Pages

புரச்சி 2020(REVELOUTION 2020) - காதல், கரப்ஷன், கனவு



சேத்தன் பகத் எனக்கு அறிமுகமானது அவருடைய 'TWO STATES' நாவலில்தான். அது அவர் தன் தமிழ் நாட்டு மனைவியை எப்படி கைப்பிடித்தார் என்பதைப் பற்றிய கதை. அந்நேரத்தில் 'THREE IDIOTS' வந்தது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. இதுவும் அவரின் நாவலைத் தழுவி எடுக்கப் பட்டப் படம்தான் என்று அறிய முடிந்தது.

உடன் அவரது 'TWO STATES' நாவலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன் ஈர்ப்புவிசை உள்ள எழுத்து நடை, பின்னர் அவரது முதல் நாவலான 'FIVE POINT SOMEONE' (THREE IDIOTS) வாங்கிப்ப் படித்தேன் அதன் பின்னர் அவரது மற்ற நாவல்களான ONE NIGHT @ CALL CENTRE, THREE MISTAKES OF MY LIFE. இதில் ONE NIGHT @ CALL CENTREம் ஹிந்தி சினிமாவாக வந்தது.

மெல்லிய நகைச்சுவை இழையோடும் எழுத்து நடை, எல்லா கதைகளிலும் வரும் நாயகிகள் குறைந்த பட்சம் WINEஆவது சாப்பிடுவார்கள், திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வார்கள், இவை வடஇந்திய காலாச்சார வழியாகவும் இருக்கலாம், பாய் NEXT DOOR கதை மாந்தர்களை வைத்து கதை சொல்லல் என்று இன்றைய இளைஞ்சனர்களின் நாடித்துடிப்பு எழுத்தாளராய் பரிணமித்துள்ளார்.

இந்த REVELOUTION 2020 வெளியாவதற்கு முன்னமே ஐந்து லட்சம் பிரதிகள் முன் பதிவு செய்யப் பட்டன. மிகவும் ஆவலைத் தூண்டிய நாவல் எடுத்த 42 மணி நேரத்தில் என் கையை விட்டு அகலாமல் அதனுடனேயே மூழ்கி படிக்க வைத்தது. அவரது மற்றைய கதைகளைப் போலவே இதிலும் சினிமாத்தனமான ஒரு முடிவுதான், ஆனால் மிகத் தகுதியான முடிவு என நம்மை நினைக்க வைத்திருக்கிறார்.

இதுவும் கண்டிப்பாக ஒரு சினிமாவாக வெளிவரத் தகுதியுள்ள ஒரு கதைதான் கண்டிப்பாக இதை இன்றைய இளம் ஹிந்தி ஹீரோ யாராவது நடிக்க வெளிவருவதை எதிர்பார்க்கலாம். தமிழில் தனுஷ் மற்றும் சிம்பு செய்வார்களேயானால் படம் கண்டிப்பாக சூப்பர் டுப்பர் ஹிட். தனுஷ் இந்த கதையில் வரும் கோபாலாகவும் சிம்பு ராகவ் ஆகவும் நடித்தால் நன்றாக இருக்கும். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்தால் எல்லா மொழிகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து இதில் தனுஷும் சிம்புவும் சேர்ந்து நடிப்பது நடக்காத காரியம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே அதனால் சிம்பு பதில் ஜீவா நடித்தால் நன்றாக இருக்கும்.

கதை என்னவென்றால் வழக்கமான முக்கோணக் காதல் கதைதான். கோபால், ஆர்த்தி மற்றும் ராகவ் மூவரும் சிறுவயது முதலே நண்பர்கள், வளர்கையில் வாழ்க்கை அவர்களை எப்படி தன் போக்கில் இழுத்துச் சென்று நிறுத்துகிறது என்பதை 2௯௫ பக்கங்களை நிரப்பி சொல்லி இருக்கிறார்.
;

குப்ப மேட்டரு.......

சேத்தன் பாகத்தின் REVOLUTION 2020 படித்துக் கொண்டிருக்கிறேன், மிக நேர்த்தியான கதை சொல்லல். கையில் எடுத்ததும் முடித்துவிட துடிக்கும் ஈர்ப்பு விசை எழுத்து நடையில் சும்மா வெண்ணையில் ஓடும் தேனாய் வார்த்தை கோர்வையுடன், எளிய ஆங்கில நடையில் செல்கிறது. முடித்ததும் அதைப் பற்றி ஒரு பதிவு போட்டு உங்களை எல்லாம் டரியலாக்கும் திட்டம் உண்டு.

முதலில் சேத்தனின் TWO STATESதான் வாங்கிப் படித்தேன், பின்னர் அவரின் மற்ற நாவல்களையும் தேடித் தேடி படிக்க வைத்தார். இன்றைய கால இளைஞசர்களின் நாடித்துடிப்பை தேடித் பிடித்து எழுதுகிறார்.

----------------XXX-----------XXX---------------XXX-----------------------

உள்ளாட்ச்சித் தேர்தல் முடிவும் வந்துவிட்டது இனி இந்த ஆட்சி தன் பாதையில் முழு வேகத்துடன் பயனிக்கலாம்தான் ஆனால் அதற்க்கான அச்சாரத்தைதான் ஒன்னையும் காணோம். அம்மா தன் மீதான சொத்து வழக்கை தீர்க்கவே இப்பொழுது முழு மூச்சுடன் இருப்பார். கூடங்குளம் குப்பைத் தொட்டியில், மூவர் தூக்கு மத்திய அரசிடம், மின் வெட்டு சர்வதேச பிரச்சனையை.

----------------XXX-----------XXX---------------XXX-----------------------

டைரெக்டர் சங்கர் சொன்ன ஏந்திரன் கதையை மறக்காமல் அதனோடையே வாழ்ந்திருப்பார் போல சாருக் ஒரு ஏழு எட்டு காட்சிகள் ஏந்திரனில் வந்ததைப் போலவே இருக்கிறது. ரயில் காட்சி, சிகப்பு மை கெட்ட ஏந்திரன் நீல மை நல்ல ஏந்திரன் போன்ற காட்சிகளை சொல்லலாம். ஆனால் இது ஏந்திரன் அளவுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏதோ விடியோ கேம் பார்பதைப் போன்ற ஒரு உணர்வே ஏற்படுகிறது.

