Pages

பயணம்

நான் ஓமன் நாட்டில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்தேன், என் துறையில் ஒரு ஓட்டுனர் இருந்தார், முதல் முதலாய் நானும் அவரும் வெளியில் செல்ல வேண்டியுருந்தது ரொம்ப தூரம் ஆகையால்..., நான் பேச்சுக் கொடுக்க வேண்டுமே என்று முதலில் ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுத்தேன்...

அவர் நல்ல சிவப்பு நிறம், ஐந்தடிக்கும் அதிகமான உயரம், தலையில் பின்னாடி மட்டுமே சில மயிர்கள் தொங்கிக் கொண்டிருந்தது.., மீசைக்கு டை இன்றுதான்... அடித்திருப்பார் போலும்.., அதிலும் ஒன்றிரண்டு வெள்ளிக்கம்பி எட்டிப்பார்த்தது...!

"எப்படி இருகிறீர்கள்?"

"நல்ல இருக்கிறேன் சார்!" என்றார் சுத்தமான தமிழில்

ஆச்சர்யத்தில் "தமிழா!.. சார்" என்றேன்

"ஆமாம்! சார், திருச்சி பக்கத்தில் ஒரு கிராமம்"

"உங்கள் மனைவி எப்படியிருக்கிறார்கள்? " என்றேன்...

என்னனை ஊடுருவி பார்த்த அவர் "இன்னும் கல்யாணம் ஆகவில்லை"
என்றார் அதிலேயே அவர் எத்தனை முறை இந்த கேள்வியை எதிர் கொண்டிருப்பார் என்று என்னால் யூகிக்க முடிந்தது..

அதுவரை கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவர் அதற்குப் பிறகு பேசவே இல்லை நான்கு மணி நேர பயணம் முழுவதும் ஒரு கனத்த மௌனமே நிலவியது. திரும்பி வரும் வழியிலும் நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை.

வெளிநாடுகளில் ஒரு ஆணோ!., பெண்ணோ!., திருமணம் செய்யாமல் வாழ்வதென்பது மிகவும் சாதாரணம், ஆனால், நம் நாட்டில் கல்யாணம் என்பது ஓர் 'social responsibility', நம் கலாச்சாரமும், மதங்களும் அதையே!.., போதிக்கின்றன. திருமணம் இல்லை என்றால் அவர்களை நாம் ஒரு குற்றவாளியைப் போல் பார்க்கிறோம்..!

அன்று வண்டியை விட்டு இறங்கி ஒன்றுமே சொல்லாமல் சென்றவன்தான்...! அவரை பார்ப்பதை தவிர்த்தேன் ஏதோ கொலைகுற்றம் செய்தவன் போல் அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தலைகவிழ்ந்து சென்றுவிடுவேன்...!


ஆனால் ஒரே துறையில் வேலை செய்துக்கொண்டு எவ்வளவு நாள்தான் பார்க்காமல் இருப்பது, விதி மூன்று மாதம் கழித்து மறுபடியும் அவருடன் அதே இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது...! சரி இந்த முறை அவ்வாறு ஏதும் பேசக்கூடாது என்று நினைத்து..... அவரிடம் "சின்னதாக ஒரு ஹலோ! சொன்னேன்" பதிலுக்கு அவரும் ஒரு "ஹலோ" சொன்னார்!...

எப்படியும் பேசாமல் போக முடியாது சரி என்று "சார் இந்த ஊரில் மழை பெய்யுமா?"

"பெய்யும் சார்.. எப்பவாவது" என்றார்

மறுபடியும் ஒரு கனத்த மௌனம் பின் அவர் "நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் எந்த ஊர் சொந்த ஊர்? என்ற சம்பிரதாய கேள்விகள் கேட்டார்"

நானும் கார் கண்ணாடி வழியே வெளியில் பார்த்துக்கொண்டே.... பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்...!

"என்ன சார் எதோ வேண்டா வெறுப்பாக பதில் சொல்லுகிறீர்கள்"

"இல்ல சார்... அன்னைக்கி நான் கேட்ட கேள்வியில் நீங்கள் மனசுடைந்ததை நான் பார்த்தேன் அதனால்தான் என்றேன்..!" மிகவும் கனிவான குரலில்.

"நீங்கள் என்ன சார் செய்வீர்கள் அது என் விதி..." என்றார்....

தன் கதையை சொன்னார்...!

