டார்கள் என்பது திண்ணம்.  'என்னைப் பற்றி கவலைப் படாத நாட்டுக்கு நான் ஏன் செய்யவேண்டும்' என்ற எண்ணத்தை நாமே வலிந்து மாணவர்கள் மேல் திணிக்கின்றோம்.  இங்கே கண்ணைப் பறித்து கலர் டிவியும், கரண்டைப் புடுங்கி கிரைண்டர், மிக்சியும் தருகிறார்கள்.  அதையும் நாம் வரிசையில் நின்று வாய் பொத்தி வாங்கிச் செல்வோம், கொஞ்சமும் லஜ்ஜையே இன்றி. 

சமூகத்தின் சடுகுடு

ஊடகங்களும் தங்கள் பங்குக்கு நகைச்சுவை வாரம் தலைமேல் பாரம், வெல்லுங்கள் ஒரு கோடி, ஐ பி எல் என்று கலந்து கட்டி அடிக்கிறது.  கொஞ்சம் சமூக அக்கறையோடு யோசிப்பார்கலேயாயின்.... அவர்கள் இவை எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுத்து, மாணவர்கள் படிக்க வகை ஏற்படுத்தித் தருவார்கள்.

ஆனால் ஊடகங்கள் கடந்த ஆண்டில் முதலாவது வந்தவரின் பேட்டி, ஏதாவது கல்வியியலாளர்களின் வழிகாட்டுதல், இதற்குப் பிறகு என்ன படிக்கலாம் போன்ற ஒரு சில வற்றைப் போட்டு தங்கள் கடமையை முடித்துக் கொள்கின்றன.

இவை எல்லாவற்றையும் தாண்டி வெற்றி பெறுவதென்பது மிக மிகச் சிரமமே!!, ஆனால் சிலர் வெல்கிறார்கள்.  இங்கே நாம் அவர்களைப் பற்றி பார்க்கவில்லை.  ஏதோ ஒரு பாதிப்பில் தேர்வில் சறுக்குபர்வர்கலையே நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.  அவர்களின் நிலை பாவம் சமூகம் அவர்களைப் பார்க்கும் பார்வையே வேறு மாதிரியாக இருக்கிறது.  "என் பைய்யன் அதில் இத்தனை மார்க்கு, இதில் இத்தனை மார்க்கு" என்று மார்தட்டிப் பெருமை படும் பெற்றவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த பிஞ்சுகளை மலடாக்கிச் செல்லுகிறார்கள்.

படிப்பில் தொல்வியுருபவன் வாழ்க்கையே அஸ்தமித்து போய்விட்டதாக ஒரு மாயையை உருவாக்கி இருக்கிறோம்.  அதை முதலில் உடைத்தெறிய வேண்டும் ஏதோ ஒரு காரணத்தால் தொல்வியுருபவனை தேற்றி, நீயும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்று ஆறுதல் சொல்லி திரும்ப முயற்சித்து ஜெயிக்க.... பெற்றோரும், நண்பர்களும், உற்றாரும் உதவவேண்டும்.  இல்லையேல் இது அப்படியே படிமை நிலையாகி, நாளை வளரும் மொட்டுகளை அமுக்கிவிடும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.  படிப்பும் வாழ்க்கையில் ஜெயிக்க முக்கியம் ஆனால் அது மட்டுமே நம் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்பதை இவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இது எல்லா பக்கமிருந்தும் நடை பெறவேண்டும்.  பெற்றோர், பள்ளிகள், ஆசிரியர் மற்றும் சமுதாய அணுகுமுறை ஆகிய தளங்களில் இருந்து இன்றே நடைபெறவேண்டும்.  இல்லையேல் நாம் நம் எதிர்கால சந்ததிக்கு தீங்கிழைத்ததாக நாளைக்கு வரலாறு பதியப் படலாம்.;

2 comments:

தமிழானவன் said...

நல்ல பதிவு. கல்வி வணிகர்களும் ஊடகங்களும் மாணவர்களுக்கு மிகுந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். நானும் இது குறித்து எழுதியுள்ளேன்.

தோல்வியைத் திணிக்கும் கல்வியும் சமூகமும்

பித்தன் said...

வருகைக்கு நன்றி தமிழானவன்...

 

Blogger