இது குழந்தைகளுக்கான படம் மென்று சொல்வீர்களானால் என் பிள்ளைகள் ரேட்டிங்கில் அதிலும் ஏந்திரனே முந்துகிறான்.......!

தமிழன்னா சும்மாவா.....!!

----------------XXX-----------XXX---------------XXX-----------------------

சமீபத்திய பாடல்களில் ஏழாம் அறிவில் வரும் எம்மா எம்மா காதல் பொன்னம்மா மயக்குகிறது. ஹரிஸ் எப்போதும் ஒரு ௫/௬ மெட்டுகளையே வைத்து ஓட்டுகிறார் என்பது என் எண்ணம் ஆனால் எப்படியோ எல்லா பாடல்களும் ஹிட் ஆகி விடுகிறது.

----------------XXX-----------XXX---------------XXX-----------------------

கழகம் பிறந்த காலந்தொட்டு இதனை அழிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
துரோகச் சிந்தையினர் தம் சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர். கையிலே காசில்லா போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்.

ஐய்யா ஒரு துணைப் பொதுச் செயலாளரே இவ்வளவு காசு பார்கிறாறேன்றால் அப்ப நீங்க உங்க குடும்ப உறுப்பினர் எவ்வளவு பார்த்திருப்பீங்க. அப்போ நீங்களே கொள்ளை அடிச்சத ஒத்துக்கிறீங்க. நீங்க தாய வச்சி உவமானம் சொன்னதாலே நானும்

தாயைப் போலப் பிள்ளை நூலைப் போல சேலை.....
தலைவர் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி.... ;

தொலைந்து போனவன்

வெட்டியான ஒரு
நாளில்,
கிட்டியது ஓர்
நிழற்படம்

கால்சட்டை வயதில்,
கை கோர்த்து
நிற்கும்,
பெயர் மறந்த நண்பனை

கணிப்பொறி உதவியுடன்
இணையங்களில் தேடுகிறேன்...?
'முகநூலில்' இருப்பானோ...?
'டுவீட்டி'யாய் வருவானோ...?

பள்ளிப் படிப்பை
பாதியில் விட்டவனை,
பரந்த உலகில்
எங்கனம் தேடுவது.....?
;

கலியுக யோகியும், 'தெயவத்திருமகளும்'


இந்த பதிவு யாருக்கும் எதிரானதல்ல, யாருக்கும் கொடி பிடிக்கவும் அல்ல. இது முற்றியும் என் சொந்த கருத்தே.....!!!!!

சமீபத்தில் நான் தெய்வத்திருமகள் பார்த்தேன். என் தாயையும், தந்தையையும் பார்க்க வைக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல் எழுந்தது. (இங்கே அவர்கள் இருவருக்கும் ஒரு சின்ன அறிமுகம்)

அம்மா சீரியலே கதி என்றிருப்பவள், அவளுக்கு 'மாதவி' க்கோ, 'செல்வி' க்கோ ஒன்றென்றால் கூட தாங்க முடியாது, அவ்வளவு இளகிய மனம் படைத்தவள். சீரியலுக்கு அடுத்து பிடித்தது வினாடி வினா போன்ற கேள்வி பதில், தன் நினைவாற்றளால் படித்தவர்களையே 'அட' போடா வைக்கும் திறமை வாய்க்கப் பெற்றவள். தன் உடன் பிறப்புகளாகட்டும், என் தந்தையின் உடன் பிறப்புகளாகட்டும் யாருக்கும் பார பட்சமின்றி உதவுபவள். அவ்வாறு வுதவி செய்து... அவர்கள் எங்களை உதாசீனப் படுத்தும் போது, மனம் நொந்து புலம்புபவள். அனால் அவர்களே மறுமுறை எதாவது ஒன்றென்று கலங்கும்போது.... ஓடோடிச் சென்று உதவுவாள். இது வாடிக்கை.

என் தந்தை ஒரு கலியுக யோகி, எதிலும் ஒரு பற்றுதளில்லாமல் தன் போக்கில் வாழ்பவர். அதற்காக அவர் ஆசையே அற்றவர் என்ற முடிவுக்கு வர வேண்டாம். அவரது செய்கைகள்தான் அப்படி, மற்றபடி உலக இயல்புக்கு தன்னை சுற்ற வைப்பவர். அப்படி பட்டவர் இதுவரை பார்த்த படங்களை விரல் விடாமலே எண்ணி விடலாம். மொத்தமே மூன்றோ நான்கோதான். தேவர்மகன், மாயாண்டி குடும்பத்தார் அதன் பிறகு இப்பொழுது தெய்வத்திருமகள்.

தேவர்மகன் டிக்கெட் வாங்கி இரண்டாவது முறை நான் பார்க்கப் போகிறேன் என்று சொன்னதில்தான் அவர் பார்க்கவே சம்மதித்தார். எதுக்கு நீ இரண்டாவது முறை பார்க்கவேண்டும் நானே போகிறேன் என்று சொன்னார். ஆனால் இந்த மாயாண்டி குடும்பத்தாரை பார்க்க அவரின் ஆவலை நானும் என் தம்பிகளும் தூண்டினோம். இது கிட்ட தட்ட எங்கள் குடும்ப கதை போன்றே... நாங்களும் நாலு ஆண்களுக்கு ஒரு பெண், மேலும் எங்கள் சித்தப்பா குடும்பத்துக்கும் எங்களுக்கும் பிணக்கு வேறு.

