Pages

காயடிக்கப்படும் பிஞ்சுகள்


நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது.  எல்லோருமே முதல் வகுப்பில் தேறிவிடுவதில்லை.  அவ்வாறு தேறுபவர்கள் எல்லோரும் வாழ்வில் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவதில்லை.  தோல்வியுற்றவர்களிலும் சிலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் வந்திருகின்றனர் என்பதை காலக் கண்ணாடி காட்டிய வண்ணம் உள்ளது.  ஆனால் இந்த இடுக்கை நமது சமூக அமைப்பும் அது ஒரு பள்ளி மாணவனின் மனதில் வேரூன்றச் செய்யும் எண்ணங்களையும் அதன் வீரியத்தையும் பற்றியது. 

பரீச்சையில் தோல்வி அடைந்தவனைப் புழுவைப் போல பார்கின்றனர்.  இங்கிருந்து ஆரம்பமாகும் இந்த வெற்றுப் பார்வை அந்த மானவனுடனே வளர்ந்து வேரூன்றி கிளைப் பரப்புகிறது.  ஒரு வித தாழ்வு மனப்பான்மையில் அந்த மாணவனைத் தள்ளி, அவனின் தனித்தன்மையையும், வாழ்க்கையின் மீதான அவனின் நம்பிக்கையையும் குலைத்து, குதறிப் போட்டுவிடுகிறது.

கல்வி செல்வம்

நடுத்தர மற்றும் அதற்க்கு கீழுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பைத் தந்தால் அது அவர்களுக்கு மிகப் பெரிய சொத்து என்று நினைக்கிறார்கள்.  படிப்பு ஒரு ஊன்றுகோல்தான், ஆனால் இந்த நடுத்தர வர்க்கம் அதை வைத்து தங்கள் பிள்ளைகளை மந்திரவாதிப் போல் வித்தைக் காட்டச் சொல்லுகிறது.  படிப்பு இவர்களால் ஒரு அட்சயப் பாத்திரமாய் பார்க்கப் படுகிறது.  அதற்காக அவர்கள் தங்கள் சக்திக்கு, தகுதிக்கு மீறி செலவுகளைச் செய்யவும் தயங்குவதில்லை.  இந்த அதீத செலவுகள் அவர்களை நெருக்கும்போது அது பிள்ளைகளின் மேல் வேண்டாத வசவுளை உதிர்த்து அவர்களின் நடைமுறை சுழற்சியை எதிர்திர்த்திசையிலோ எடக்கு மடக்காகவோ சுழலச் செய்கிறது.  

தனியார் பள்ளிகளின் கொள்ளைகள்

தனியார் பள்ளிகள், பிள்ளைகளை ஒரு பொருளாகவே பார்க்கிறது.  அவர்களின் கணக்கில் எல்லா உருப்படிகளும் தேறிவிட வேண்டும் அப்பொழுதுதான் அடுத்த அடுத்த வருடங்களில் தங்களின் கட்டணத்தையும் உருப்படிகளின் எண்ணிக்கையையும் ஏற்றிக் கொள்ள முடியும்.  இந்த வியாபார நோக்கில் பிள்ளைகளின் வாழ்வாதாரம் நசுக்கப் படுகின்றது.  அதைப் பற்றி அவர்களுக்கென்ன கவலை, தங்கள் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றால் போதும்.

எந்த பள்ளியிலும் விளையாட்டு நேரம் சரியாகப் பகுக்கப் படவில்லை.  இந்த வயதில்தான் விளையாடவும் வேண்டும் ஆனால் இது எங்குமே வலியுறுத்தப்படவில்லை.  எல்லா பள்ளிகளும் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடத்தையும், பதினோராம் வகுப்பிலேயே பன்னிரண்டாவது வகுப்பின் பாடத்தையும் நடத்தி பிள்ளைகளுக்கு மோலும் அழுத்தத்தை கொடுக்கின்றனர்.

