Pages

புலி வாலைப் பிடித்து.....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
படித்து முடித்து வேலை தேடி ஆலாய் பறந்து, இன்று ஆலைக் கரும்பாய் சக்கையாவது வரை........

நடுத்தர மற்றும் அதற்க்கு கீழே உள்ள வர்க வாழிகளின் தலையாய முதலீடே படிப்புதான் 'தான்' வண்டி தள்ளியாவது தன பிள்ளைகளைப் படிக்க வைப்பது என்பது இன்று எல்லா சாமானிய பெற்றோரின் கனவாக இருக்கிறது. முதலீடு எனும்போதே அதில் லாப நோக்கும் இருக்கும்தானே. கை பிள்ளையாய் இருக்கும்போதே "கண்ணு நீ பெரியவனானா என்னவாவே....?" டாக்டர், இன்ஜீனியர் என்பன போன்ற பதிலே எதிர்காலக் கனவின் உரம்தானே.

இந்தக் கனவென்பது பெற்றோர்களின் மனக்கண்ணிலிருந்து பிள்ளைகளின் அகக் கண்ணுக்கு வீசிஎறியப்படுகிறது. பிள்ளைளும் புத்தகச் சுமையினூடே இக்கனவையும் சுமக்கிறார்கள். படிப்பு முடித்ததும் வேலை தேடும் காண்டம் ஆரம்பிக்கிறது....
எலி வாலைப் பிடிக்கும்போதே.... ஏரோப்ளேன் ஆசை ரெக்கை கெட்டுகிறது. ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு தாவி, தவ்வி, தவழ்ந்து எப்பாடு பட்டாகிலும் தன்நிலை உயர தவம் கிடக்கிறோம்.

இதில் பிடித்தது, பிடிக்காதது நம் கொள்கைக்கு ஏற்றதா..? எனப் பாகுபாடு இல்லாமல் கடனே என்று கடமையைச் செய்கிறோம். கூழ கும்பிடு, ஊளைச் சதை கணக்கில்லாமல் வரவில் இருக்கு. கண்ணியம், கவுரவம் கண்ணிமைக்கும் நேரத்தில் தொலைந்து போகுது. உண்டு களித்திடவும், உடுத்து கிழித்திடவும், உறங்கி விழித்திடவும் நேரமில்லை.

இந்த ஓட்டத்தில் பசிக்கும் ருசிக்கும் இடையில்.... பிஸியில்(Busy) உணவு. மனைவி இருக்கவேண்டிய இடத்தில் இன்று 'மடி'கணினி. எல்லா உரையாடல்களும் 'செல்'லால் நிகழ்கிறது.
நேரம், தூரம் தெரியாது ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதில் இடையிடையே அடுத்தவர் மீதும் கவனச் சிதறல்கள். எலி எனப் பிடித்தது, இன்று புலி வாலாய் உருமாறி தன் போக்குக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.

எலியாய் இருக்கும்போது அது நம் காலைச் சுற்றியே வருகிறது. நம் தேவைகளும், ஆசையும் விரிவடையும்போது அதற்கேற்ப எலியும் பரிணமித்து கூடுவிட்டு கூடுதாவி, நம்மை யறியாமலே புலியென மாறி ஆட்கொள்கிறது. வேலை ஒரு சமுதாய குறியீடு, நான் இந்த நிறுவனத்தில், இன்ன வேலை செய்கிறேன் என்பதை வைத்துதான் சமூகம் என்னை அளக்கிறது. அத்யாவசிய தேவைக்காக வேலை செய்தது போய்.... இன்று அத்யாவசியமே அனாவசியமாக போய்விட்டது.

விரும்பி ஏற்றதுதான் இன்று நம்மை விழுங்கி ஏப்பம் விடுகிறது.

வாழ்க்கைக்கு தொழில் என்பதொழிந்து, இன்று தொழிலே எல்லோருக்கும் வாழ்க்கையாய்..... ;

1 comment:

Anonymous said...

Well said :)

 

Blogger