Pages

பெண் விடுதலை

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எல்லோரும் பேசிப் பேசி அலுத்துப்போன பழைய பிரச்சனைதான், இருந்தாலும் இன்றும் அது விலை போகும் ஓர் சரக்குதான்.

பெண்ணியம் பேசுகிற எல்லோரையும் கண்டால் எனக்கு கோபமாகத்தான் வருகிறது பெண் விடுதலை பெற்று ரொம்ப காலமாகிவிட்டது. இன்று தேவை ஆண் விடுதலையே!

வேலையில்லா திண்டாட்டம் இந்த அளவு இருக்க காரணம் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததே! ஒரு பெண் படித்து வேலைக்கு போகவில்லை என்றால் அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்வார்கள், ஆனால் அதுவே ஒரு பையன் வேலைக்கு போகவில்லை என்றால் அவனுக்கு கல்யாணம் செய்வார்களா?. அவனுக்கு வெட்டி, ஊர்போறுக்கி என்று பட்ட பெயர் வைத்து அவனை எவ்வளவு அசிங்க படுத்த முடியுமோ அவ்வளவு படுத்துகிறார்கள்.

பெண்கள் இன்று இல்லாத துறை என்று ஒன்று இல்லவே இல்லை, ராக்கெட் முதல் ரசாயனம் வரை இன்று பெண் இல்லாத துறையே இல்லை. பெண் விடுதலை என்று பேசுவதுதான் இவர்கள் செய்யும் அபத்தம். பெண்கள் இன்று எல்லாவற்றிலும் முழு விடுதலை பெற்று விட்டார்கள்.

நடிகை திர்ஷா ஒரு பத்திரிகை பேட்டியில் எனக்கு என் வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார் அதுதான் இன்று உண்மை. இன்று தேசப்பிதா சொன்னதுபோல் ஒரு பெண் நள்ளிரவில் தனியாக போக முடிகிறது, கால்சென்றில் வேலை செய்யும் பெண்கள் பலர் இரவு நேர வேலை நிமித்தமாக இரவில் தனியாக காரில் ஓட்டுனருடன் பயணிக்கின்றனர், இது பெண் விடுதலை இல்லையா?

இவை எல்லாம் நகரங்களில் மட்டும்தான் கிராமத்தில் இல்லை என்று சொல்பவர்கள் உண்டு ஆனால் நிலை அப்படி ஒன்றும் மோசமில்லை, திரு.மாண்புமிகு கலாமே வணங்கிய திரு. சின்னப்பிள்ளை எங்கிருந்து வந்தார்?

பெண்களுக்கு என்று தனி பேருந்து வசதி, எல்லாவற்றிலும் அவர்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு எல்லாம் பெற்று அவர்கள் சுதந்திரமாகவே உள்ளனர். ஆகையால் இன்று பெண் அடிமைத்தனம் என்று ஒன்று இல்லவே இல்லை. ஊடகங்கள்தான் இதை வைத்து பணம் பண்ணுகின்றனர்.

இதை எழுதி முடித்தவுடன் என் துணைவியை அழைத்து எப்படி இருக்கிறது என்று கேட்டேன் மிகச்சரி என்று சொன்னார். பின் எனக்கு ஒரு அருமையான பில்டர் காபி கொடுத்தார்.

'அடிமைத்தனத்திலேயே மிகப் பெரிய அடிமைத்தனம், தான் அடிமை என்பதை உணராமல் இருப்பது' என்றார் டாக்டர் அம்பேத்கர். பத்து வயது ஆண் பிள்ளை தெருவில் விளையாடும் போது, பெண் பிள்ளைக்கு நாம் என்ன கற்றுத் தருகிறோம் எப்படி உடை அணிவது, எப்படி சாப்பிடுவது, எப்படி; எத்தனை டெஸிபலில் சிரிப்பது ஆண்களுடன் எச்சரிக்கையுடன் பழகுவது என்பதை பற்றி சொல்லிக்கொடுக்கிறோம். பூ என்னும் படத்தில் ஒரு வசனம் வரும் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவர்களானதும் என்னவாகப் போகிறிர்கள் என்று கேட்பார் ஆசிரியர் 'ஆண்கள் எல்லோரும் ஏதோ ஒன்று சொல்வார்கள் ஆனால் பெண் பிள்ளைகள் எழுந்து திரு! திரு! என்று முழிப்பார்கள்' இததான் இன்றைய நிலை.

இதன் சதவிகிதம் வேண்டுமானால் கிராமம், நகரத்திற்கு வேறுபடலாம் ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை. இன்றும் அடுப்படி பெண்களுக்குத்தான், என் தாய் கைகளில் துணி துவைத்தால், மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்தால், இன்று என் மனைவி இயந்திரத்தில் துவைத்து, ஓவனும், குகரும் பயன் படுத்துகிறாள். இன்று திருமணத்திற்கு பெண் தேடும் போது பெண் குறைந்தது இளங்கலை பட்டம் பெற்று வேலைக்கு செல்ல வேண்டும் என்று கேட்கிறோம். வரதச்சனை தேவையில்லை என்று சொல்லி தன்னை தியாகி போல காடிக்கொண்டாலும் வரதச்சனை சுலபத்தவணையில் காலம் முழுவதும் கிடைக்கிறது, ஆனாலும் அடுப்படி பெண்களுக்குத்தான். சிறு சிறு உதவிகள் செய்வதுடன் ஆணின் வேலை முடிந்து விடுகிறது.

"அவருக்கு வெளியில் சாபிட்டால் ஒத்துக்காது" என்று பெருமையாக பேசுகிற பெண்கள் இன்றும் உண்டு, 'என் மனைவி சமையலுக்கு இணை கிடையாது' என்று பேசியே காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறோம்.

இதை எழுதி முடித்து என் துணைவியை பார்த்து "பேபி! உன் கையால் ஒரு காப்பி கிடைக்குமா? என்றேன்" எதோ சாதித்ததுபோல்!

வாழ்க பெண் விடுதலை.


;

No comments:

 

Blogger