அரசாங்கத்தின் ஏதேச்சதிகார போக்கு

மருத்துவம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவைதான் ஒரு நல்ல மக்கள் நல அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும்.  இந்த மூன்றும் முறையாக வழங்காத நாட்டில் நல்ல குடிமக்கள் உருவாக மாட்டார்கள் என்பது திண்ணம்.  'என்னைப் பற்றி கவலைப் படாத நாட்டுக்கு நான் ஏன் செய்யவேண்டும்' என்ற எண்ணத்தை நாமே வலிந்து மாணவர்கள் மேல் திணிக்கின்றோம்.  இங்கே கண்ணைப் பறித்து கலர் டிவியும், கரண்டைப் புடுங்கி கிரைண்டர், மிக்சியும் தருகிறார்கள்.  அதையும் நாம் வரிசையில் நின்று வாய் பொத்தி வாங்கிச் செல்வோம், கொஞ்சமும் லஜ்ஜையே இன்றி. 

சமூகத்தின் சடுகுடு

ஊடகங்களும் தங்கள் பங்குக்கு நகைச்சுவை வாரம் தலைமேல் பாரம், வெல்லுங்கள் ஒரு கோடி, ஐ பி எல் என்று கலந்து கட்டி அடிக்கிறது.  கொஞ்சம் சமூக அக்கறையோடு யோசிப்பார்கலேயாயின்.... அவர்கள் இவை எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுத்து, மாணவர்கள் படிக்க வகை ஏற்படுத்தித் தருவார்கள்.

ஆனால் ஊடகங்கள் கடந்த ஆண்டில் முதலாவது வந்தவரின் பேட்டி, ஏதாவது கல்வியியலாளர்களின் வழிகாட்டுதல், இதற்குப் பிறகு என்ன படிக்கலாம் போன்ற ஒரு சில வற்றைப் போட்டு தங்கள் கடமையை முடித்துக் கொள்கின்றன.

இவை எல்லாவற்றையும் தாண்டி வெற்றி பெறுவதென்பது மிக மிகச் சிரமமே!!, ஆனால் சிலர் வெல்கிறார்கள்.  இங்கே நாம் அவர்களைப் பற்றி பார்க்கவில்லை.  ஏதோ ஒரு பாதிப்பில் தேர்வில் சறுக்குபர்வர்கலையே நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.  அவர்களின் நிலை பாவம் சமூகம் அவர்களைப் பார்க்கும் பார்வையே வேறு மாதிரியாக இருக்கிறது.  "என் பைய்யன் அதில் இத்தனை மார்க்கு, இதில் இத்தனை மார்க்கு" என்று மார்தட்டிப் பெருமை படும் பெற்றவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த பிஞ்சுகளை மலடாக்கிச் செல்லுகிறார்கள்.

படிப்பில் தொல்வியுருபவன் வாழ்க்கையே அஸ்தமித்து போய்விட்டதாக ஒரு மாயையை உருவாக்கி இருக்கிறோம்.  அதை முதலில் உடைத்தெறிய வேண்டும் ஏதோ ஒரு காரணத்தால் தொல்வியுருபவனை தேற்றி, நீயும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்று ஆறுதல் சொல்லி திரும்ப முயற்சித்து ஜெயிக்க.... பெற்றோரும், நண்பர்களும், உற்றாரும் உதவவேண்டும்.  இல்லையேல் இது அப்படியே படிமை நிலையாகி, நாளை வளரும் மொட்டுகளை அமுக்கிவிடும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.  படிப்பும் வாழ்க்கையில் ஜெயிக்க முக்கியம் ஆனால் அது மட்டுமே நம் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்பதை இவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இது எல்லா பக்கமிருந்தும் நடை பெறவேண்டும்.  பெற்றோர், பள்ளிகள், ஆசிரியர் மற்றும் சமுதாய அணுகுமுறை ஆகிய தளங்களில் இருந்து இன்றே நடைபெறவேண்டும்.  இல்லையேல் நாம் நம் எதிர்கால சந்ததிக்கு தீங்கிழைத்ததாக நாளைக்கு வரலாறு பதியப் படலாம்.



;

கடவுளே நீ என; கண்டுணர்ந்தவன் நான்....!!!




என் உலகம் உதித்தது
உன் உறவைப் பற்றி;
என் வாழ்க்கை முழுதும்,
வருவேன் உன்னைச் சுற்றி.

ஊர் பல சுற்றி,
உணவு பல உண்டாலும்,
உன் உதிரத்தால் 'பால்'ஆன
சுவைக்கேது ஈடு!!

