Pages

என் நெஞ்சே... என்னைச் சுடும்

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
"டேய்.... ஜிக்கான், உங்கப்பா வராரு" என்றான் மணி
"வரட்டும், இன்று வெள்ளிக்கிழமை அதனால் அவர் வருகிறார்" என்றேன் "நீபோய் பாக்கலையா?"
"அப்புறம் பாத்துக்கலாம்" என்று சொல்லி, எங்கள் ஐஸ் பாய் விளையாட்டைத் தொடர்ந்தோம். இரவு பத்துமணி சுமாருக்கு, என் சித்தி வந்து எங்களை அடித்து இழுத்துச் செல்லும்வரை, தெருவில்தான் இருந்தோம்.

இதுதான் வாடிக்கை, யாருக்காகவும், எதுக்காகவும் நாங்கள், எங்கள் விளையாட்டை நிறுத்தியதில்லை. ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கு, ஒவ்வொரு விளையாட்டு, இது எல்லாமே நேரம், காலம், வானிலை ஆகியனவற்றுக்குத் தகுந்தாமாதிரி விளையாடுவோம். பொதுவாக இரவில் ஐஸ் பாய்தான் விளையாடுவோம்.

"அப்பா!! எப்போ வந்தீங்க?"
"நா வந்து ரொம்ப நேரம் ஆச்சு, எப்படி கருத்துப்போய் இருக்கனுங்க பார்" என்றார் அப்பா
"ஆமா!!!, எங்கே நம்ம பேச்சைக் கேகுரானுக, பொழுதன்னிக்கும் வெயிலில் ஆட்டம்"

"நாமெல்லாம் சென்னைக்கு போகிறோம்" என்று அப்பா சொன்னதுதான் தாமதம்
"நான் வரமாட்டேன்" என்று சொன்னேன். தம்பியும் என்னுடன் சேர்ந்துக் கொண்டான்.
"ஏன் ?" என்று அப்பா கேட்டார்.
"இல்லை, இங்கேதான் என் பிரெண்ட்ஸ் இருக்கிறார்கள். நான் வரமாட்டேன்." "இல்லை கண்ணா, அப்பாக்கு சென்னைக்கு மாற்றலாகிவிட்டது . இங்கிருந்து அப்பாவால் ஆபிஸ் போய்வர முடியவில்லை, அப்பாவை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. அவருக்கு யார் சாப்பாடு போடுறது?" இது அம்மா "வேணுமென்றால், அப்பாவை வெளியில் சாப்பிடச் சொல்லு" என்றேன்

அப்பா கடுப்பாகி "உங்களுக்கெல்லாம், பார்க்கமுடியாது... நாம அடுத்தமாதம் சென்னைக்குப் போகிறோம். உனக்கும் தம்பிக்கும் ஸ்கூல் கூட பார்த்தாகிவிட்டது. "

மறுப்புக்கு காரணம், இங்கே எங்களுக்கு நிறைய நண்பர்கள், காலை எழுந்ததுமுதல் இரவு தூங்கப்போவது வரை, விளையாட நிறைய விளையாட்டுகள். கால் சட்டை மட்டுமே அணிந்து ஊரெல்லாம் சுற்றுவோம். கில்லி, நாடுபிடி ஆட்டம், கபடி, கையெறி பந்து, திருடன் போலீஸ், காற்றாடி விடுதல், ஓனான் பிடித்து கயிறு கட்டி விளையாடுதல், பஸ் விளையாட்டு, சினிமா படம் காட்டுதல், உமி மலையில் சறுக்குதல், வேர்கடலை பறித்துச் சாப்பிடித்தல், பம்புசெட்டில் குளிப்பது, பனங்காயில் வண்டிசெய்து விளையாடுதல், தட்டான் பிடிப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

"ச்சே இந்த அப்பாக்கு ஏன்தான் இப்படி ஒரு வேலையோ?" என்றான் தம்பி "அப்படியே இருந்தாலும்...., இவரால் இங்கிருந்தும் போக முடியாதாம்? அங்கேயும் தனியாக இருக்கமுடியாதம்? என்ன அநியாயம்? அதற்காக நம்மளை அவருடன் கூட்டிக் கொண்டுபோவது ஒத்துக் கொள்ளக் கூடாது. இவருக்கு சோறாக்கிப் போட மட்டும்தான் அம்மா இருங்காங்களா ?" "இல்லடா, இந்த அம்மாக்குத்தான் அறிவே இல்லை. அப்பா கூப்பிட்டா போயிடறதா? நம்ம மேல யாருக்குமே அக்கறை இல்லை. நமக்கு ஏன்தான் இப்படி ஒரு அப்பாவோ ?" என்றான் தம்பி. இரவு தூங்க வெகு நேரம் பிடித்தது. நானும் தம்பியும் எப்படி ஊருக்குப் போகாமல் தப்பிப்பது என்று திட்டம் தீட்டினோம்.