நானும் என் தம்பிகளுமிந்த கதையின் சாரம்சத்தை சொல்லி என் அப்பாவை பார்க்க வைத்தோம். தியேட்டரில் சில காட்சிகளுக்கு அவர் கதறி அழுததை இன்றும் எங்களால் மறக்க முடியாது. அவர் அன்றாடம் உபயோகிக்கும் ஒரு வசனம் படத்திலும் இடம் பெற்றிருந்ததை கண்ணீருடன் ரசித்தார். அந்த வசனம் 'இன்னொரு முறையா நாம இங்கே வந்து பிறக்கப் போறோம்'. சித்தியின் குரூர குணத்தினால் பிரிந்த போது மிகவும் மனம் உடைந்தவர். தன் பால்ய நாட்களில் தம்பியுடன் சுற்றியதை சொல்லி சொல்லி மாய்ந்து போனவர்.

மாயாண்டி குடும்பத்தை அவர் தன் குடும்பமாகவே பார்த்தார் அதற்குப் பிறகு அவர் பார்த்த படம் தெய்வத்திருமகள். நாங்கள் இரவு காட்சிக்குப் போனோம். படம் முடித்து வீடு வந்ததும், என் தங்கைக்கு தொலைப்பேசி.... இரவு என்பதையும் மறந்து நீண்ட நேரம் பேசினார். அப்படி ஒரு தாக்கம் அவர் மனதில் இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் 'தந்தை உள்ளத்தை' இந்த படம் மீட்டுத் தந்ததென்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு திரைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு நிலையில் தன்னையும் தன் தன்மைக்குப் பொருந்திப் போகிற ஒரு பாத்திரத்தில் இணைத்து அந்தப் படத்துடன் பயணிக்கத் தொடங்குகிறான். அப்படி ஒன்றிப் பார்ப்பது எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. அவ்வாறு படத்துடன் ஒன்ற மொழி ஒரு இன்றியமையாத காரணம்.

இதே தெய்வத்திருமகள் ஆங்கில சாயலான (தாழுவலில்லை) 'I AM SAM' என் வீட்டில் போட்ட போது.... என் அம்மாவும், அப்பாவும், கரகாட்டக்காரன் கவுண்டமணி தவில் வாசிப்பில் தூங்கும் செந்தில் போல ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

ஒரு படத்தின் தாக்கத்தால்... அதை நம் மொழிக்கும், கலாசாரத்துக்கும் பொருந்திப் போகிறா மாதிரி, மாற்றி எடுப்பதில் தவறில்லை என்றே எனக்குப் படுகிறது. இதுக்கும் சில ஆயத்தங்களும், முன் முயற்சிகளும் தேவை என்றே நினைக்கிறேன். அந்த அனைத்தும், இந்த தெய்வத்திருமகள் குழு செய்திருக்கிறது. இதற்க்கு முன் எந்தனையோ படங்கள் இதுபோல் தாக்கத்திலும், தழுவலிலும் வந்திருக்கிறது, பல அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது, சில தோல்வியைத் தழுவியும் இருக்கிறது.

ஏற்கனவே இருக்கும் ஒரு சிலையின் வடிவத்தை சில ஜாலக்குகளை செய்து நம் ரசனைக்கேற்ப வடிவமைப்பதைப் போன்றே இந்த வேற்று மொழி தாக்கத் திரைப்படங்களும். அதற்காக கற்பனை வறச்சி, கலைத் திருட்டு என்று சொல்லிகொள்ளத் தேவை இல்லை. ஒரு படம் எப்படி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிரதென்பதை வைத்துத்தான் அதன் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப் படுகிறது. அந்த விதத்தில் இந்த படமும் ஒரு வெற்றிப் படமே.

மொத்தத்தில் படம் எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது...........
;

மோடி மஸ்தானுக்கு கோடிகளில் பணம்



நல்லா கூட்டம் கூடும் இடங்களில் சினிமா தியேட்டரோ, கோயில் எதிரிலோ..... ஐய்யா மார்களே....! அம்மா மார்களே...! மாயமில்ல மந்திரமில்ல எல்லாம் நிஜம். இங்கேப் பாருங்கோ இது தலைச்சான் பிள்ளை மண்டை ஓட்டுல செஞ்ச தாயத்து, இத கையில கட்டிகிட்டா உன்ன எந்த பேய் பிசாசோ, காத்து கருப்போ அண்டாது சாரே, இத்த போட்டு நீ ராத்திரி சுடுகாட்டுக்குக் கூட போலாம் எதுவும் உன்ன ஒன்னும் செய்யாது சாரே!!.

பாரு சாரே இந்த கீரிக்கும் பாம்புக்கும் சண்டை உடுவேன் சாரே, இந்த நூறு ரூபா நோட்ட கொளுத்தி அப்படியே திரும்ப எடுப்பேன் சாரேன்னு பல வித வித்தைகள அடுக்கடுக்கா வச்சி தெருவோரம் வித்தை காட்டுவதை பார்த்திருப்பீர்கள். தான் கடை விரித்திருக்கும் மொத்த நேரமும் பேசியே.... போக்கி விட்டு, தாயத்து விற்கவும், மை விற்கவும் ஆரம்பித்து விடுவான், கடைசி வரை கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்காது.

ஆனால் சில நேரங்களில் வேடிக்கைப் பார்த்தவர்களின் பணம், நகை கொள்ளையடிக்கப் பட்டிருக்கும் கூட்டம் முடிந்து அவர்கள் தேடும்போது அவன் பாரீசே போயிருப்பான். ஆனாலும் ஊரில் எங்கே இதுபோல் புரளி வித்தை காட்டினாலும் அது எவ்வளவு தூரமானாலும் நடந்தே சென்று முழுதும் முடியும் வரை பார்த்து வருவது வழக்கம். பாக்கெட்டில் இருந்து பத்து பைசா போட்டு விட்டு வருவோம். இப்பொழுதெல்லாம் அதுபோல் ஆட்களைப் பார்ப்பதில்லை, அவர்கள் காட்சிப் பொருளாக சினிமாவிலும், சீரியலிலும் வருகிறார்கள்.