மஞ்சனைகளும், பஞ்சனைகளும்
பல ரகத்தில் உண்டு;
உன் மடி தரும் சுகம் - அது
கடந்திடும் பல யுகம்.

காப்பியங்களும், காவியங்களும்
தேடித், தேடி வாசித்தேன்.....
உன் ஒற்றை வரி,
கடிதம் போல்....
ஒன்றையும் காணேன்

இசைக்கு ராஜா பலர்
இங்கே உளர்.
"ஏய்.......ய் ராஜா...." என்று
நீ என்னை அழைக்கையில்.....
அதற்க்கேது நிகர்.

நோய் பிணி நீங்க
வாய் வழி மருந்து நூறு
நீ தரும் இஞ்சிச் சாறு;
அதை ஓட்டிடும் தூர.

தொலைவில் இருந்தால்,
தொடர்பு வழி கோடி.
உன் தொப்புள்கோடி ஒன்றுதான்;
இதுக்கெல்லாம் முன்னோடி.

திரைகடலோடி நான்
சேர்த்தைவைகள் துச்சம்.
உன் புன்னைகைதானே,
இதிலெல்லாம் உச்சம்!!!

கடவுளையே எனக்கு,
காட்டியவள் நீ!;
கடவுளே நீ என;
கண்டுணர்ந்தவன் நான்....!!!
;

அரவான் என் பார்வை

வேம்பூர் என்னும் பெயர் ஏற்கனவே 'எஸ்ரா'வின் "நெடுங்குருதி" என்னும் நாவலில் எடுத்தாண்ட ஊருதான். அந்த நாவலில் அந்த ஊரின் வெம்மையையும், அம்மக்களின் வாழ்வையும் கதையோட்டத்திலேயே சொல்லியிருப்பார் 'எஸ்ரா'. கள்ளர்களின் வாழ்வியலைப் பதிவு செய்தது பாராட்டத்தக்கது. எல்லா புராண படங்களும் ராஜாக்களின் வாழ்க்கையே கொண்டிருக்கவேண்டும் என்ற பழம் சினிமா விதியை அனாயாசமாக உடைத்தெரிந்ததற்கு வசந்த பாலனை மனந்திறந்து பாராட்டலாம்.


பசுபதி மற்றும் ஆதியின் நடிப்பு பெரிய பலம் அந்த உடற்கட்டும் கருந்தேகமும் நம் முன்னோர்களை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். ஆதி தன் வரலாற்றில் பதிக்க வேண்டிய பதிவு. பசுபதி 'ஏன்னா நடிப்புடா..?' தமிழ் சினிமா சரியாக பயன் படுத்தாத நடிகர்களில் பசுபதியும் ஒருவர் என்பதை அரவானுக்கு பிறகு அடித்துக் கூறலாம்.


திரு சு.வெங்கடேசனின் சமீபத்திய சரித்திர நாவலான "காவல் கோட்டம்" என்ற நாவலில் வரும் ஒரு பகுதியை கொண்டு இந்த படம் வடிவமைத்ருப்பதாக அறிகிறோம். படத்திற்கு வசனமும் கதையும் இவரே.

"அறுத்துதான் கொல்லணும்னு இல்ல வெதச்சும் கொள்ளலாம்" போன்ற வசனம் கவனத்தை ஈர்க்கின்றன.

சரித்திரப் படம் அதிலும் ஒரு சமூகத்தைச் சொல்லும் படம் என்பதால் வட்டார வழக்குகள் அதிகம் எடுத்தாண்டிருக்கிறார்கள். அதில்தான் சிக்கலே தமிழுக்கே சப்டைட்டில் போடவேண்டிய அவசியம் இருக்கிறது.


கலை இயக்குனர், ஒளிப்பதிவாளரின் திறமை படமெங்கும் மிளிர்கிறது. இசையமைப்பாளர் கார்த்திக் (பின்னணிப் பாடகர்) பாடல்களில் தெரியும் அளவுக்கு பின்னணி இசையில் தெரியவில்லை முதல் படமே சரித்திரப் பின்னணி கொண்ட படமென்பதால் நிச்சயம் நிறைய உழைத்திருக்கிறார் ஆனால் பின்னணி இசையில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம். அடுத்தடுத்த படங்களில் இதனை வெகு எளிதாக எட்டிப் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.