"கூட பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர், என்னையும் சேர்த்து ஒன்பது பேர்!.., இரண்டு அக்கா, ஆறு தங்கைகள் நான் ஒருவனே ஆண்பிள்ளை..!, எல்லா சகோதரிகளையும் கரைஏற்ற வேண்டிய மிக முக்கிய பொறுப்பு என் தலையில், அதற்காகத்தான்.., நான் வெளிநாடு வந்தேன் வந்து இருபது வருடம் ஓடிவிட்டது., போன மாதம்தான் என் கடைசி தங்கையை கரை சேர்த்தேன் இந்த வருடம் முடிவில் நானும் கல்யாணம் செய்துக்கொள்வேன்" என்றார்...! ஒரே..... மூச்சில். இதை சொல்லும்போது அவரின் முகத்தில் ஒரு சிறு புன்னகை அது வெற்றிக்களிப்பில் வீரனிடம் காண்பது...

"இதுவரை எந்த சகோதரிகள் திருமணத்திலும் நான் பங்கெடுத்துக் கொண்டதில்லை... மூன்று, நான்கு வருடத்திற்க்கு ஒருமுறை ஊருக்குப் போவேன்..." என்றார்!

"என் டிக்கெட் பணமும் கல்யாண சேலைவுககுத்தான் போகும்" என்றார்

"என்ன சார் இது ரொம்ப கஷ்டமாக இருக்குமே!!" என்றேன்

"என்ன சார் பண்ணுறது, இது என் விதி" என்றார்

எல்லா மனிதருக்குள்ளும் ஒரு சுரங்கம் இருக்கிறது அதில் தங்கம் வேட்டிஎடுத்தது போக, பெரும் பள்ளமே மீந்துப்போகும்..... அந்த பள்ளத்தாக்கை நிரப்பும் ஒரு அட்சய பாத்திரமாகத் தான் தாரம் என்றொரு சொந்தம் இருக்கிறது.

அதற்குப்பிறகு அவர் மேல் ஒரு பெர்ர்ர்ர்ரிய மரியாதையே! வந்தது. அன்றிலிருந்து இன்று வரை அவர் எனக்கு ஒரு நல்ல நண்பராகவே இருக்கிறார்......

வண்டி விட்டு அன்று இறங்கும்போது சார் "உங்கள் அப்பா... என்ன செய்தார் என்றேன்.." ஒரு தயக்கத்தோடு,

"ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்தார்...." என்றார்

"அப்படி என்றால் ?"

"அரசாங்க பொது மருத்துவமனை, ஆனால் இது சின்ன, சின்ன கிராமத்தில் எல்லாம் இருக்கும், அவர்களின் முக்கிய பணிகளில் தடுப்பூசி போடுதல், கொசு மருந்தடித்தல், கற்பகால மாத்திரைகள் கொடுத்தல்... இன்னபிற, அவற்றில் முக்கியமானது குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்துவது " என்றார் முகத்தில் சலனமே இல்லாமல்

நான் அவர் என்னை இறக்கிவிட்ட இடத்திலேயே நின்றேன் சிலையாய்........

;

உங்கள் நண்பன்

நான் எப்போதுமே இரவுக் காச்சிக்குத்தான் போவேன் (இல்லை என்றால் நம் ரவுடியாக வளர்ந்த கதாநாயகனின் அடி தடியையும், தத்துபித்து பன்ச் டயலாக்கையும் கேட்டு நாள் முழுவதும் கெட்டுபோகும், அதுவே இரவெனில் அரங்கில் தூங்கியது போக மீதியை வீடு வந்து தொடரலாம்).

அன்றும் அவ்வாறே நான், என் தங்கை, தங்கையின் கணவர் மற்றும் என் மனைவி, என் பிள்ளைகள் எல்லோரும் இரவு காட்சிக்கு சென்றோம்.

பொதுவாகவே என் தங்கையும் அவள் கணவரும் அரங்கு சென்று படம் பார்ப்பது மிக அரிது! என் வற்புறுத்தலின் பேரில் சம்மதம் தெரிவித்தனர். படம் பார்த்துவிட்டு களைப்பில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம், நான், என் மனைவி மற்றும் என் இரண்டு பிள்ளைகள் ஒரு பைக்கிலும், என் தங்கையும்
அவள் கணவரும் ஒரு பைக்கிலும் வந்து கொண்டிருந்தோம்.....

எங்கள் வீட்டருகில் ஒரு 'போலீஸ் ஸ்டேஷன்' இருக்கிறது அங்கே ஒரு அதிகாரி என் மைத்துனரின் வண்டியை மரித்தார் (அவரின் கடமை உணர்ச்சிக்கு சாட்சி என் வண்டியை அவர் மடக்காததே!), நானும் உதவிக்கு என் வண்டியை நிறுத்தி, அருகில் சென்றேன்..,

அந்த அதிகாரி பார்க்க நல்ல மிடுக்காக இருந்தார், சிருடையில் இல்லை, வாயில் எதோ பாக்கு மென்று கொண்டிருந்தார்.., அவர் போசும்போதே ஒரு கெட்ட நாற்றம் அடித்தது, ஆம் அவர் குடித்திருந்தார்..!,