ஆனால் இதுபோல் புரளி வித்தை காட்டுபவர்கள் இப்பொழுது விஸ்வரூபமெடுத்து பெரிய கார்பரேட் நிறுவனங்களைப் போல் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். தங்கள் பெயருக்கு பின்னாலோ முன்னாலோ ஒரு அடை மொழியை வைத்துக் கொண்டு தான்தான் காடவுளின் அவதாரம் என்று கலர்கலராக ரீல் விட்டு, கட்டு கட்டாக கல்லா கட்டுகிறார்கள்.

இதில் ஹிந்து, முஸ்லீம், கிருத்தவர் என்ற பேதமெல்லாம் இல்லை, எல்லா மார்கத்திலும் இதுபோல் போலிகள் உண்டு. அது போல் ஒருவர்தான் இந்த நித்யானந்தா. அவரது சமீபத்திய ஸ்டன்ட் முந்தா நாள் குரு பூர்ணிமா அன்று பக்தர்களை புவியீர்ப்பு விசையை மீறி அந்தரத்தில் பறக்க வைப்பது. இதில் கலந்துகொள்ள பணமெல்லாம் வசூலிக்கப் பட்டது (அதற்கான அழைப்பிதல்). அவரது முதன்மை பிரபல்ய சீடர்களில் ஒருவரும், சமீபத்தில் டிவிக்களில் தெரிய... ஓர் இரவு அவருடன் அறையைப் பகிர்ந்தவருமான ரஞ்சிதாவும் இருந்தார்.

எல்லோரும் எம்பி எம்பி குதித்து அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார்கள் ஆனால் முட்டி தேய்ந்ததும், மூச்சி வாங்கியதும்தான் மிச்சம், ஒருவரும் மிதக்கவில்லை. மோடி மஸ்தான்போல் கடைசிவரை தான் சொன்னதை தனக்கோ அல்லது தன் பக்தர்களுக்கோ ஏற்படுத்தவில்லை. பரவச நிலை அடைவோம் என்று பணம் காட்டியவர்கள் எல்லாம் பர்சை காலி ஆக்கியதுதான் மிச்சம்.

அடுத்த முறை வேறொரு வித்தையின் பெயரை சொல்லி தன் பெட்டியை நிரப்புவார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் இவற்றை நம்பி அவர் பின்னல் போகும் மக்கள்தான்.


ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
;

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட....

லெக்கு தாதா (முன் கதை சுருக்கத்துக்கு சொடுக்குங்கள் Leggu தாதா அட்ராசிட்டி) அவரு மாமனாரு சொன்னாருன்னு, ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக சேர்ந்தார். வண்டி பின்னாடி மாமனார வச்சி, வீரமா வீதியுலா போயி அப்பாயின்ட் ஆகி வந்தாரு லெக்கு. தூர தொலைவு ஏரியான்னா மாப்பிள்ளைக்கு டயேரியாவரும்னு, தெரிந்து வீடு இருக்க ஏரியாவே வாங்கித்தந்தாரு மாமனாரு.

லெக்கு மூக்கு முட்ட குடிச்சுட்டு முழுசாப் போத்திட்டா..., மப்பு தெளியவே மதியம் ஆயிடும், இதில் வேலை நேரம் காலை ஏழு மணிக்கு.
வேல கிடைச்ச வேளையைக் கொண்டாட வேலிதாண்டி வெயிட்டா (மருந்து கம்பெனிக்கு விருந்து) விருந்து வச்சாரு லெக்கு. பெக்கு ஓவராப் போயி லெக்கு தள்ளாட ஆரம்பிச்ச உடனே பக்கர் சொன்னான்,

"மச்சி வீட்டுக்குப் போவோம்"

"இருடா இன்னும் ஒரு பெக்கு போவோம்னு" லெக்கு சொன்னாரு. எனக்கு பக்குன்னு ஆயிடிச்சி....

"என்னடா வேலைன்னு கேட்டா... ?"

"அது ஒன்னும் இல்ல மச்சி, காலீல நம்ம ஏரியால கீற மெடிகல் ஷப்புக்கெல்லாம் போயி, எங்க மருந்து இருக்கா தீந்துடுச்சான்னு கணக்கு எடுக்கணும், சாயந்தரம் அவங்களுக்கு கேட்ட அளவு டெலிவர் பண்ணனும், நமக்கு சேலுக்கு ஏத்த மாலு".

"கேக்க நல்லாத்தான் இருக்கு ஆனா நீ ஒழுங்கா போவணுமே..." இது கலீல்

"இன்னா மாமே அப்படி சொல்லிட்ட நா எவ்வளவு அடிச்சாலும் காலீல அலாரம் வச்சா மாதிரி எழுந்துடுவேநில்ல"

"பாப்போம் பாப்போம்".

"இப்போதைக்கு மச்சான் சைக்கிள யூஸ் பண்ணப் போறேன், அடுத்த மாச சம்பளம் வந்ததும் பயிக்கு வாங்கிடுவோமில்ல....ன்னு" திட்ட வரைவோலை கிட்ட தட்ட ரெடியாயிடிச்சு.

மானிட்டர்ல மயங்கி வாந்தி எடுத்து கிளம்ப இரவு ரெண்டு மணியாகிடிச்சு. பக்கர்தான் எப்போதும் லெக்கை வீட்டில் கொண்டுபோய் விடுவான் இந்தமுறை அவனும் கொஞ்சம் ஓவர் ஆனாதால், நாலுபேர் படைசூழ ராஜமரியாதையில் வீடு கொண்டு சேர்த்தோம்.