நேர்த்தியாக நெய்யப்பட்ட படமென்றாலும் சில சினிமாத்தனங்கள் தவிர்த்திருக்கலாம், சிலுவை சுமப்பதுபோல உள்ள கடைசி காட்சி, நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் பூப்பதர்க்கான தருனகளை சரிவர சொல்லாதது என சில இருந்தாலும் இது தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு கலைப் படைப்பு என்பதை மறுப்பதற்கில்லை.


ஊடகங்களும், வலைப்பூக்களும் படம் ஆஹா ஓஹோ என்று புகழ்கின்றன ஆனால் இது அடித்தட்டு மக்களை போயிச் சேருமா என்பது சந்தேகமே. பல வசனங்கள் புரியவில்லை என்னும் பேச்சு பரவலாக கேட்கிறது. இலக்கிய தரத்தில் ஒரு படம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் இது பாமரனையும் சென்று சேர வேண்டும் என்பதே என் அவா.
;

புரச்சி 2020(REVELOUTION 2020) - காதல், கரப்ஷன், கனவு



சேத்தன் பகத் எனக்கு அறிமுகமானது அவருடைய 'TWO STATES' நாவலில்தான். அது அவர் தன் தமிழ் நாட்டு மனைவியை எப்படி கைப்பிடித்தார் என்பதைப் பற்றிய கதை. அந்நேரத்தில் 'THREE IDIOTS' வந்தது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. இதுவும் அவரின் நாவலைத் தழுவி எடுக்கப் பட்டப் படம்தான் என்று அறிய முடிந்தது.

உடன் அவரது 'TWO STATES' நாவலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன் ஈர்ப்புவிசை உள்ள எழுத்து நடை, பின்னர் அவரது முதல் நாவலான 'FIVE POINT SOMEONE' (THREE IDIOTS) வாங்கிப்ப் படித்தேன் அதன் பின்னர் அவரது மற்ற நாவல்களான ONE NIGHT @ CALL CENTRE, THREE MISTAKES OF MY LIFE. இதில் ONE NIGHT @ CALL CENTREம் ஹிந்தி சினிமாவாக வந்தது.

மெல்லிய நகைச்சுவை இழையோடும் எழுத்து நடை, எல்லா கதைகளிலும் வரும் நாயகிகள் குறைந்த பட்சம் WINEஆவது சாப்பிடுவார்கள், திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வார்கள், இவை வடஇந்திய காலாச்சார வழியாகவும் இருக்கலாம், பாய் NEXT DOOR கதை மாந்தர்களை வைத்து கதை சொல்லல் என்று இன்றைய இளைஞ்சனர்களின் நாடித்துடிப்பு எழுத்தாளராய் பரிணமித்துள்ளார்.

இந்த REVELOUTION 2020 வெளியாவதற்கு முன்னமே ஐந்து லட்சம் பிரதிகள் முன் பதிவு செய்யப் பட்டன. மிகவும் ஆவலைத் தூண்டிய நாவல் எடுத்த 42 மணி நேரத்தில் என் கையை விட்டு அகலாமல் அதனுடனேயே மூழ்கி படிக்க வைத்தது. அவரது மற்றைய கதைகளைப் போலவே இதிலும் சினிமாத்தனமான ஒரு முடிவுதான், ஆனால் மிகத் தகுதியான முடிவு என நம்மை நினைக்க வைத்திருக்கிறார்.

இதுவும் கண்டிப்பாக ஒரு சினிமாவாக வெளிவரத் தகுதியுள்ள ஒரு கதைதான் கண்டிப்பாக இதை இன்றைய இளம் ஹிந்தி ஹீரோ யாராவது நடிக்க வெளிவருவதை எதிர்பார்க்கலாம். தமிழில் தனுஷ் மற்றும் சிம்பு செய்வார்களேயானால் படம் கண்டிப்பாக சூப்பர் டுப்பர் ஹிட். தனுஷ் இந்த கதையில் வரும் கோபாலாகவும் சிம்பு ராகவ் ஆகவும் நடித்தால் நன்றாக இருக்கும். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்தால் எல்லா மொழிகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து இதில் தனுஷும் சிம்புவும் சேர்ந்து நடிப்பது நடக்காத காரியம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே அதனால் சிம்பு பதில் ஜீவா நடித்தால் நன்றாக இருக்கும்.