மறுநாள் வழக்கம்போல் காலையிலேயே விளையாடச் சென்று விட்டோம். இரவு நடந்தது எதுவும் எங்கள் நினைவில் இல்லை. உச்சி வெய்யிலில், பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது, தம்பிதான் அதை கணேஷிடம் "நாங்கல்லாம் ஊருக்குப் போறோமாம், இனிமே அங்கேதான் இருப்போம். எங்களுக்கு புது ஸ்கூல் கூட பார்த்தாயிற்று" என்றான் இதைக் கெட்ட எல்லோருக்கும் அதிர்ச்சி!!! யாராலும் இந்த அதிர்வைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

என்னென்னமோ ஐடியாவெல்லாம் ஆளாளுக்குச் சொன்னார்கள். அதில் எங்கப்பாவை 'அரளிவிதை' அரைத்துக் கொல்வதுவரை. எங்களுக்குத் தெரிந்த எல்லா கோயிலுக்கும் சென்று வேண்டினோம், 'தர்கா' சென்று பாத்தியா செய்தோம். ஆனால் ஒன்றும் பலிக்காமல், எங்களை கூட்டிக் கொண்டு ஊருக்கு கிளம்பினார்கள் எங்களை வழியனுப்ப ஒரு பட்டாளமே வந்தது. ஒவ்வொருவரிடமும் விடைப் பெற்றுக் கிளம்ப வெகு நேரம் பிடித்தது. நானும் தம்பியும் திண்ணையில் இருந்த துணைப் பிடித்துக் கொண்டோம், ஐந்தாறு பேர் சேர்ந்து எங்களை அப்படியே குண்டுக்கட்டாகத் தூக்கி வண்டியில் ஏற்றினார்கள், அப்படியும் தம்பி ஓரிரு முறை வண்டியில் இருந்து குதித்தான். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை.

காஞ்சியில் இருந்து சென்னைக்கு வரும்வரை, நானும் தம்பியும் அழுதுக் கொண்டே வந்தோம். அப்பா எங்களுக்காக பார்த்துவைத்த வாடகை வீடு வந்ததும் எல்லோரும் இறங்கினோம். ஒரு வாரம் வரை சாப்பிட மறுப்பது, ஏதாவது சொன்னால் செய்யாமல் இருப்பது என்று எங்களுக்குத் தெரிந்த எல்லா தர்ணா போராட்டமும் செய்தோம். பின்னர், எங்களை புது ஸ்கூல் சேர்த்தார்கள். எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள், தம்பி அப்பாவிடம் "ஏம்ப்பா அவர்கள் எல்லோரும் இங்கலீஷ் போசுறாங்க, அவங்க எல்லாம் இங்கலிஷ்காரங்களா ?" என்றான்
"இல்லை!, இங்கே எல்லோரும் இங்கலீஷ்தான் பேசவேண்டும்" என்றார்.

பின், மாலை வீடு வந்ததும் எங்கள் தெரு நண்பர்களை, எங்களுக்கு அறிமுகப் படுத்தி "இவர்களையும் உங்களுடன் விளையாடச் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றார் என் அப்பா. நான் சற்று உயரமானவனிடம் கேட்டேன் "என்ன விளையாடுகிறீர்கள்?" "கிரிக்கெட் " என்றான், "உனக்கு கிரிகெட் விளையாடத் தெரியுமா?" என்றான் "தெரியாது!" என்றேன் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, ஒப்புக்குச் சப்பாணியாக என்னையும் தம்பியையும் சேர்த்துக் கொண்டார்கள். கொஞ்சநாள் பிடித்தது இந்த கிரிக்கெட்ஐக் கற்றுக்கொள்ள.

அப்பா தம்பியிடம் ஒருநாள், "என்ன இந்த ஊர் நண்பர்கள் எல்லாம் பிடித்துவிட்டதா?" "ஆங்... ஆனால்.... இந்த ஊர் விளையாட்டுத்தான் ரொம்ப போர்ப்பா, இவர்களுக்குத் தெரிந்த ஒரே விளையாட்டு கிரிக்கெட், அதை விட்டால் இவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்றான் அப்பா "நம்ம ஊரில் நிறைய வயல் வெளி இருக்கு, இங்கே அப்படி இல்லை, அதனால்தான் இப்படி" என்றார். ஆனாலும் எனக்கும் தம்பிக்கும் ஊர்போல் வரவில்லை, எப்படா லீவ் விடுவார்கள் ஊருக்குப் போலாம் என்று நாட்கள் போகும். இப்படியே இருந்து படித்து இன்று திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் எனக்கு.

இருபது வருடம் கழித்து இன்று..........

என் மனைவியை துரிதப் படுத்தினேன் இன்னும் இரண்டுமணி நேரத்தில், நாங்கள் ஏர்ப்போர்ட் செல்லவேண்டும். என் பிள்ளைகள் இருவரும் அவர்களுக்குள்ளாகவே wwf cards வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். என் தந்தை என் அருகில் வந்து "நீ கண்டிப்பாக மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டுதான் போக வேண்டுமா?, பல்வேறு மொழி பேசுபவர்கள் இருப்பார்கள், பிள்ளைகளுக்கு கொஞ்ச கஷ்டமாக இருக்கும்" என்றார். "அப்பா உங்களுக்குத் தெரியாதது இல்லை, ஒரு மனைவியாய் எனக்கு சமைத்துப் போட, என் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள மட்டுமின்றி, அவளின் தேவை எனக்கு இயற்கையின் நியதி"என்றேன் "அப்புறம் உன் இஷ்டம்" என்றார்.

என் பிள்ளைகள் தங்களுக்கு நேரப்போகும் கொத்தடிமைத்தனத்தை சிறிதேனும் எண்ணாமலே எல்லோருக்கும் டாட்டா காட்டிக் கொண்டிருந்தனர். ஒருநாள் பக்கத்து வீட்டு ஜோர்டான் நாட்டுக்காரியிடம் என் மனைவி "என் பிள்ளைகள் ரொம்ப சமத்து, வெளியேவே வரமாட்டார்கள். இங்கே வந்த பிறகு, அவர்களுக்கு துணை யாரும் இல்லை, இரண்டு அறைக்குள், தப்புத் தப்புத்தப்பாக கேரம், போகோ, கார்டூன் நெட்வொர்க், அனிமல் பிளானெட் என்று அவர்கள் விளையாடுவார்கள்" என்றாள். ;
 

Blogger