மறுநாள் மாலை மண்டபத்தில் பார்த்தால் லெக்கு மூஞ்ச தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்திந்ருதது

"என்னடா ஆச்சின்னு....?" கேட்டதுதான் தாமதம்

பக்கர் "மச்சி... என்ன ஆனதுன்னா..... கலையில ஐய்யா ஒம்போது மணிக்குத்தான் எழுந்திருக்காரு பல்லு கூட வெளக்காம வெறும் மூஞ்ச மட்டும் கழுவிட்டு பேக்கத் தூக்கிக் கொண்டு நேரா நம்ம கண்ணகி பார்மசிக்கு போயி..... 'ஜுரத்து நீங்க என்ன மருந்து வச்சுருக்கீங்க, இதுக்கு என்ன மருந்து வச்சுருக்கீகன்னு' பெரியா வெங்காயமாட்டம் கேள்வி கேட்டிருக்கான், அவனும் கஷ்டமருன்னுதான் கரும சிரத்தையாய் பதில் சொல்லிருக்கான். எல்லாம் கேட்டு முடிச்ச உடனே, 'ஐய்யா ஏன் நீங்க இந்த மருந்த வாங்கக் கூடாது'ன்னு கேட்டுருக்காரு, கடகாரனும் 'அது இப்போத்தான் மார்க்கெட்டுக்கு வந்திருக்கு இன்னும் நாங்க வாங்கி வைக்கல, உங்களுக்கு இது வேணும்னான்னு' கேட்டுருக்கான் இங்கதான் கதையிலேயே டிவிஸ்டு அப்போத்தான் தொற அதுக்குத்தானே நான் வந்திருக்கேன்னு அவுத்து விட்டிருக்கான்....

காண்டான கடக்காரன் நீ யாருன்னு கேட்டுருக்கான் நான் இந்த கம்பெனியில இருந்து வர்றேன்னு சொல்லிருக்கு நம்ம சேல்ஸ் ரெப்பு. அவன் ஆட்டப் பத்தி விடுறா மாதிரி திட்டி விட்டுட்டான். கம்பெனியும் கல்தா கொடுத்துடுச்சி. அப்பாயின்ட் ஆனா நாளிலேயே அப்பீடாகி வந்துட்டாரு.

விடியா மூஞ்சி வேலைக்குப் போனால்..... வேலை அகப்பட்டாலும் கூலி கிடைக்கலையாம் அதுபோல நம்ம லெக்கு.... ;

ஹலோ கேளுங்க.....!



B.R. டீ ஸ்டால் என்னைக்கும் ஜே.ஜேன்னு இருக்கும் அதுக்கு காரணம் "லலிதா". அவளைக் காண்பதற்கென்றே பள்ளப்பன் தெருவிலிருந்து, பஸ் பிடித்து வந்து பல்லிளிப்பவர்கள் உண்டு. அவள் செல்லுமிடமெல்லாம் குறைந்தது நாலு பேராவது பின்னால் போவதுண்டு. எங்கள் தெருதான் லலிதா குடியிருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தது, அதில் எங்களுக்கெல்லாம் ஒரு மிதப்புத்தான்.

லலிதா அப்படி ஒன்றும் அழகில்லை என்றாலும் சுட்று வட்டாரத்தில் சுமாரான ஃபிகர் என்பதால்.... காளையர் கனவுகளையும், கல்வியையும் களவாடியத்தில் பெரும்பங்கு அவளுக்குண்டு. அவ STYLEஆ பாத்தாவே அன்னைக்கு NIGHTஅ விலை பேசிடுவா(தூக்கம் போச்சு). இது மாதிரி ஊருக்கு, இல்லை தெருவுக்கு ஒரு தேவதை இருந்திருப்பாள் ஏன் இப்போதும் இருப்பாள். "மூக்கில்லா ஊரில் அரை மூக்கன் ராஜா" மாதிரி, தற்காலிக டாவுக்கு தப்பாமல் வகை செய்வார்கள் இந்த ரோஜாக்கள்.

நிற்க விஷயம் அதைப் பற்றியதல்ல, இது மாதிரி காய்ந்து கிடந்த மனசுக்கு பாய்ந்து வந்த பாலாறா.... அமீரகத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது ஹலோ FM 89.5. இது முழுக்க முழுக்க இருபத்திநாலு மணி நேரமும் தமிழ் வழங்கும் நிலையம். என்னதான் சிடி, காசெட், எப் எம் மாடுலர்னு இருந்தாலும் அதெல்லாம் நாம் தரவிரக்கியப் பாடல்களோ, வாங்கியப் பாடல்கலோதான். இதில் அடுத்து என்ன பாடல் வரும்னு தெரியும், ரண்டமா வைக்கலாம்மென்றாலும் அதுவும் நமக்கு பழகிய வரிசையாகவே தெரியும்.

ஆனால் ரேடியோவில் அப்படி இல்லை, விளையாட்டு, புதிர் போட்டி, சமையல் அழகு குறிப்பு, ஒரு மணிக்கு ஒரு முறை செய்தித் துளிகள்ன்னு கொஞ்சம் ஜனரஞ்சகமாகவே இருக்கு. இது வரை மலையாளத்தில் பறையும் சானல்கள் மட்டுமே இருந்து வந்த வலைகுடா நாடுகளில் இது ஒரு வரப் பிரசாதம். தேய்ந்து போன சிடி கேட்டு ஓய்ந்து போன உள்ளத்துக்கும், இனி தினமும் தமிழ்த் தேன் காதுகளில் பாயும். தற்போது கார்களில் சுமாரான தரத்துடன் வருகிறது. அலை பேசியில் முயற்சித்தேன் வர வில்லை. இன்னும் சில நாட்களில் இது களையப்படலாம் என்று தெரிகிறது.

ஆகவே வளைகுடா வாசிகளே கேளுங்க, கேளுங்க, மேலும் கேளுங்க ஹலோ FM 89.5.
;

குப்ப மேட்டரு....

இது அ.தி.மு.கக்கு கிடைத்த வெற்றி என்பதை விட, தி.மு.க ஆட்சியின் மீது இருக்கும் வெறுப்பைத்தான் காட்டுகிறது. எல்லா கணிப்புகளையும் பொய்யாக்கும் விதமாக, ஒரு ஆழிப் பேரலையாய் அம்மாக்கு கிடைத்த வெற்றி.