கதை என்னவென்றால் வழக்கமான முக்கோணக் காதல் கதைதான். கோபால், ஆர்த்தி மற்றும் ராகவ் மூவரும் சிறுவயது முதலே நண்பர்கள், வளர்கையில் வாழ்க்கை அவர்களை எப்படி தன் போக்கில் இழுத்துச் சென்று நிறுத்துகிறது என்பதை 2௯௫ பக்கங்களை நிரப்பி சொல்லி இருக்கிறார்.
;

குப்ப மேட்டரு.......

சேத்தன் பாகத்தின் REVOLUTION 2020 படித்துக் கொண்டிருக்கிறேன், மிக நேர்த்தியான கதை சொல்லல். கையில் எடுத்ததும் முடித்துவிட துடிக்கும் ஈர்ப்பு விசை எழுத்து நடையில் சும்மா வெண்ணையில் ஓடும் தேனாய் வார்த்தை கோர்வையுடன், எளிய ஆங்கில நடையில் செல்கிறது. முடித்ததும் அதைப் பற்றி ஒரு பதிவு போட்டு உங்களை எல்லாம் டரியலாக்கும் திட்டம் உண்டு.

முதலில் சேத்தனின் TWO STATESதான் வாங்கிப் படித்தேன், பின்னர் அவரின் மற்ற நாவல்களையும் தேடித் தேடி படிக்க வைத்தார். இன்றைய கால இளைஞசர்களின் நாடித்துடிப்பை தேடித் பிடித்து எழுதுகிறார்.

----------------XXX-----------XXX---------------XXX-----------------------

உள்ளாட்ச்சித் தேர்தல் முடிவும் வந்துவிட்டது இனி இந்த ஆட்சி தன் பாதையில் முழு வேகத்துடன் பயனிக்கலாம்தான் ஆனால் அதற்க்கான அச்சாரத்தைதான் ஒன்னையும் காணோம். அம்மா தன் மீதான சொத்து வழக்கை தீர்க்கவே இப்பொழுது முழு மூச்சுடன் இருப்பார். கூடங்குளம் குப்பைத் தொட்டியில், மூவர் தூக்கு மத்திய அரசிடம், மின் வெட்டு சர்வதேச பிரச்சனையை.

----------------XXX-----------XXX---------------XXX-----------------------

டைரெக்டர் சங்கர் சொன்ன ஏந்திரன் கதையை மறக்காமல் அதனோடையே வாழ்ந்திருப்பார் போல சாருக் ஒரு ஏழு எட்டு காட்சிகள் ஏந்திரனில் வந்ததைப் போலவே இருக்கிறது. ரயில் காட்சி, சிகப்பு மை கெட்ட ஏந்திரன் நீல மை நல்ல ஏந்திரன் போன்ற காட்சிகளை சொல்லலாம். ஆனால் இது ஏந்திரன் அளவுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏதோ விடியோ கேம் பார்பதைப் போன்ற ஒரு உணர்வே ஏற்படுகிறது.

இது குழந்தைகளுக்கான படம் மென்று சொல்வீர்களானால் என் பிள்ளைகள் ரேட்டிங்கில் அதிலும் ஏந்திரனே முந்துகிறான்.......!

தமிழன்னா சும்மாவா.....!!

----------------XXX-----------XXX---------------XXX-----------------------

சமீபத்திய பாடல்களில் ஏழாம் அறிவில் வரும் எம்மா எம்மா காதல் பொன்னம்மா மயக்குகிறது. ஹரிஸ் எப்போதும் ஒரு ௫/௬ மெட்டுகளையே வைத்து ஓட்டுகிறார் என்பது என் எண்ணம் ஆனால் எப்படியோ எல்லா பாடல்களும் ஹிட் ஆகி விடுகிறது.

