Pages

விசாரணை - தொடர்

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
விசாரணைன்னு சொன்ன உடனே ஏதோ கொலை கேசுன்னு நினைச்சிடாதீங்க இது நம்ம கலைஞர் டிவியில ஒளிபரப்பாகிற விசாரணைத் தொடர். பொதுவாகவே மெகா சீரியல் என்றாலே ஜகா வாங்கும் நான், ராஜேஷ்குமார் கதை வசனத்தில் வாரம் ஒரு கதை சொல்லும் இத்தொடரை விரும்பிப் பார்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு குறுந்தொடர்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது இந்த தொடர்.

ராஜேஷ்குமாரின் நாவல்கள் ஒவ்வொன்றும் திகிலானவை, த்ரில்லானவை. நாவல்களை படிக்கும் போது ஏற்படும் திரில்லும், திகிலும் அவை டி.வி.தொடர்களாக தயாரிக்கப்படும் போது காணாமல் போய்விடும். ஆனால் விசாரணை தொடரை இயக்கும் சி.பிரபுவோ ராஜேஷ்குமாரின் நாவல்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுத்து விசாரணை தொடரை அமர்க்களப்படுத்தி வருகிறார். தங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் அதேநேரம் காட்சிப் பிழை இல்லாமல் ரொம்ப லாவகமாக ஒவ்வொரு வாரமும் நகர்த்துகிறார்கள்.

பல தொழில்நுட்ப விஷயங்களையும் ஆங்காங்கே தூவி தன முத்திரையைப் பதிக்கிறார் ராஜேஷ்குமார். சில நேரங்களில் அரசு சார்ந்த ஒத்தூதல்கள் இருந்தாலும் தன் தந்திர கதை சொல்லுதலால் நம்மை தொடரோடு ஒன்றிட வைக்கிறார். அழுகாச்சி மெகா தொல்லைகளின் எல்லைக்குள் ஆட்படாமல் ஒரு நல்ல நிகழ்ச்சி இது. ஆனால் சரியான விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்பது இடைவேளையில் தெரிகிறது.

ராஜேஷ்குமார் கதைகளில் துப்பறியும் நிபுணராக வரும் விவேக்கும் அவருடைய மனைவி ரூபலாவும் கடந்த 25 வருடங்களாக வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். விவேக் - ரூபலா கற்பனை பாத்திரங்கள் என்பதை வாசகர்களில் பலர் ஒப்புக்கொள்வது இல்லை. அவர்களுக்கு ராஜேஷ்குமார் கற்பனையாக திருமணம் செய்து வைத்தபோது நூற்றுக்கணக்கான வாசகர்கள் மணியார்டர்கள் மூலமாக `மொய்' பணம் அனுப்பி வைத்தது ஹைலைட்டான விஷயம்.

இது போன்று நாவல்களை தொடராக்கும் போது உள்ள பெரிய பிரச்சனையே கதையின் நாயகர்கள்தான். ஒவ்வொருவருக்கும் விவேக்கை மனதுக்குள் பலவாறு கற்பனை செய்து இருப்போம். அது ஒத்துபோகாட்டி கதை எப்படி இருந்தாலும் சலிப்பு தட்டிவிடும்.

ஆனால் முன்பு விவேக்காக வந்த சாக்ஷி சிவாவும் ,சரி இப்பொழுது வருபவரும்(பெயர் தெரியவில்லை) சரி, தங்கள் பாத்திரத்தை சரியாகவே செய்கிறார்கள். அதிலும் விவேக்கின் உதவியாளராக வரும் ஷ்யாம் கணேஷ் நேர்த்தியான நடிப்பு.

எல்லா காலங்களிலும் துப்பறியும் கதைஎன்பது மக்களின் ஈர்ப்புக்குரியது அந்த வகையில் விசாரணை பல இல்லங்களில் தினமும் நடைபெறுகிறது.

;

No comments:

 

Blogger