உங்கள் சீட் பெல்ட்டை இறுக்கிக் கொள்ளுங்கள். நாம் காலத்தை விட வேகமாக பின்னோக்கிச் செல்வோம். அப்பொழுது கதைசொல்லிக்கு அகவை மூன்று, அர்ணாகயிறு கூட இல்லாமல் கிங்கினி மங்கினி என்று சுற்றிக்கொண்டிருந்தான்.
என்
தந்தை வருவதற்கு முன்பே இங்கே அவரது அக்கா, தங்கை இருவரும் வாக்கப் பட்டிருந்தனர். அதுவுமில்லாமல் அம்மாவின் உறவினர்களும் சென்னையில் இருந்தனர். அடிப்படையில் நெசவாளியான அப்பா அவரின் சித்தப்பாவின் பேருதவியால் மின்சார துறையில் தினக்கூலியாக பள்ளம் தோண்டும் வேலைக்கு சேர்ந்தார். இன்றும் எங்கள் குடும்பம் அவர்கள் குடும்பத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது.
முதலில்
நாங்கள் மைலாப்பூரில் அப்பாவின் அத்தை வீட்டில் வாடகைக்கு இருந்தோம், (இந்த வீட்டின் நினைவுகள்
அம்மா சொல்லக் கேட்டது) மயிலாப்பூர் பஜார் சாலையை ஒட்டி இருந்த முட்டுச் சந்தில் அந்த வீடு இருந்தது. இந்த சாலை கச்சேரி
சாலையிலிருந்து, திருவல்லிக்கேணி
நெடுஞ்சாலை வரை நீளும். இங்கு
ஒரு கடையில் மெது பக்கோடா போடுவார்கள்
இன்றும் அந்த கடை இருக்கிறது
தரமான மெதுபக்கோடா. இந்த சாலையில்தான் மார்க்கெட்டும்
இருக்கிறது.
அங்கிருந்து
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும்… உறவினர்களை காண 'ஐஸ் ஹவுஸு’க்கு
நடந்தே வருவோம். நானும் தம்பியும் அப்பாவின் மிதிவண்டியில் உட்கார்ந்துக் கொள்ள, அப்பா வண்டியை தள்ளிக்கொண்டே வருவாராம். என்றாவது அத்திப் பூக்கும் நாளில்.... இரவில் 'ரத்னா கபே'வில் உணவருந்திவிட்டு
நடந்தே வீடடைவோம். பேருந்தென்றாலும் அது ‘அம்பட்ட வாராவதி’
(Hamilton Bridge) இறங்கி
இடதுபுறம் திரும்பி நின்றுவிடும். (அப்படியே கடற்கரைசாலை வந்து திரும்பவும் ஐஸ் ஹவுஸ் வரும்).
பேருந்து கட்டணம் அறுபது பைசா. அம்பட்ட வாராவதி முழுவதுமே அதைச் சுற்றியிருப்போருக்கு திறந்தவெளிக் கழிவறை, நாங்கள் அப்பகுதியை கடக்கும்போதெல்லாம்… இலவசக் கழிவறைக் காட்சிகள் விருந்தாகும். இன்று சிட்டி சென்டர் இருக்குமிடம் மிகப்பெரிய மாட்டுக் கொட்டகையாக இருந்தது. எதிரே ஒரு விறகுக்கடை இருந்தது.
வீட்டின்
எதிரில் ஒரு பேட்டை இருந்தது
அதில் கிட்டத்தட்ட பதினைந்து ஒண்டுக் குடித்தனங்கள் இருந்தது. அதில் ஒரு ஆயா ஆப்பம்
சுட்டு விற்கும், கைராசி என்று சொல்லி அடியேனுக்குதான் எப்பொழுதுமே பூர்ணகும்ப முதல் ஆப்பம், நான் போகவில்லை என்றாலும்
எனக்காகக் காத்திருந்து, பலவிதங்களில் தாஜா செய்து கூட்டிச்
செல்வார்கள். ஒரு நாள் அம்மாவிடம்
கோபித்துக் கொண்டு கழிவறையில் சென்று பூட்டிக் கொண்டு வெளிவர முடியாமல் மாட்டிக்கொண்டது மங்கலாக நினைவிருக்கிறது. அங்கிருக்கும் எந்த வீட்டுக்குள்ளும் நான்
எந்த நேரத்திலும், அத்துமீறி நுழைந்து வேறொரு வீட்டின் வழியே வெளிவரும் சுதந்திரம் பெற்றவனாய் இருந்தேன். அவ்வீட்டின் பெண்களுக்கு நான் உயிருள்ள பொம்மை.
நான் ஊரானால் சீராட்டி வளர்க்கப்பட்ட பிள்ளை.