----------------XXX-----------XXX---------------XXX-----------------------

கழகம் பிறந்த காலந்தொட்டு இதனை அழிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
துரோகச் சிந்தையினர் தம் சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர். கையிலே காசில்லா போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்.

ஐய்யா ஒரு துணைப் பொதுச் செயலாளரே இவ்வளவு காசு பார்கிறாறேன்றால் அப்ப நீங்க உங்க குடும்ப உறுப்பினர் எவ்வளவு பார்த்திருப்பீங்க. அப்போ நீங்களே கொள்ளை அடிச்சத ஒத்துக்கிறீங்க. நீங்க தாய வச்சி உவமானம் சொன்னதாலே நானும்

தாயைப் போலப் பிள்ளை நூலைப் போல சேலை.....
தலைவர் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி.... ;

தொலைந்து போனவன்

வெட்டியான ஒரு
நாளில்,
கிட்டியது ஓர்
நிழற்படம்

கால்சட்டை வயதில்,
கை கோர்த்து
நிற்கும்,
பெயர் மறந்த நண்பனை

கணிப்பொறி உதவியுடன்
இணையங்களில் தேடுகிறேன்...?
'முகநூலில்' இருப்பானோ...?
'டுவீட்டி'யாய் வருவானோ...?

பள்ளிப் படிப்பை
பாதியில் விட்டவனை,
பரந்த உலகில்
எங்கனம் தேடுவது.....?
;

கலியுக யோகியும், 'தெயவத்திருமகளும்'


இந்த பதிவு யாருக்கும் எதிரானதல்ல, யாருக்கும் கொடி பிடிக்கவும் அல்ல. இது முற்றியும் என் சொந்த கருத்தே.....!!!!!

சமீபத்தில் நான் தெய்வத்திருமகள் பார்த்தேன். என் தாயையும், தந்தையையும் பார்க்க வைக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல் எழுந்தது. (இங்கே அவர்கள் இருவருக்கும் ஒரு சின்ன அறிமுகம்)

அம்மா சீரியலே கதி என்றிருப்பவள், அவளுக்கு 'மாதவி' க்கோ, 'செல்வி' க்கோ ஒன்றென்றால் கூட தாங்க முடியாது, அவ்வளவு இளகிய மனம் படைத்தவள். சீரியலுக்கு அடுத்து பிடித்தது வினாடி வினா போன்ற கேள்வி பதில், தன் நினைவாற்றளால் படித்தவர்களையே 'அட' போடா வைக்கும் திறமை வாய்க்கப் பெற்றவள். தன் உடன் பிறப்புகளாகட்டும், என் தந்தையின் உடன் பிறப்புகளாகட்டும் யாருக்கும் பார பட்சமின்றி உதவுபவள். அவ்வாறு வுதவி செய்து... அவர்கள் எங்களை உதாசீனப் படுத்தும் போது, மனம் நொந்து புலம்புபவள். அனால் அவர்களே மறுமுறை எதாவது ஒன்றென்று கலங்கும்போது.... ஓடோடிச் சென்று உதவுவாள். இது வாடிக்கை.

என் தந்தை ஒரு கலியுக யோகி, எதிலும் ஒரு பற்றுதளில்லாமல் தன் போக்கில் வாழ்பவர். அதற்காக அவர் ஆசையே அற்றவர் என்ற முடிவுக்கு வர வேண்டாம். அவரது செய்கைகள்தான் அப்படி, மற்றபடி உலக இயல்புக்கு தன்னை சுற்ற வைப்பவர். அப்படி பட்டவர் இதுவரை பார்த்த படங்களை விரல் விடாமலே எண்ணி விடலாம். மொத்தமே மூன்றோ நான்கோதான். தேவர்மகன், மாயாண்டி குடும்பத்தார் அதன் பிறகு இப்பொழுது தெய்வத்திருமகள்.

தேவர்மகன் டிக்கெட் வாங்கி இரண்டாவது முறை நான் பார்க்கப் போகிறேன் என்று சொன்னதில்தான் அவர் பார்க்கவே சம்மதித்தார். எதுக்கு நீ இரண்டாவது முறை பார்க்கவேண்டும் நானே போகிறேன் என்று சொன்னார். ஆனால் இந்த மாயாண்டி குடும்பத்தாரை பார்க்க அவரின் ஆவலை நானும் என் தம்பிகளும் தூண்டினோம். இது கிட்ட தட்ட எங்கள் குடும்ப கதை போன்றே... நாங்களும் நாலு ஆண்களுக்கு ஒரு பெண், மேலும் எங்கள் சித்தப்பா குடும்பத்துக்கும் எங்களுக்கும் பிணக்கு வேறு.

