நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆம்!! நான் என் வேலையை விட்டு, விட்டு ஊர் திரும்பப் போகிறேன். இன்று நடந்தது போல் உள்ளது. நான் இந்தியாவை விட்டு வந்து , ஐந்து வருடம் ஓடி விட்டது. உள்ளூரில் தாய், தந்தை உறவினர்கள் என்று சொந்தபந்தங்களுடன் கூடி வாழ்வதென்பது வரம் . அது பலருக்கு எட்டாக்கனி.ஊருக்கு போவது, மட்டில்லா.... மகிழ்ச்சி என்றாலும், போய் நல்ல வேலை தேடி அமர்வது வரை, மனது சஞ்சலத்துடனே உழலும். என்னைப் போல வெளிநாட்டு வாழ் உயிர்களெல்லாம்...., அன்று பிறந்த குழந்தைதான் ....., நிலையான ஒரு வேலை குதிரும் வரை. நீண்ட சுய அலசலுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்தேன்.
என் முடிவை வீட்டிற்கு தெரியப் படுத்த தொலைப்பேசினேன்.... என் தந்தைதான் எடுத்தார்
"அப்பா!... நான்தான் போசுறேன்"
"என்னடா எப்படி இருக்கே?"
"நல்லா இருக்கேன்பா"
"அப்பா....பா...... நான் வேலைய விட்டுடலாம்னு இருக்கேன்"
"ஏன்டா உனக்கு என்ன பைத்தியமா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ இன்னும் ஒரு இரண்டு வருடம் அங்கே இருந்தால்தான் நல்லது"
"அப்பா!! இல்லப்பா, நான் முடிவு பண்ணிட்டேன், இன்னும் ஒரு மாதத்தில் நான் ஊருக்கு வருகிறேன்" என்று நான் சொன்னதுதான் தாமதம் மறுமுனை நிசப்தமாக இருந்தது. சிறிது நேரத்துக்குப் பின் என் அம்மா வந்து பேசினார்கள்.
"ஏம்மா அப்பா போனை வைத்துவிட்டு போய்விட்டார்கள் ? நான் ஊருக்கு வருவது அவருக்கு பிடிக்கவில்லை"
"அப்படியில்லை!, இப்பத்தான் உனக்கும், தங்கைக்கும் கல்யாணம் நடந்தது, அந்த கடன் மற்றும் நம் வீட்டுக் கடன் பற்றிய கவலை அவருக்கு"
"அதுக்காக நான் காலம் பூராவும் இங்கேயே இருக்கனுமா? இதற்க்கு விடிவே இல்லையா?"
"இல்லப்பா எங்களுக்கும் உன் கஷ்டம் புரிகிறது, இருந்தாலும்..... இன்னும் ஓர் இரண்டு வருடம் இருந்தால் நல்லா இருக்கும் என்று....."
"இல்லம்மா நீ என்ன சொன்னாலும் நான் வருவது உறுதி. அப்பாக்கு எப்போதுமே பணம்தான் பிரதானம் . எங்களைப் பற்றி அவருக்கு கவலையில்லை, உங்களுக்கு பணம்தான் முக்கியம், பின் எதற்கு பிள்ளைகள். 'பசிக்கு படுத்தவர்கள்' தானே" என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.
ரொம்ப ஆற்றாமையாய் இருந்தது. என்ன இப்படி சொல்லிட்டாரே!, ச்சே அவருக்கு பிளைகள்மேல், அன்பில்லை இருந்தாலும்....., என் முடிவில் மாற்றமில்லை. மறுநாள் முதல் வேலை என் துறை அதிகாரியிடம் என் முடிவைச் சொன்ன்னேன்
"நான் உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன், உன் முடிவை நீ இன்னுமொருமுறை பரிசீலித்துவிட்டு, வந்து சொல்"
"ஒகே" என்று சொல்லிவிட்டு பின் இரண்டு நாள் கழித்து
"இல்லை சார் நான் என் முடிவில் உறுதியாய் இருக்கிறேன்"
"சரி!, நீ உன் ராஜினாமா கடிதத்தை கொண்டுவா" என்றார்.
என் ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொண்டு சென்றேன் அதில் அவர் கையெழுத்திட்டு "நீயே இதை பர்சனல் டிபார்ட்மென்ட் அனுப்பிவிடு" என்றார். சொன்னது போல் நான் முப்பது நாட்களில் விடுவிக்கப் பட்டேன் என் துறை பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் என் மேலாளர் "நீ அப்பொழுது வேண்டுமானாலும் இங்கே திரும்பி வரலாம் நான் உனக்கு உதவ காத்திருக்கிறேன்" என்றார்.
இத்தனை நாளாக வீட்டுக்கு எந்த தகவலும் சொல்லவில்லை. ஊருக்கு கிளம்பும் அன்று இரவு தொலைப்பேசியில் "நான் நாளை காலை வருகிறேன்" என்று மட்டும் சொன்னேன்அதுவும் என் அம்மாவிடம் மட்டுமே. விமான நிலையத்தில் இறங்கினேன். நான் மட்டுமே தனித்து விடப்பட்டதுபோல் உணர்ந்தேன். வெளியில் வந்து பார்த்தல் என் குடும்பத்தினர் அனைவரும், என் மனைவியைத் தவிர (அவள் நிறைமாத நாட்கள் என்பதனால்....) என்னை வரவேற்க வந்த்திருந்தனர். எனக்கு ரொம்ப ஆச்சர்யம்!!. நான் நேற்று இரவு பதினோரு மணிக்குத்தான் தகவல் தெரிவித்தேன், எப்படி அந்த நேரத்தில் வண்டி ஏற்பாடு செய்து வந்தார்கள்?