தமிழ் நாட்டில் அடுத்த ஐந்து வருடம் சன் இல்லா "அம்மா"வாசைதான்

அம்மா தன் முந்தைய தவறையும், நேற்றைய தி மு க தவறையும் செய்யாமல் இருந்தாரே ஆனால், அது அவரை தன் நிலையை தக்க வைத்துக் கொள்ள உதவும்.
------XXX---------XXX---------
கேப்டனுக்கு இது மாபெரும் வெற்றி என்றாலும், அம்மாவுடன் இணங்கிச் செல்ல ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்கும், அம்மா தன் முதல் எதிரியாய் இவரை பாவிக்கக் கூடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
------XXX---------XXX---------
ரஜினி பற்றிய செய்திகளை மீடியா ரொம்ப ஊதுகிரதோன்னு தோன்றுகிறது. பிரபலம்னாலே ப்ராப்லம்தான்னாலும் இது கொஞ்சம் ஓவர்தான் எல்லா மனிதனுக்கும் உடல் நேவு வரத்தானே செய்யும், அனால் அதைப் பெரிது படுத்துவதில் அவசியமில்லை, அவரது அபிமானிகளும், ரசிகர்களும் அவர் இயல்பு திரும்ப பிரார்த்திப்பதே அவருக்கு செய்யும் ஆகப் பெரிய உதவி.
------XXX---------XXX---------
தி.மு.க தோல்வி முகம் பளிச்சிட பளிச்சிட, கண்டமேனிக்கு வைகையை விளாசித் தள்ளினார்கள் பல பேர் பல தளங்களில். அவர் தி.மு.க சார்பு பிரசாரத்திற்கு பெரிய தொகையை கூலியாகப் பெற்றே வேலை செய்தார். இன்றோ நாளையோ ஒரு அறிக்கை, அம்மா காலில் விழுந்து நடுநிலையை நிலை நாட்டி, விளாசியவர்கள் முகத்தில் கரியைப் பூசும் சாத்தியக் கூறுகள் ஹெவியாக இருக்கு. இரும்பைத் தேச்சாலும், இலுப்பைப் பூ பறித்தாலும் இலவசமா செய்ய இப்பூவுலகில் யாருமில்லை, ஆக மக்களே உஷார்.
------XXX---------XXX---------
சமீபத்தில் என் வீட்டுப் பக்கத்தில் உள்ள கறிக் கடை பாயிடம் பேசும்போது, "என்ன பாய் இப்படி கவுந்துடுச்சே...? "என்னங்க அப்படி சொல்லிட்டீங்க...? இப்போ என் கடை நல்லா போகுதுன்னு தெரிஞ்சாப் போதும், அதையும் வலைச்சுடுவாங்க. இது அவங்களுக்குத் தேவைதான்....!" என்றார். இது எல்லா கோமான்களுக்கும் ஒரு எச்சரிக்கைச் செய்தியாகவே எனக்குப் படுகிறது.
------XXX---------XXX---------
இந்த வருடமும் பொறியியல் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த இருக்கிறார்கள், சேர்க்கையை உயர்த்துவதிலும், கல்லூரியை கூட்டுவதிலும் காட்டும் முனைப்பை முடித்து வெளிவரும் வல்லுனர்களின் தரத்தையும் கல்லூரி மற்றும் ஆசிரியர்களின் தரத்தையும் மேம்படுத்தினால் நமக்கு தேர்ந்த பொறியியலாளர்கள் கிடைப்பார்கள்.
------XXX---------XXX---------
கோ மற்றும் வானம் பிடித்திருந்தது. எங்கேயும் காதல் மறுபடியும் சன் டிவியில் மட்டும் மாபெரும் வெற்றி. BREEZY...யா காதல சொல்லுறேன்னு CRAZY...யா சொல்லிட்டாரு போல.

அழகர்சாமியில் குதிரை ரசித்து பார்த்தேன் கதை தேடி அக்கடையும் இவ்விடையும் அலையும் கோடம்பாக்கத்தாருக்கு நம் மண்ணிலேயே எத்தனையோ கதைகள் உள்ளதுன்னு செவிட்டில் அறைந்தது சொல்லியிருக்கிறார்கள், கதாசிரியர் பாஸ்கர் சக்தியும், இயக்குனர் சுசீந்தரனும். குட் ஷோ. ;

கொலுசின் மெல்லிசை


ஆதி தொட்டே பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளுதல் என்பது இருந்திருக்கிறது. எத்தனையோ அணிகலன்கள் இருந்தாலும், கால் கொலுசு தனித்தே இருக்கிறது. எகிப்தியர்கள் கொலுசு அணிந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. தமிழர்களின் அழகியலில் பொதுவாகவே ஆபரணங்கள் சிறப்பிடத்தை பெற்றிருக்கின்றன. நகைகளை ஆக்குவதும், அழித்து வேறு புது மாதிரி செய்யும் பழக்கம் இன்றும் பெண்களிடம் இருக்கிறது. சில காலம் வரை ஆண்களும் காலில் தண்டைமாதிரி ஒன்றை அணிந்திருந்தார்கள், நாளடைவில் அது மாறிப்போனது.

பொதுவாக கொலுசு மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு என்று வகைப்படும். மயில், வண்ணத்துப்பூச்சி, அன்னம் போன்றவற்றையும் அதில் வேலைப்பாடுடன் பதிந்து செய்யப்பட்டன. முதலில் திருமண அடையாளமாய் கொலுசு அணியப்பட்டது, நாளடைவில் அது ஒரு நிரந்தர அணிகலனாய் பெண்மையை அழகுபடுத்தியது. பிறந்த பிள்ளைகளுக்கும் காலில் தண்டை, கொலுசு அணிவது வழக்கமாக இருந்து வந்தது. குழந்தை தவழும்போதோ தத்தி தத்தி நடக்கும்போதோ எழும் ஓசை வீட்டில் உள்ளோர்களை உளமகிழச்செய்யும்.

கொலுசு ஒன்றே காவலனாகவும், கருங்காலியாகவும் அறியப்படக் கூடிய அணிகலன். கொலுசு காப்பாற்றிய கதைகளும் நிறைய, காட்டிக் கொடுத்த கதைகளும் நிறைய. நான் காதலனாய் இருந்த போது முதலில் என் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த பரிசு கொலுசுதான். அவள் பர்தா அணியும் வழக்கம் கொண்டிருந்தாள், கல்லூரி முற்றிலும் கருப்பு அங்கி அணிந்தே எல்லோரும் திரிந்த வேளையில், என் மனைவியை தனித்து அடையாளம் காணவே அதை (அப்போதைய என் வருமானமும் அதற்க்கு ஒரு காரணம்) பரிசளித்தேன்.

