Pages

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

கடவுளே நீ என; கண்டுணர்ந்தவன் நான்....!!!




என் உலகம் உதித்தது
உன் உறவைப் பற்றி;
என் வாழ்க்கை முழுதும்,
வருவேன் உன்னைச் சுற்றி.

ஊர் பல சுற்றி,
உணவு பல உண்டாலும்,
உன் உதிரத்தால் 'பால்'ஆன
சுவைக்கேது ஈடு!!

மஞ்சனைகளும், பஞ்சனைகளும்
பல ரகத்தில் உண்டு;
உன் மடி தரும் சுகம் - அது
கடந்திடும் பல யுகம்.

காப்பியங்களும், காவியங்களும்
தேடித், தேடி வாசித்தேன்.....
உன் ஒற்றை வரி,
கடிதம் போல்....
ஒன்றையும் காணேன்

இசைக்கு ராஜா பலர்
இங்கே உளர்.
"ஏய்.......ய் ராஜா...." என்று
நீ என்னை அழைக்கையில்.....
அதற்க்கேது நிகர்.

நோய் பிணி நீங்க
வாய் வழி மருந்து நூறு
நீ தரும் இஞ்சிச் சாறு;
அதை ஓட்டிடும் தூர.

தொலைவில் இருந்தால்,
தொடர்பு வழி கோடி.
உன் தொப்புள்கோடி ஒன்றுதான்;
இதுக்கெல்லாம் முன்னோடி.

திரைகடலோடி நான்
சேர்த்தைவைகள் துச்சம்.
உன் புன்னைகைதானே,
இதிலெல்லாம் உச்சம்!!!

கடவுளையே எனக்கு,
காட்டியவள் நீ!;
கடவுளே நீ என;
கண்டுணர்ந்தவன் நான்....!!!
;

தொலைந்து போனவன்

வெட்டியான ஒரு
நாளில்,
கிட்டியது ஓர்
நிழற்படம்

கால்சட்டை வயதில்,
கை கோர்த்து
நிற்கும்,
பெயர் மறந்த நண்பனை

கணிப்பொறி உதவியுடன்
இணையங்களில் தேடுகிறேன்...?
'முகநூலில்' இருப்பானோ...?
'டுவீட்டி'யாய் வருவானோ...?

பள்ளிப் படிப்பை
பாதியில் விட்டவனை,
பரந்த உலகில்
எங்கனம் தேடுவது.....?
;

வங்கத்தாயே எங்களை வஞ்சித்தாயே

வலை மட்டுமே
வீசி வாழ்ந்த எங்களை
அலை வீசி கொன்று குவித்தாய்!

உப்பின் சுவை கூட்டவே
எங்கள் கண்ணீரைக் கேட்டாயோ!
உடலுக்குத்தான் உயிர் தேவை...
கடலுக்குமா?

உயிர் கொடுத்த நீயே
அதைப் பறித்தாயே,
அதீத கோபத்தால் - உந்தன்
குணமிழந்தாயே!

முறையாக அலை வீச
நுரை மீந்துப்போகும்,
இன்று நீ வீசிய வீச்சில் - எங்கள்
நுரையீரல் காய்ந்து போகும்...

படி தாண்டா தத்துவம்
பத்தினிக்கு மட்டுமா?
பரந்த கடலே - உனக்கும்தான்!

ஒரு முறை நீ வெகுண்டாய்...
சேதங்கள் ஆயிரம்
மறுமுறை நீ வருவாய்
எங்கள் பாதத்தை மட்டும் தீண்ட
எங்கள் பாதத்தை மட்டும் தீண்ட ....


;
 

Blogger