நானும் என் தம்பிகளுமிந்த கதையின் சாரம்சத்தை சொல்லி என் அப்பாவை பார்க்க வைத்தோம். தியேட்டரில் சில காட்சிகளுக்கு அவர் கதறி அழுததை இன்றும் எங்களால் மறக்க முடியாது. அவர் அன்றாடம் உபயோகிக்கும் ஒரு வசனம் படத்திலும் இடம் பெற்றிருந்ததை கண்ணீருடன் ரசித்தார். அந்த வசனம் 'இன்னொரு முறையா நாம இங்கே வந்து பிறக்கப் போறோம்'. சித்தியின் குரூர குணத்தினால் பிரிந்த போது மிகவும் மனம் உடைந்தவர். தன் பால்ய நாட்களில் தம்பியுடன் சுற்றியதை சொல்லி சொல்லி மாய்ந்து போனவர்.

மாயாண்டி குடும்பத்தை அவர் தன் குடும்பமாகவே பார்த்தார் அதற்குப் பிறகு அவர் பார்த்த படம் தெய்வத்திருமகள். நாங்கள் இரவு காட்சிக்குப் போனோம். படம் முடித்து வீடு வந்ததும், என் தங்கைக்கு தொலைப்பேசி.... இரவு என்பதையும் மறந்து நீண்ட நேரம் பேசினார். அப்படி ஒரு தாக்கம் அவர் மனதில் இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் 'தந்தை உள்ளத்தை' இந்த படம் மீட்டுத் தந்ததென்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு திரைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு நிலையில் தன்னையும் தன் தன்மைக்குப் பொருந்திப் போகிற ஒரு பாத்திரத்தில் இணைத்து அந்தப் படத்துடன் பயணிக்கத் தொடங்குகிறான். அப்படி ஒன்றிப் பார்ப்பது எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. அவ்வாறு படத்துடன் ஒன்ற மொழி ஒரு இன்றியமையாத காரணம்.

இதே தெய்வத்திருமகள் ஆங்கில சாயலான (தாழுவலில்லை) 'I AM SAM' என் வீட்டில் போட்ட போது.... என் அம்மாவும், அப்பாவும், கரகாட்டக்காரன் கவுண்டமணி தவில் வாசிப்பில் தூங்கும் செந்தில் போல ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

ஒரு படத்தின் தாக்கத்தால்... அதை நம் மொழிக்கும், கலாசாரத்துக்கும் பொருந்திப் போகிறா மாதிரி, மாற்றி எடுப்பதில் தவறில்லை என்றே எனக்குப் படுகிறது. இதுக்கும் சில ஆயத்தங்களும், முன் முயற்சிகளும் தேவை என்றே நினைக்கிறேன். அந்த அனைத்தும், இந்த தெய்வத்திருமகள் குழு செய்திருக்கிறது. இதற்க்கு முன் எந்தனையோ படங்கள் இதுபோல் தாக்கத்திலும், தழுவலிலும் வந்திருக்கிறது, பல அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது, சில தோல்வியைத் தழுவியும் இருக்கிறது.

ஏற்கனவே இருக்கும் ஒரு சிலையின் வடிவத்தை சில ஜாலக்குகளை செய்து நம் ரசனைக்கேற்ப வடிவமைப்பதைப் போன்றே இந்த வேற்று மொழி தாக்கத் திரைப்படங்களும். அதற்காக கற்பனை வறச்சி, கலைத் திருட்டு என்று சொல்லிகொள்ளத் தேவை இல்லை. ஒரு படம் எப்படி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிரதென்பதை வைத்துத்தான் அதன் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப் படுகிறது. அந்த விதத்தில் இந்த படமும் ஒரு வெற்றிப் படமே.

மொத்தத்தில் படம் எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது...........
;
 

Blogger