பொதுவாக வெள்ளியில் கொலுசு அணியப்படுகிறது, வசதியிருப்பின் தங்கத்திலும் அணியப்படுகிறது. விழாக்கால, விசேஷ நாட்களில் மருதாணி வைக்கும்போது காலைச் சுத்தி கொளுசுபோல் வித விதமான வடிவங்கள் பெண்கள் வரைவதுண்டு. சிலருக்கு தொடர்ச்சியாக கொலுசு அணித்திருந்ததில் அந்த இடம் கருப்பாக மாறியிருக்கும்.

புராணங்களும், காப்பியங்களும் பெண்களை கொளுசுடனேயே உருவகப் படுத்தி வந்திருக்கிறது. முன் காலத்தில் பெண்கள் பிற ஆடவர் முன் வராமல் இருந்த பொது, கொலுசின் சங்கேத ஒலி மூலம் தத்தமது துணைக்கு தம் கருத்தை உணர்த்தி வந்தார்கள். நிறைய முத்து உள்ள கொலுசில் இருந்து வரும் ஓசையை வைத்தே பெண்ணின் மனநிலையையும் தேவையையும் அறிந்து கொள்ளலாம்.

நாங்கள் கூட்டுக் குடும்பம் என்பதால் என் அப்பா மூன்று வளர்ந்த பெரிய தம்பிகள், என் மனைவியின் கொலுசு சத்தத்தை வைத்தே தங்கள் நிலை மறந்திருப்பினும், உடனடியாக சீர் படுத்திக் கொள்வர். இப்படி கூட்டுக் குடும்பத்தில் உள்ள சில அசவ்கர்யங்கள் தவிர்க்கப் பட்டது.

சினிமாவிலும் நிறைய கொலுசு பாடல்கள், காட்சிகள் இருக்கிறது. காதல் ஓவியம் படத்தில் கொலுசு ஒரு முக்கிய பாத்திரம், நாயகியைவிட அதிக காட்சிகளையும், அபிநயத்தையும் கொண்டிருந்தது. கொலுசு குடும்பத்தைச் சேர்ந்த கால் சிலம்புக்காக மதுரையே எரிந்ததே வரலாறு.

இஸ்லாம் பெண்கள் வீட்டில் இருக்கும்போது என்னவிதமாக வேண்டுமானாலும் கொலுசு போட்டுக் கொள்ளலாம் ஆனால் பிற ஆடவர்கள் முன் ஓசை இல்லாத கொலுசு பயன் படுத்த வேண்டும் என்றும் கூறப் பட்டிருக்கிறது.

கலவியில், மல்லிக்கு அடுத்து கொலுசு சத்தம் அழைப்பு மணியாய் இருக்கிறது.

பேய் உருவாகப் படுத்தலிலும் கொலுசு முக்கிய பங்கு வகிக்கிறது. பேய் வருவதற்கான அறிகுறி 'ஜல்' 'ஜல்' சத்தமே. இரவில் தனியாகப் படுத்திருக்கும் போது எங்கேனும் இச்சத்தத்தை கேட்க நேர்ந்தால் பயப் பந்து கவ்வுவது சர்வ நிச்சயம்.

பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.

உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.

சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்.

இன்று கால்களை அழகுபடுத்த நிறைய விஷயங்கள் வந்துவிட்டாலும், கொலுசுக்கு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது.
;

முழிச்சிக்கோ சகோதரா முழிச்சிக்கோ....

முன்னெல்லாம் குடியரசு நாளன்று கருக்கலிலே எழுந்து, சூரியனையே துயில் எழுப்பி, பந்துக்களோட மெரீனா கடற்கரைக்குச் சென்று குடியரசுதின அணிவகுப்பை பார்பதென்பது எங்கள் நாள்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். அரைக்கால் பருவத்திலிருந்து பதின்ம வயதுவரை கிட்டத்தட்ட எல்லா வருடமும் பதிவேட்டில் எங்கள் குடும்பத்தின் பெயர் இருக்கும்.

நாங்கள் கடற்கரையை ஒட்டி இருப்பதால் போகிறோம் என்று நினைத்தால்... சில நேரங்களில் போரூர், பூந்தமல்லி என்று தொலை தூர இடத்திலிருந்தும் மக்கள் வருவார்கள். காலை உணவு, நொறுக்குத் தீனி கட்டி எடுத்துக் கொண்டு, ரோட்டோரத்தில் உட்கார்ந்து அணிவகுப்பை பார்பதென்பது ஒரு திருவிழாக் கோலம். அது முடித்து வீடு வந்ததும், தில்லியில் நடக்கும் அணிவகுப்பை முழுவதும் பார்த்து முடிப்போம். அந்நாளில் ஒரு முறையேனும் தில்லி சென்று அணிவகுப்பை நேரில் பார்க்க வேண்டும் என்று எண்ணம், ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை.

வருடத்தில் ஒரே ஒரு நாள் சில மணி நேரங்கள் மட்டுமே நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு, ஒரு சிறந்த வியாபார தளமாகவும், சிறு சிறு வியாபாரிக்கு அமைகிறது, பலூன், மூங்கில் ஊதுகுழல், பாப்கான் என்று ஒரு கிராம திருவிழாக்கான எல்லா அம்சத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

பத்து நாளைக்கு முன்னிருந்தே அணிவகுப்புக்கான ஒத்திகைகள் நடக்கும் கடற்கரை சாலை வழித்தடம், காலை போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்து, எல்லா வாகனங்களும் திருவல்லிக்கேணி சாலை வழியாக நெருக்கியடித்து போகும். ஒத்திகை முடிந்து இந்த அலங்கார ஊர்திகள் வெலிங்டன் சீமாட்டி பள்ளியிலும், காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்திலும் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும், அதை பார்க்கவே நிறைய கூட்டம் கூடும்.