என் மைத்துனரை நோக்கி "ஏய்! எங்கேடா போயட்டுவரே என்றார் அடிக்கும் தொனியில்"

நான் "சார் என்ன சார் பிரச்சனை என்றேன்"

உடனே அவர் "நீ யார்ரா 'மயிறு' என்றார்"
நான் "சார் கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள் என்றேன்"

அதற்க்கு அவர் "தள்ளுடா" என்று சொல்லி என்னை தள்ளி என் மைத்துனரிடம் "டேய் போய் உன் பேர், முகவரியை அந்த ஆளிடம் கொடு" என்றார்
நான் "சார் எதுவாக இருந்தாலும் கொஞ்சம் மரியாதையாக எல்லோரையும் நடத்தினால் உங்களுக்கும் நல்லது" என்றேன் சற்று கோபமாக

உடனே அவர் "நீ என்னடா பெரிய 'இது'! ரொம்ப பேசினா உங்கள் இரண்டு போரையும் சந்தேக கேசில் உள்ளே போட்டுடுவேன்" என்றார்

எனக்கு ரொம்ப அசிங்கமாக போய்விட்டது,

அருகில் இருந்த ஒரு 'ஏட்டு' "சார் அவர் ரொம்ப கோபக்காரர் அவரிடம் ஏதும் வம்பு செய்யாதீர்கள் செய்தால் பிரச்சனையை" என்றார்

பிறகு நாங்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக, எங்கள் பேர், விலாசம் ஆகியவற்றை எழுதிவிட்டு அந்த இடத்தை காலி செய்தோம். அதுவரை, என் தங்கை, மனைவி மற்றும் பிள்ளைகள் நடு ரோட்டில் நள்ளிரவில் நின்று கொண்டிருந்தார்கள்! நெஞ்சில் பயத்துடன் என்ன விபரீதம் நடக்குமோ? என்று

"காவல் துறை, உங்கள் நண்பன்!" என்பதனால்தான், நமக்கு என்றுமே, என்றைக்குமே, அவர்களிடமிருந்து மரியாதை இம்மியளவும் கிடைப்பதில்லை.

உம்! அன்று நாங்கள் என்ன படம் பார்த்தோம் என்று சொல்லவில்லையே! "வேட்டையாடு! விளையாடு!" ;

பெண் விடுதலை

எல்லோரும் பேசிப் பேசி அலுத்துப்போன பழைய பிரச்சனைதான், இருந்தாலும் இன்றும் அது விலை போகும் ஓர் சரக்குதான்.

பெண்ணியம் பேசுகிற எல்லோரையும் கண்டால் எனக்கு கோபமாகத்தான் வருகிறது பெண் விடுதலை பெற்று ரொம்ப காலமாகிவிட்டது. இன்று தேவை ஆண் விடுதலையே!

வேலையில்லா திண்டாட்டம் இந்த அளவு இருக்க காரணம் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததே! ஒரு பெண் படித்து வேலைக்கு போகவில்லை என்றால் அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்வார்கள், ஆனால் அதுவே ஒரு பையன் வேலைக்கு போகவில்லை என்றால் அவனுக்கு கல்யாணம் செய்வார்களா?. அவனுக்கு வெட்டி, ஊர்போறுக்கி என்று பட்ட பெயர் வைத்து அவனை எவ்வளவு அசிங்க படுத்த முடியுமோ அவ்வளவு படுத்துகிறார்கள்.

பெண்கள் இன்று இல்லாத துறை என்று ஒன்று இல்லவே இல்லை, ராக்கெட் முதல் ரசாயனம் வரை இன்று பெண் இல்லாத துறையே இல்லை. பெண் விடுதலை என்று பேசுவதுதான் இவர்கள் செய்யும் அபத்தம். பெண்கள் இன்று எல்லாவற்றிலும் முழு விடுதலை பெற்று விட்டார்கள்.

நடிகை திர்ஷா ஒரு பத்திரிகை பேட்டியில் எனக்கு என் வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார் அதுதான் இன்று உண்மை. இன்று தேசப்பிதா சொன்னதுபோல் ஒரு பெண் நள்ளிரவில் தனியாக போக முடிகிறது, கால்சென்றில் வேலை செய்யும் பெண்கள் பலர் இரவு நேர வேலை நிமித்தமாக இரவில் தனியாக காரில் ஓட்டுனருடன் பயணிக்கின்றனர், இது பெண் விடுதலை இல்லையா?

இவை எல்லாம் நகரங்களில் மட்டும்தான் கிராமத்தில் இல்லை என்று சொல்பவர்கள் உண்டு ஆனால் நிலை அப்படி ஒன்றும் மோசமில்லை, திரு.மாண்புமிகு கலாமே வணங்கிய திரு. சின்னப்பிள்ளை எங்கிருந்து வந்தார்?