ஓடிச் சென்று என் அன்னையை கட்டித் தழிவிக் கொண்டேன்
"நீங்கள் எல்லோரும் வந்ததில் எனக்கு மிக்க சந்தோசம்" பின் வந்திருந்த எல்லோருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து, வண்டியில் ஏறினேன். அங்கே, முன் இருக்கையில் என் அப்பா, கவலைதோய்ந்த முகத்துடன். அவரைக் கண்டதும் என் இத்தனைநாள் கோபம் ஊற்றெடுக்க..., அதை அடக்கிக் கொண்டேன். வீடு வரும் வரை வேறு எதுவும் யாரிடமும் பேசவில்லை.
வீடு வந்து சேர்ந்தேன். என் அறையில் மனைவியை காண ஓடிச் சென்றேன். என் மனைவியை கண்டதும், என் கோபமெல்லாம் பறந்தது, அவள் தோற்றமே மாறி, நிறம் போய், பார்க்க ரொம்ப அசிங்கமாக இருந்தாள்....., கரு தந்த மாற்றம் என்றாள் .
"அப்பா என்ன சொன்னார்கள் என்றாள்"
"நான் அவரிடம் போசவே இல்லை" என்றேன்
"ஏன் அப்படி செய்தீர்கள் அவர்தான் நேற்று நீங்கள் பேசியபின் வண்டி ஏற்பாடு செய்ய ரொம்ப கஷ்டப் பட்டார் . வண்டி டிரைவர், தூங்கிக் கொண்டிருந்தாராம், அவர் வீடு தேடி, அலைந்து கண்டுபிடித்து, அவரிடம் கெஞ்சி, வண்டி ஏற்பாடு செய்தார்கள்" என்றாள்.
"செய்யட்டும்!!!, இது அவர் கடமை"
களைப்பில் உறங்கிப் போனேன். பின் மதியம் உணவருந்தத் தான் வெளியில் வந்தேன் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு போன பின் நானும் என் மனைவியும் உணவருதினோம்.
உணவருந்தி, என் அறை சென்றவன்தான். வெளியில் வரவே இல்லை!, அதற்குப்பின் என் தந்தை எங்கிருக்கிறாரோ அங்கே நான் நிற்பது கூட இல்லை. ஒரு பதினைந்து நாள் கழித்து, என் மனைவிக்கு பிரசவவலி வந்ததால்... அவளை ஹாஸ்பிடலில் சேர்த்தோம்.... டாக்டர் "சிசேரியன்" என்றார் நான் என் வாங்கிக் கணக்கில் இருந்து இருபத்தைந்தாயிரம் எடுத்து ஹாஸ்பிடலில் கட்டினேன். ஆண் குழந்தை என்றார்கள், அளவில்லா ஆனந்தத்துடன் குழந்தையை அள்ளி தூக்கினேன்.
என் தந்தை, என் பிள்ளையைப் பார்க்க உள்ளே வந்தார். நான் வெளியில் சென்றுவிட்டேன். அவர் தலை கவிழ்ந்தே உள்ளே வந்து பார்த்துவிட்டு, சென்றுவிட்டார். என் வாங்கிக் கணக்குகள் கரைந்து போய், நாளை எப்படி நாள் போகும் ? என்று மனதில் நினைத்துக் கொண்டே..... என் மனைவியை வீட்டுக்கு கூட்டி வந்தேன்.
அன்று இரவு... என் அறைக்கு என் தந்தை வந்தார் நான் அவரை கண்டுகொள்ளததுபோல் இருந்தேன். "நான் போசுவது உனக்கு பிடிக்காது என்று தெரியும் இருந்தாலும்..... நான் உன் அளவுக்கு படிக்கவில்லை நீ இப்போது என்னவாக வேலை செய்கிறாய் என்று கூட எனக்குத் தெரியாது. நீயேதான் உனக்கான வேலை தேடவேண்டும், எனக்கும் யாரையும் தெரியாது, உனக்கு சிபாரிசு செய்ய. உனக்கே தெரியும் நம்மிடம் பணமும் இல்லை லஞ்சம் கொடுத்து வேலை ஏதும் வாங்க. நானும் ஒரு தகப்பன்தான். நீ தனியாளாக இருந்தால் நான் நீ வேலையை விட உடனே சம்மதித்திருப்பேன்.., ஆனால் நீயும் ஒரு குழந்தைக்கு தகப்பனாகப் போகும் நேரத்தில் வேலை இல்லை என்றால் ஊர் என்ன சொல்லும், நீ எங்களுக்கு பதில் சொல்லா விட்டாலும் உன் மனைவியின் வீட்டாளுக்கு என்ன பதில் சொல்லுவாய் அதுக்குத்தான் நான் அப்படி சொன்னேன்" என்றார் என்னைப் பார்க்காமலே.
பின் அவர் கையில் இருந்த நூறு ரூபாய் கட்டை என் கட்டிலில் வைத்துவிட்டு "என்னால் இப்போது இவ்வளவுதான் முடியும், இதை உன் செலவுக்கு வைத்துக்கொள்"
நான் கண்ணீர் பெருக்கெடுக்க, அவர் காலில் கிடந்தேன்... என்னைத் தொட்டுத் தூக்கியவர் கண்களில் கண்ணீர்......, என் வயதுகளில் நான் பார்த்திராத ஒன்று!!!.
"எந்த 'விழுதும்', மரத்தைத் தாங்குவதில்லை, அதற்கான அவசியமும் இல்லை. மாறாக............"
;