என் தந்தை தோள்மேல் இருந்து பார்த்தது முதல், இன்று நான் தந்தையாய் என் மகன்களை உயர்த்திக் காட்டுவதேன்பதே அலாதி ஆனந்தம். எத்தனை சண்டைகள், கூக்குரல்கள் ஏண்டா சனியனே என் காலை மிதிச்சென்னு தொடங்கி... ஊரில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளும் சரளமாய் விளையாடும்.

ரோமியோக்களுக்கு இது தெய்வ தரிசனம், கன்னிகளும் கண்ணண்களும் புத்தாடை என்ன, புதுப் பொலிவு என்னான்னு ஒரு தினுசாத்தான் சுத்துவார்கள். "மச்சான் என் ஆளு முறுக்கு கொடுத்தாடா இந்தா சாப்புடுன்னு" சொல்லி முறுக்க பாஸ் பண்ணி, மயில பிக்கப் பண்ண க்ளோசப் உலகில் இருப்பார்கள். கன்னிகளும் கண் ஜாடை கை ஜாடை காட்டி, கவருவார்கள். கன்னிகளின் அப்பன்களும், அண்ணன்களும் தங்கள் கோல்கேட் வலயத்தால் எல்லைச் சாமியாக காவல் இருப்பார்கள். இதையெல்லாம் மீறி பல பக்கங்களிலிருந்து பறக்கும் முத்தம் காற்றில் மிதந்து மார்கழி மாசத்தையே மப்புள சுத்த வைக்கும்.

அணிவகுப்பில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு அரசு மற்றும் காவல் துறையும் தத்தமது சாதனைகள், செயல்பாடுகளை விளக்கும் வண்ணம்..., காட்சிப் படுத்தப் பட்ட அலங்கார ஊர்தி, கலாச்சார நடனம் என்று ஒரு ஆண்டில் தமிழ்நாட்டின் இல்லை இந்தியாவின் முக்கிய பதிவாக இது விளங்குகிறது.

பார்வையாளனாய் இருந்து, பள்ளி, கல்லூரி நாட்களில் பங்கேற்பாலனாய் இருந்தவரை, காந்திசிலையிலிருந்து... கண்ணகி சிலை வரை கூட்டம் அம்மும். ஆனால் இப்பொழுதெல்லாம் விவேகானந்தர் இல்லம் வரை கூட கூட்டம் இருப்பதில்லை. இதற்க்கு முக்கிய காரணம், இரவு வெகு நேரம் வரை தொலைகாட்சி பார்த்து விட்டு, உச்சி வெயில் குச்சி வச்சி எழுப்பும் வரை மக்கள் தூங்குகிறார்கள். டிவி மனிதனின் வாழ்கையில் ரொம்பவே ஆதிக்கம் செலுத்துகிறது. மக்களுக்கும் பொறுமை இல்லை எல்லாம் தங்கள் வரவேற்பறைக்கே வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்,
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்.....

ஜெய் ஹிந்த்!!!
;

குப்ப மேட்டரு......

ஆணி புடுங்குரதுலையே முழு நேரமும் கழிந்ததால இவ்வளவு நாள் பதிவு பக்கமே வர முடியவில்லை. ஆனா தவறாம எல்லா முக்கிய பதிவுகளையும் படிக்க முடுந்தது. ஒரு வாரம் சென்னையை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனா கால் எட்டும் தூரத்தில் கடல் இருந்தும் கடலைப் பார்க்க முடியல. நண்பர்களைக் கூட சந்திக்க முடியவில்லை.
------xxx-----xxx------xxxx-----
சமீபத்திய பாடல்களில் ஆடுகளத்தில் S.P.Bala, S.P.Charan & Prashanthini பாடிய "ஐயய்யோ நெஞ்சம்" என்கிற பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. சிம்பிள் ட்யுனாத்தான் இருக்கு, ஆனா ரொம்ப நல்லா இருக்கு. அநேகமாக காதல் கிறக்கத்தில் பாடுவதாக இருக்கும்போல் இருக்கிறது. இந்த பாட்டு அப்பா மகன் இருவரின் கிறங்கடிக்கும் குரல்களுக்காகவே மிகமிகப் பிடித்திருக்கிறது.

அடுத்து எத்தனையோ தாய் பாடல் வந்திருந்தாலும் Thenmarku Paruvakaru படத்தில் வைரமுத்து வைர வரிகளில் விஜய்ப்ரகாஷ் பாடி ரத்தினம் என்கிற புது இசைஅமைப்பாளர் இசைஅமைத்து நெஞ்சைக் கரைக்கிறது. இது தெற்கத்தி தாய்களை கண்முன்னே நிறுத்துகிறது. "கல்ல புழிந்து காஞ்சி ஊத்தினா" ஒரு வரியும், "மண்ண கிண்டித்தான் பொழைக்கிறா உடல் மக்கி போற மட்டும் ஒழைக்கிரான்னு" அந்த பகுதி தாய அப்படியே பிரதிபலிக்கிற பாட்டு.
------xxx-----xxx------xxxx-----
சென்னையில் புத்தக திருவிழா நடக்கிறது போகமுடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு ஆனா நண்பர்கள் கொடுத்தது, நானா விரும்பி வாங்கியதுன்னு இருக்க நிறைய புத்தகங்களே இன்னும் நிறைய படிக்காமல் பரணில் இருக்கு இருந்தாலும் ஆசை யாரைத்தான் விட்டுது. குறைந்த பட்ச பலனாக சில பதிவர்களையும், எழுத்தாளரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கும், என்ன செய்ய திரைகடலேறி ஆணி புடுங்கும்போது இந்தமாதிரி இழப்புகள் இருக்கத்தான் செய்கிறது.
------xxx-----xxx------xxxx-----
கட்டக் கடைசியாக அனைத்து வலையுலகவாழ் மக்களுக்கு என் இதயங்கனிந்த பொங்கல் நல வாழ்த்துக்கள். ;
 

Blogger