பெண்களுக்கு என்று தனி பேருந்து வசதி, எல்லாவற்றிலும் அவர்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு எல்லாம் பெற்று அவர்கள் சுதந்திரமாகவே உள்ளனர். ஆகையால் இன்று பெண் அடிமைத்தனம் என்று ஒன்று இல்லவே இல்லை. ஊடகங்கள்தான் இதை வைத்து பணம் பண்ணுகின்றனர்.

இதை எழுதி முடித்தவுடன் என் துணைவியை அழைத்து எப்படி இருக்கிறது என்று கேட்டேன் மிகச்சரி என்று சொன்னார். பின் எனக்கு ஒரு அருமையான பில்டர் காபி கொடுத்தார்.

'அடிமைத்தனத்திலேயே மிகப் பெரிய அடிமைத்தனம், தான் அடிமை என்பதை உணராமல் இருப்பது' என்றார் டாக்டர் அம்பேத்கர். பத்து வயது ஆண் பிள்ளை தெருவில் விளையாடும் போது, பெண் பிள்ளைக்கு நாம் என்ன கற்றுத் தருகிறோம் எப்படி உடை அணிவது, எப்படி சாப்பிடுவது, எப்படி; எத்தனை டெஸிபலில் சிரிப்பது ஆண்களுடன் எச்சரிக்கையுடன் பழகுவது என்பதை பற்றி சொல்லிக்கொடுக்கிறோம். பூ என்னும் படத்தில் ஒரு வசனம் வரும் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவர்களானதும் என்னவாகப் போகிறிர்கள் என்று கேட்பார் ஆசிரியர் 'ஆண்கள் எல்லோரும் ஏதோ ஒன்று சொல்வார்கள் ஆனால் பெண் பிள்ளைகள் எழுந்து திரு! திரு! என்று முழிப்பார்கள்' இததான் இன்றைய நிலை.

இதன் சதவிகிதம் வேண்டுமானால் கிராமம், நகரத்திற்கு வேறுபடலாம் ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை. இன்றும் அடுப்படி பெண்களுக்குத்தான், என் தாய் கைகளில் துணி துவைத்தால், மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்தால், இன்று என் மனைவி இயந்திரத்தில் துவைத்து, ஓவனும், குகரும் பயன் படுத்துகிறாள். இன்று திருமணத்திற்கு பெண் தேடும் போது பெண் குறைந்தது இளங்கலை பட்டம் பெற்று வேலைக்கு செல்ல வேண்டும் என்று கேட்கிறோம். வரதச்சனை தேவையில்லை என்று சொல்லி தன்னை தியாகி போல காடிக்கொண்டாலும் வரதச்சனை சுலபத்தவணையில் காலம் முழுவதும் கிடைக்கிறது, ஆனாலும் அடுப்படி பெண்களுக்குத்தான். சிறு சிறு உதவிகள் செய்வதுடன் ஆணின் வேலை முடிந்து விடுகிறது.

"அவருக்கு வெளியில் சாபிட்டால் ஒத்துக்காது" என்று பெருமையாக பேசுகிற பெண்கள் இன்றும் உண்டு, 'என் மனைவி சமையலுக்கு இணை கிடையாது' என்று பேசியே காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறோம்.

இதை எழுதி முடித்து என் துணைவியை பார்த்து "பேபி! உன் கையால் ஒரு காப்பி கிடைக்குமா? என்றேன்" எதோ சாதித்ததுபோல்!

வாழ்க பெண் விடுதலை.


;

வங்கத்தாயே எங்களை வஞ்சித்தாயே

வலை மட்டுமே
வீசி வாழ்ந்த எங்களை
அலை வீசி கொன்று குவித்தாய்!

உப்பின் சுவை கூட்டவே
எங்கள் கண்ணீரைக் கேட்டாயோ!
உடலுக்குத்தான் உயிர் தேவை...
கடலுக்குமா?

உயிர் கொடுத்த நீயே
அதைப் பறித்தாயே,
அதீத கோபத்தால் - உந்தன்
குணமிழந்தாயே!

முறையாக அலை வீச
நுரை மீந்துப்போகும்,
இன்று நீ வீசிய வீச்சில் - எங்கள்
நுரையீரல் காய்ந்து போகும்...

படி தாண்டா தத்துவம்
பத்தினிக்கு மட்டுமா?
பரந்த கடலே - உனக்கும்தான்!

ஒரு முறை நீ வெகுண்டாய்...
சேதங்கள் ஆயிரம்
மறுமுறை நீ வருவாய்
எங்கள் பாதத்தை மட்டும் தீண்ட
எங்கள் பாதத்தை மட்டும் தீண்ட ....


;
 

Blogger