இந்த பதிவு யாருக்கும் எதிரானதல்ல, யாருக்கும் கொடி பிடிக்கவும் அல்ல. இது முற்றியும் என் சொந்த கருத்தே.....!!!!!
சமீபத்தில் நான் தெய்வத்திருமகள் பார்த்தேன். என் தாயையும், தந்தையையும் பார்க்க வைக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல் எழுந்தது. (இங்கே அவர்கள் இருவருக்கும் ஒரு சின்ன அறிமுகம்)
அம்மா சீரியலே கதி என்றிருப்பவள், அவளுக்கு 'மாதவி' க்கோ, 'செல்வி' க்கோ ஒன்றென்றால் கூட தாங்க முடியாது, அவ்வளவு இளகிய மனம் படைத்தவள். சீரியலுக்கு அடுத்து பிடித்தது வினாடி வினா போன்ற கேள்வி பதில், தன் நினைவாற்றளால் படித்தவர்களையே 'அட' போடா வைக்கும் திறமை வாய்க்கப் பெற்றவள். தன் உடன் பிறப்புகளாகட்டும், என் தந்தையின் உடன் பிறப்புகளாகட்டும் யாருக்கும் பார பட்சமின்றி உதவுபவள். அவ்வாறு வுதவி செய்து... அவர்கள் எங்களை உதாசீனப் படுத்தும் போது, மனம் நொந்து புலம்புபவள். அனால் அவர்களே மறுமுறை எதாவது ஒன்றென்று கலங்கும்போது.... ஓடோடிச் சென்று உதவுவாள். இது வாடிக்கை.
என் தந்தை ஒரு கலியுக யோகி, எதிலும் ஒரு பற்றுதளில்லாமல் தன் போக்கில் வாழ்பவர். அதற்காக அவர் ஆசையே அற்றவர் என்ற முடிவுக்கு வர வேண்டாம். அவரது செய்கைகள்தான் அப்படி, மற்றபடி உலக இயல்புக்கு தன்னை சுற்ற வைப்பவர். அப்படி பட்டவர் இதுவரை பார்த்த படங்களை விரல் விடாமலே எண்ணி விடலாம். மொத்தமே மூன்றோ நான்கோதான். தேவர்மகன், மாயாண்டி குடும்பத்தார் அதன் பிறகு இப்பொழுது தெய்வத்திருமகள்.
தேவர்மகன் டிக்கெட் வாங்கி இரண்டாவது முறை நான் பார்க்கப் போகிறேன் என்று சொன்னதில்தான் அவர் பார்க்கவே சம்மதித்தார். எதுக்கு நீ இரண்டாவது முறை பார்க்கவேண்டும் நானே போகிறேன் என்று சொன்னார். ஆனால் இந்த மாயாண்டி குடும்பத்தாரை பார்க்க அவரின் ஆவலை நானும் என் தம்பிகளும் தூண்டினோம். இது கிட்ட தட்ட எங்கள் குடும்ப கதை போன்றே... நாங்களும் நாலு ஆண்களுக்கு ஒரு பெண், மேலும் எங்கள் சித்தப்பா குடும்பத்துக்கும் எங்களுக்கும் பிணக்கு வேறு.
நானும் என் தம்பிகளுமிந்த கதையின் சாரம்சத்தை சொல்லி என் அப்பாவை பார்க்க வைத்தோம். தியேட்டரில் சில காட்சிகளுக்கு அவர் கதறி அழுததை இன்றும் எங்களால் மறக்க முடியாது. அவர் அன்றாடம் உபயோகிக்கும் ஒரு வசனம் படத்திலும் இடம் பெற்றிருந்ததை கண்ணீருடன் ரசித்தார். அந்த வசனம் 'இன்னொரு முறையா நாம இங்கே வந்து பிறக்கப் போறோம்'. சித்தியின் குரூர குணத்தினால் பிரிந்த போது மிகவும் மனம் உடைந்தவர். தன் பால்ய நாட்களில் தம்பியுடன் சுற்றியதை சொல்லி சொல்லி மாய்ந்து போனவர்.
மாயாண்டி குடும்பத்தை அவர் தன் குடும்பமாகவே பார்த்தார் அதற்குப் பிறகு அவர் பார்த்த படம் தெய்வத்திருமகள். நாங்கள் இரவு காட்சிக்குப் போனோம். படம் முடித்து வீடு வந்ததும், என் தங்கைக்கு தொலைப்பேசி.... இரவு என்பதையும் மறந்து நீண்ட நேரம் பேசினார். அப்படி ஒரு தாக்கம் அவர் மனதில் இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் 'தந்தை உள்ளத்தை' இந்த படம் மீட்டுத் தந்ததென்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு திரைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு நிலையில் தன்னையும் தன் தன்மைக்குப் பொருந்திப் போகிற ஒரு பாத்திரத்தில் இணைத்து அந்தப் படத்துடன் பயணிக்கத் தொடங்குகிறான். அப்படி ஒன்றிப் பார்ப்பது எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. அவ்வாறு படத்துடன் ஒன்ற மொழி ஒரு இன்றியமையாத காரணம்.
இதே தெய்வத்திருமகள் ஆங்கில சாயலான (தாழுவலில்லை) 'I AM SAM' என் வீட்டில் போட்ட போது.... என் அம்மாவும், அப்பாவும், கரகாட்டக்காரன் கவுண்டமணி தவில் வாசிப்பில் தூங்கும் செந்தில் போல ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.
ஒரு படத்தின் தாக்கத்தால்... அதை நம் மொழிக்கும், கலாசாரத்துக்கும் பொருந்திப் போகிறா மாதிரி, மாற்றி எடுப்பதில் தவறில்லை என்றே எனக்குப் படுகிறது. இதுக்கும் சில ஆயத்தங்களும், முன் முயற்சிகளும் தேவை என்றே நினைக்கிறேன். அந்த அனைத்தும், இந்த தெய்வத்திருமகள் குழு செய்திருக்கிறது. இதற்க்கு முன் எந்தனையோ படங்கள் இதுபோல் தாக்கத்திலும், தழுவலிலும் வந்திருக்கிறது, பல அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது, சில தோல்வியைத் தழுவியும் இருக்கிறது.
ஏற்கனவே இருக்கும் ஒரு சிலையின் வடிவத்தை சில ஜாலக்குகளை செய்து நம் ரசனைக்கேற்ப வடிவமைப்பதைப் போன்றே இந்த வேற்று மொழி தாக்கத் திரைப்படங்களும். அதற்காக கற்பனை வறச்சி, கலைத் திருட்டு என்று சொல்லிகொள்ளத் தேவை இல்லை. ஒரு படம் எப்படி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிரதென்பதை வைத்துத்தான் அதன் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப் படுகிறது. அந்த விதத்தில் இந்த படமும் ஒரு வெற்றிப் படமே.
மொத்தத்தில் படம் எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது...........
;